சமீப காலமாக இந்தியாவில் குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை (மயோப் பியா) பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. முன்பு வளரிளம் பருவத்தில் மட்டுமே அதிகமாகக் காணப்பட்ட இந்தப் பிரச்சினை, தற்போது 56 வயது குழந்தைகளிடமும் காணப்படுகிறது. இது பெற்றோர்களும், பள்ளிகளும் கவனிக்க வேண்டிய முக்கியமான சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளது.
இன்றைய குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகள், செல்போன், கணினி, டிவி மற்றும் புத்தகங்களை நீண்ட நேரம் அருகில் வைத்துப் பார்ப்பதால் கண்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது. கொரோனா காலத்திற்குப் பிறகு இந்தப் பழக்கம் மேலும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் வெளியில் சென்று விளையாடும் நேரம் மிகவும் குறைந்துவிட்டது. இதுவே கிட்டப்பார்வை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
கண் மருத்துவர்கள் கூறும் மிக முக்கியமான ஆலோசனை என்னவென்றால், குழந்தைகள் தினமும் குறைந்தது 2 மணி நேரம் இயற்கையான பகல் வெளிச்சத்தில் வெளிப்புறங்களில் நேரம் செலவிட வேண்டும் என்பதாகும். இதை "2 மணி நேர சூரிய வெளிச்ச பரிந்துரை” என்றும் கூறுகின்றனர். குழந்தைகள் வெயிலில் நிற்க வேண்டிய அவசியமில்லை. பூங்கா, விளையாட்டு மைதானம் அல்லது நிழலான இடங்களில் பகல் நேரத்தில் விளையாடினாலே போதும்.
பகல் வெளிச்சம் கண்களில் டோபமைன் என்ற வேதிப் பொருள் சுரக்க உதவுகிறது. இது கண்களின் வளர்ச்சியைச் சீராக்கி, கண் விழி அதிகமாக நீள்வதைத் தடுத்து, கிட்டப்பார்வை ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. உலகம் முழுவதும் நடத்தப்பட்ட பல ஆய்வுகளும் இதை உறுதிப்படுத்தியுள்ளன.
கிட்டப்பார்வை என்பது வெறும் கண்ணாடி அணிவதோடு முடியும் பிரச்சினை அல்ல. சிறு வயதிலேயே இது ஆரம்பித்தால், பின்னர் அதிக அளவிலான கிட்டப்பார்வையாக மாறி, விழித்திரை பாதிப்பு, கண் அழுத்த நோய், கண் புரை போன்ற தீவிர பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம்.
கண்களுக்கு ஓய்வு கொடுக்க 20-20-20 விதியை பின்பற்ற வேண்டும். அதாவது, 20 நிமிடங்கள் படித்தாலோ அல் லது திரையைப் பார்த்தாலோ, அடுத்த 20 நொடிகள் 20 அடி தூரத்தில் உள்ள பொருளைப் பார்க்க வேண்டும்.
பெற்றோர்கள் குழந்தைகள் புத்தகம் அல்லது திரையை சரியான தூரத்தில் வைத்துப் பார்ப்பதையும், அறையில் போதுமான வெளிச்சம் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். பொழுதுபோக்கிற்காக செல்போன், டிவி, கணினி பயன்படுத்தும் நேரத்தைக் குறைக்க வேண்டும். தூங்குவதற்கு முன் திரைகளைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
குழந்தை அடிக்கடி கண்களைச் சுருக்கிப் பார்ப்பது, டிவிக்கு அருகில் அமர்வது, கண்களைத் தேய்ப்பது. தலைவலி அல்லது பார்வை மங்கலாக இருப்பதாகக் கூறுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும்.
* தினமும் குறைந்தது 2 மணி நேரம் வெளியில் விளை யாட ஊக்குவிக்க வேண்டும்.
* பள்ளிக்குப் பிறகு டிஜிட்டல் திரை நேரத்தைக் குறைக்க வேண்டும்.
* படிக்கும் இடையே அடிக்கடி இடைவெளி எடுக்கச் சொல்ல வேண்டும்.
* 20-20-20 விதியைப் பின்பற்றச் செய்ய வேண்டும்.
* சரியான வெளிச்சத்தில், சரியான தூரத்தில் படிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.
* ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்ய வேண்டும்.
இன்றைய டிஜிட்டல் உலகில், குழந்தைகள் வெளியில் விளையாடுவது வெறும் பொழுதுபோக்கு அல்ல; அவர்க ளின் கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஒரு எளிய மருந்து. தினமும் 2 மணி நேரம் வெளிப்புறத்தில் செலவி டும் பழக்கம், குழந்தைகளின் பார்வையை எதிர்காலத்திலும் பாதுகாக்க உதவும்.