'எல்லோரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்கள், ஆனால் தன்னை மாற்றிக்கொள்ள யாரும் நினைப்பதில்லை'லியோ டால்ஸ்டாய்
மனித மனதின் ஆழத்தையும், தத்துவார்த்த சிந்தனைகளையும், சமூக யதார்த்தங்களையும் உலகிற்குச் சொன்ன சிறப்பான படைப்புகளைக் கொண்டது ரஷிய இலக்கியம்(Russian Literature). இலக்கியம் என்றாலே மன்னர்கள், மாவீரர்களின் கதைகள்தான் என்ற நிலை உலகம் முழுவதும் இருந்தபோது, உலகத்தால் நிராகரிக்கப்பட்ட, குழப்பத்தால் சூழப்பட்ட, பட்டினியால் வாடிக்கொண்டிருக்கும் மனிதர்களின் கதைகளை ரஷிய இலக்கியம் எடுத்துச் சொன்னது.
“ரஷிய இலக்கியம் புதியதோர் எழுச்சியை ஊட்டிற்று; அந்த இலக்கியத்தால் விழிப்புற்றவர்கள் அதனைப் பயன்படுத்தி, புதியதோர் உலகு எழச் செய்தனர்” என்று பேரறிஞர் அண்ணா கூறினார். ரஷியா மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள புரட்சிகர மற்றும் முற்போக்கு இயக்கங்கள் மீது ரஷிய இலக்கியம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷிய இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்படும் அலெக்சாண்டர் புஷ்கின், நவீன ரஷிய இலக்கியத்திற்கும், நவீன ரஷிய மொழிக்கும் அடித்தளம் அமைத்தார். அவரைத் தொடர்ந்து வந்தவர்களில் லெர்மாண்ட்வ், கோகோல், பிலின்ஸ்கி, இவான் துர்கனேவ், லியோ டால்ஸ்டாய், பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி, ஆண்டன் செக்காவ், மாக்சிம் கார்க்கி போன்றவர்கள் உலகப் புகழ்பெற்ற ரஷிய எழுத்தாளர்கள் ஆவர்.
ரஷிய இலக்கியமும் 1917 ஆம் ஆண்டு வெடித்த ரஷிய புரட்சியும் ஒன்றுக்கொன்று ஆழமான தொடர்பைக் கொண்டுள்ளன. ரஷிய இலக்கியத்தின் சிந்தனைகளே அந்த புரட்சிக்கான மிக முக்கிய விதையாக அமைந்தது. ரஷியப் புரட்சியின் மூலம், ரஷியாவில் மன்னர் ஆட்சி வீழ்த்தப்பட்டு, உலகின் முதல் கம்யூனிச நாடு உருவாக்கப்பட்டது. உலகெங்கிலும் தொழிலாளர் இயக்கங்களுக்கும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களுக்கும் இது மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுத்தது.
‘இந்த உலகம் நமக்கே சொந்தம்! இந்த உலகம் உழைப்பாளர்களுக்கே சொந்தம்! நமக்கு தேசமும் இல்லை, இனமும் இல்லை. நமக்கு தோழர்களும் எதிரிகளும் மட்டுமே உண்டு’மாக்சிம் கார்க்கி
லியோ டால்ஸ்டாய்(Tolstoy), பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி (Fyodor Dostoevsky), ஆண்டன் செக்கோவ் (Anton Chekhov), மாக்சிம் கார்க்கி(Maxim Gorky) போன்ற மாபெரும் எழுத்தாளர்கள் ரஷிய மக்களின் வறுமை, அரசின் கொடுங்கோன்மை மற்றும் சமூகத்தின் சீரழிவுகளைத் தங்கள் எழுத்துகளில் வெளிப்படுத்தினர்.
மாக்சிம் கார்க்கி எழுதிய உலகப் புகழ் பெற்ற தாய்(Mother) நாவல், சோசியலிச சிந்தனைகளை பாமர மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்க உதவியது. தொழிலாளர் வர்க்கத்தின் குரல் எப்போது ஓங்கினாலும், அதனை அரசின் அமைப்புகள் எவ்வாறு ஒடுக்குகிறது என்பது பற்றி மாக்சிம் கார்க்கி விளக்கமாக எழுதினார். உழைக்கும் மக்களின் கரங்கள் ஒன்று சேர்ந்து மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற சிந்தனையை தனது புரட்சிகரமான எழுத்துகள் மூலம் விதைத்தார்.
1917 புரட்சிக்குப் பின் சோவியத் யூனியன் காலத்தில் 'சோசலிச யதார்த்தவாதம்' (Socialist Realism) என்ற புதிய இலக்கிய வடிவம் உருவாகி வளர்ச்சி பெற்றது. பிற்காலத்தில் அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் கெடுபிடிகள் அதிகரித்தாலும், போரிஸ் பாஸ்டர்நாக் எழுதிய ‘டாக்டர் ஜிவாகோ’(Doctor Zhivago) மற்றும் மிகெய்ல் புல்காகோவ் எழுதிய ‘மாஸ்டரும் மார்கரெட்டாவும்’(The Master and Margarita) போன்ற நூல்கள் இலக்கிய உலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
உலகின் மற்ற இலக்கியங்களைப் போல், ரஷிய இலக்கியமும் காதலைப் பேச தவறவில்லை. ரஷிய இலக்கியங்களில் காதல் என்பதை வெறும் உடல்சார்ந்த உணர்வாக இல்லாமல், மனித உள்ளத்தின் தவிப்புகள், அறநெறி மற்றும் சமூக சூழல்களின் சிக்கல்கள் குறித்து ஆழமாகப் பேசப்பட்டுள்ளது.
டால்ஸ்டாய் எழுதிய உலகப் புகழ்பெற்ற 'அன்னா கரீனினா'(Anna Karenina), மிகத் தீவிரமான, அதேசமயம் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட காதல் உறவைப் பற்றி பேசுகிறது. காதலுக்காக சமூக விதிகளை மீறும் ஒரு பெண்ணின் மனப்போராட்டத்தையும், அந்த பெண்ணின் முடிவையும் தத்ரூபமாக விவரிக்கிறது.
தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய ‘வெண்ணிற இரவுகள்’(White Nights), இன்றுவரை படிப்போரின் நெஞ்சை நெகிழ வைக்கும் காதல் கதையாக திகழ்கிறது. தோல்வியடைந்த மனிதன் என தன்னை கருதிக் கொண்டு, கனவுகளில் மட்டுமே இன்பத்தை தேடி வரும் ஒரு இளைஞன், காதலால் உருகி, அதன் இன்பத்தை சிறிது நேரம் அனுபவித்து, மீண்டும் தனது தோல்விக்குள், அடைக்கலம் புகுந்த கதையை இக்கதை விவரிக்கிறது. இதனை தழுவி உலகின் பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் (தமிழில் ‘இயற்கை’) வெளியாகியுள்ளன.
‘உன் வானம் தெளிவாக இருக்கட்டும், உன் இனிய புன்னகை பிரகாசமாக இருக்கட்டும். தனிமையும், நன்றியுணர்வும் கொண்ட ஒரு இதயத்திற்கு நீ கொடுத்த அந்த மகிழ்ச்சியான தருணத்திற்காக இறைவன் உன்னை ஆசீர்வதிக்கட்டும்'வெண்ணிற இரவுகள்
ரஷிய இலக்கியம் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதன் ஆழமான துயரமும் (Tragedy), தத்துவார்த்த தேடல்களும்தான். ரஷிய எழுத்தாளர்கள் மனித ஆன்மாவின் இருண்ட பக்கங்களையும், வறுமை, தனிமை, மரணம், மற்றும் விதியின் கொடூரங்களையும் மிக நுணுக்கமாகக் கையாண்டுள்ளனர்.
ரஷிய இலக்கியத்தில் துயரம் இவ்வளவு ஆழமாக வேரூன்றி இருப்பதற்கு சில காரணங்கள் உள்ளன. ரஷியாவின் கடுமையான பனிப்பொழிவும், புவியியல் சூழலும் மனிதர்களை தனிமை சூழ்ந்த, போராட்டமான வாழ்க்கைக்குள் தள்ளியது.
அதோடு, ஜார் மன்னர்களின் (Tsarist regime) சர்வாதிகார ஆட்சி, செர்ப் (Serfdom) எனப்படும் அடிமைமுறை, மற்றும் பிற்கால சோவியத் ஆட்சியின் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் ரஷிய மக்களுக்கு எல்லையற்ற துயரத்தை அனுபவிக்க நேர்ந்தது. இந்த துயரங்கள் அனைத்தும் ரஷிய இலக்கிய படைப்புகளில் வெளிப்படுகின்றன.
தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய ‘குற்றமும் தண்டனையும்’ (Crime and Punishment) நாவலில் ரஸ்கோல்நிகோவ் என்ற இளைஞன் செய்யும் கொலையும், அதன் பின் அவன் அனுபவிக்கும் மன உளைச்சலும் ரஷிய துயரத்தின் உச்சமாக பார்க்கப்படுகிறது.
டால்ஸ்டாய் எழுதிய ‘போரும் அமைதியும்’ (War and Peace) நாவல், போரின் கொடூரத்தையும், அது மனித வாழ்க்கையை எவ்வாறு சிதைக்கிறது என்பதையும் விவரிக்கிறது.
‘எளிமை, நற்குணம் மற்றும் உண்மை இல்லாத இடத்தில் மேன்மை இல்லை'லியோ டால்ஸ்டாய்