சிறப்புக் கட்டுரைகள்

கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் மதுரை, சென்னை நகரங்கள்: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வில் தகவல்

உலகளவில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 205 நகரங்களை ஒப்பிட்டு கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் நகரங்கள் தொடர்பான இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லண்டன்,

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உலகளவில் கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் நகரங்கள் எவை? என்று நடத்தப்பட்ட ஆய்வில் தமிழ்நாட்டின் மதுரை, சென்னை நகரங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

உலகளவில் வெப்ப அபாயத்தை எதிர்கொள்ளும் முக்கிய நகரங்கள்

உலகிலேயே மிகச்சிறந்த மற்றும் பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உலகளவில் கடுமையான வெப்ப அபாயத்தை எதிர்கொள்ளும் முக்கிய நகரங்களை ஆய்வு செய்து அதில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நகரங்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கின்றனர். இந்த ஆய்வு வெறும் வெப்பநிலையை மட்டும் கணக்கில் கொள்ளாமல், ஒரு நகரத்தின் கட்டமைப்பு, மக்களின் சமூக-பொருளாதார நிலை மற்றும் வெப்பத்தை எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றை ஒப்பிட்டு அதன் அடிப்படையில் பட்டியலை தயாரித்துள்ளனர்.

10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 205 நகரங்கள்

அந்த வகையில் உலகளவில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 205 நகரங்களை ஒப்பிட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வு விவரங்கள் "நிலையான நகரங்களும் சமூகமும்" என்ற சர்வதேச ஆய்விதழிலும் வெளியாகியுள்ளது.

வெப்ப அபாய பட்டியலில் 14 இந்திய நகரங்கள், ஆமதாபாத்-2-வது இடம்

இந்த ஆய்வில், உலகிலேயே அதிக வெப்ப அபாயம் உள்ள 205 நகரங்கள் கொண்ட பட்டியலில் ஈராக் நாட்டின் அல்பஸ்ரா நகரம் முதல் இடத்தில் உள்ளது. அதற்கடுத்ததாக இந்தியாவின் ஆமதாபாத் நகரம் 2-வது இடத்திலும், மாலியின் பமாகோ, இந்தியாவின் நாக்பூர், பிலிப்பைன்சின் கியூசான் சிட்டி ஆகிய நகரங்கள் முறையே 3, 4 மற்றும் 5-வது இடங்களில் இருக்கின்றன. இந்தியாவில் இருந்து மட்டும் 35-க்கும் மேற்பட்ட நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் வெப்ப அபாயம் எதிர்கொள்ளும் முதல் 50 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 14 நகரங்கள் உள்ளன.

மதுரை-7வது இடம், சென்னை-43வது இடம்

குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து சென்னை, மதுரை நகரங்களும் இடம்பெற்று உள்ளன. மதுரை 7-வது இடத்திலும், சென்னை 43-வது இடத்திலும் உள்ளது. மதுரை மிகக் குறைந்த மரங்களின் பரப்பளவு மற்றும் உள்கட்டமைப்பு பலவீனம் ஆகியவையும், சென்னை அதிக ஈரப்பதத்துடன்கூடிய வெப்பம் மற்றும் நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு போன்றவையும் இந்த வெப்ப அபாயத்துக்கு காரணமாக சொல்லப்பட்டுள்ளது.

மற்ற வளர்ந்த நாடுகளின் நகரங்களுடன் ஒப்பிடும்போது, இந்திய நகரங்களில் மக்கள் தொகை அடர்த்தி மிக அதிகம். அத்துடன், திறந்தவெளியில் வேலை செய்யும் கூலித்தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும், தீவிர வெப்ப அலையின்போது உடனே தஞ்சம்புக பொதுவான குளிரூட்டும் உள்கட்டமைப்புகள் குறைவாக இருப்பதுமே இந்திய நகரங்கள் அதிகம் இப்பட்டியலில் முன்னணியில் வர முக்கிய காரணங்களாக இந்த ஆய்வு கூறுகிறது.

வருங்கால நிலை மற்றும் தீர்வுகள் என்ன?

கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் நகரங்கள் பட்டியலை வெளியிட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள், வருங்காலத்தின் நிலைமையையும், அதற்கான தீர்வையும் ஆய்வில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அதன் விவரம் வருமாறு:

புவி வெப்பமயமாதல்

புவி வெப்பமயமாதல் தற்போதைய வேகத்திலேயே நீடித்தால், வரும் காலத்தில் கோடைகால வெப்ப அலைகளின் தீவிரம் மற்றும் நாட்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.

"வெட்பல்ப் வெப்பநிலை” எனும் அபாய நிலை

சென்னை போன்ற கடலோர நகரங்களில் வெறும் வெப்பநிலை மட்டுமல்லாமல், காற்றில் உள்ள ஈரப்பதமும் சேர்ந்து அதிகரிக்கும். இதனால் மனித உடல் வியர்வையை வெளியேற்றி தன்னைத்தானே குளிர்வித்துக் கொள்ளும் திறனை இழக்கும். இது "வெட்பல்ப் வெப்பநிலை” எனப்படும் அபாய நிலையை நோக்கி நகர்ந்து, மனிதர்கள் வாழமுடியாத சூழலை உருவாக்கலாம்.

பொருளாதார பின்னடைவு

கடுமையான வெப்பத்தால் திறந்தவெளியில் வேலைசெய்யும் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் கடுமையாக பாதிக்கப்படும். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) வளர்ச்சியில் பெரும் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும்.

வெப்பநிலையை குறைப்பதற்கான வழிகள்

கான்கிரீட் கட்டிடங்களுக்கு நடுவே திட்டமிட்டு பெரிய பூங்காக்கள் மற்றும் அடர்ந்த மரங்களை கொண்ட பசுமைப் பகுதிகளை உருவாக்க வேண்டும். இது நகர்ப்புற வெப்பத்தீவு விளைவை உடைத்து, சுற்றுப்புற வெப்பநிலையை 2 செல்சியஸ் முதல் 4 செல்சியஸ் வரை இயல்பாக குறைக்கும்.

இயற்கையோடு இணைந்த பசுமை நகரங்கள்

எதிர்கால கட்டிடங்கள் அனைத்தும் சூரியவெப்பத்தை பிரதிபலிக்கும் "கூலிங் ரூப்” தொழில்நுட்பத்துடனும், மின்சார ஏ.சி.க்கள் இல்லாமல் இயற்கை காற்று உள்ளே வரும் காற்றோட்ட வசதியுடனும் கட்டப்பட வேண்டும். மொத்தத்தில் நகரங்களை வெறும் கான்கிரீட் காடுகளாக மாற்றாமல், இயற்கையோடு இணைந்த பசுமை நகரங்களாக மாற்றுவது மட்டுமே வரும் காலங்களில் மனித உயிர்களை காப்பதற்கான ஒரே வழி என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த ஆய்வில் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.