சிறப்புக் கட்டுரைகள்

பரந்தூரில் நிலத்தின் விலை 50 சதவீதம் வரை சரிந்தது; நிலைமை மாறியது

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடுவதாக முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்தார்.

சென்னை,

விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்டதால் சென்னை பரந்தூரில் நிலத்தின் விலை 50 சதவீதம் வரை சரிந்து தற்போது நிலைமை மாறியது.

நிலத்தின் விலை 200 சதவீதம் உயர்ந்தது

சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சீபுரம் மாவட்டம், பரந்தூரில் அமைக்கப்படும் என்று கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு முன்பு சாதாரண விவசாயப் பகுதியாக இருந்த பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார நிலங்கள் மீது பலரின் கவனம் திரும்பியது. இதனால் ஏக்கருக்கு சுமார் ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை இருந்த விவசாய நிலங்களின் விலை ரூ.18 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை உயர்ந்தது. சில பகுதிகளில் நிலங்களின் மதிப்பு 100 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை அதிகரித்தது.

நிலம் வாங்கும் ஆர்வம் அதிகரிப்பு

குறிப்பாக விமான நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் நிலம் வாங்குவதற்கான ஆர்வம் அதிகரித்ததால், கடந்த ஆண்டு சில பகுதிகளில் சாதாரண லே-அவுட் பிளாட்டுகளின் விலை ஒரு சதுர அடிக்கு ரூ.1,600 முதல் ரூ.1,850 வரை உயர்ந்தது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சிறப்பு வாய்ந்த பகுதிகளில் ஒரு சதுர அடி ரூ.2,200 முதல் ரூ.2,999 வரை விலை உயர்ந்தது.

நிலைமை மாறியது

ஆனால், கடந்த மே மாதம் விஜய் தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பிறகு நிலைமை மாறியது. பரந்தூரில்தான் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைக்கப்படுமா? அல்லது மாற்று இடம் தேர்வு செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்ததால், அதுவரை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலங்களின் விலை உயர்வு அப்படியே தேக்கமடைந்தது. அதாவது, 2022-ம் ஆண்டு விமான நிலைய அறிவிப்பு வெளியானது முதல் வேகமாக உயர்ந்து வந்த நிலங்களின் விலை, புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு உயர்வைத் தொடர முடியாமல் நின்றது.

தமிழக முதல்-அமைச்சர் அறிவிப்பு

இந்த நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடுவதாக முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்தார். இந்த அறிவிப்பு பரந்தூர் நிலச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அங்கு முதலீடு செய்து நிலங்களை வாங்கியவர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். சில நிறுவனங்கள் லே-அவுட் அமைக்கும் திட்டத்துடன் பல ஏக்கர் நிலங்களை வாங்கிய நிலையில், இனி அந்த நிலங்களை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

நிலங்களின் மதிப்பு கடும் வீழ்ச்சி

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு நில புரமோட்டர் கூறுகையில், "வாங்கிய விலைக்காவது நிலத்தை விற்றுவிடலாம் என்று நினைத்தாலும், இப்போது வாங்குவதற்கு ஆள் இல்லை. விமான நிலையம் வரும் என்ற எதிர்பார்ப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பல மடங்கு உயர்ந்திருந்த நிலங்களின் மதிப்பு தற்போது கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது" என்றார்.

நிலங்களின் விலை 50 சதவீதம் வரை சரிந்தது

மேலும், ஒரு நிலத்தரகர் கூறுகையில், "பரந்தூரில் கடந்த ஆண்டு ஒரு சதுர அடிக்கு ரூ.1,400 முதல் ரூ.1,650 வரை இருந்த நிலங்களின் விலை தற்போது ரூ.600 முதல் ரூ.900 வரை குறைந்துள்ளது. ரூ.1,600 முதல் ரூ.1,850 வரை இருந்த சாதாரண லே-அவுட் பிளாட்டுகளின் விலை ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை சரிந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சிறப்பு வாய்ந்த பிளாட்டுகளின் விலை ரூ.2,999-ல் இருந்து ரூ.1,800 வரை வந்துள்ளது. மொத்தத்தில், விமான நிலையத் திட்டத்தை மட்டுமே நம்பி உயர்ந்திருந்த நிலங்களின் மதிப்பு சுமார் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்துள்ளது" என்றார்.

நடுத்தர மக்கள் பாதிப்பு

முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் என்றாலும், ஏற்கனவே அங்கு சிறிய பிளாட்டுகளை வாங்கிய நடுத்தர மக்களும் தற்போது பாதிப்பை சந்தித்து இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.