விஜயபுரா
55 வயதில் பதக்கங்கள், சாம்பியன் பட்டங்கள் என ஜிம் பயிற்சியாளரின் சாதனை பயணம் பற்றி பார்ப்போம்.
கர்நாடகாவின் நிடகுந்தி பகுதியை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் சாஹேபாலால் சப்பார்பந்த் (வயது 55). உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதற்காக தினமும் 5 மணிநேரம் உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார். ஆனால், ஜிம் பயிற்சியாளராக வேண்டும் என்பது அவருடைய கனவு அல்ல.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதே அவருடைய ஆசையாக இருந்தது. 105 கிலோ எடையுள்ள ஒரு சாதாரண நபராக இருந்த அவர், பல ஆண்டுகால கடுமையான உடற்பயிற்சி மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட உணவுமுறை ஆகியவற்றை மேற்கொண்டு ஒரு பாடிபில்டராக (உடல் கட்டமைப்பாளர்) தன்னை மாற்றிக்கொண்டுள்ளார்.
பொதுவாக பலர் கடுமையான உடல் உழைப்பை குறைத்து, மெதுவாக செயல்பட தொடங்கும் வயதில், அவர் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார். 48 வயது இருக்கும்போது, உடல் எடையை குறைக்கும் முயற்சியை தொடங்கியுள்ளார். தற்போது பல தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை வென்றுள்ளார்.
போட்டியில் பங்கேற்றது பற்றி அவர் கூறும்போது, எனது முதல் போட்டியில் நான் பதக்கம் வெல்லவில்லை. ஆனால், 51 வயதில் போட்டியில் பங்கேற்றதற்காக, இளம் போட்டியாளர்கள் உட்பட பலரும் என்னை பாராட்டினார்கள். ஒரு விருதுக்கும் மேலாக அந்த பாராட்டு எனக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்றார்.
சமீபத்தில் பாங்காக்கில் நடந்த 58-வது ஆசிய பாடிபில்டிங் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில, 50-60 வயது பிரிவில் 80 கிலோவுக்கு மேற்பட்ட எடை கொண்டவர்களுக்கான பிரிவில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை பெற்றார்.
கர்நாடகாவில் உள்ள பாடிபில்டர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 40-க்கும் மேற்பட்ட மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவர் நான்கு முறை முதலிடமும், பல போட்டிகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களையும் பிடித்துள்ளார்.
தெலுங்கானாவின் கரீம்நகரில் இந்திய பாடிபில்டிங் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட 16-வது தேசிய பாடிபில்டிங் சாம்பியன்ஷிப்பில் அவர் வெண்கல பதக்கம் வென்றார். 2023-ல் மத்தியப் பிரதேசத்தின் ரத்லாமில் நடைபெற்ற 13-வது மிஸ்டர் இந்தியா போட்டியில், மாஸ்டர்ஸ் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.
அவர் தன்னுடைய உடல் எடை குறைப்பை பற்றி கூறும்போது, நான் குண்டாக இருந்ததால் நண்பர்களும் உறவினர்களும் என்னை கேலி செய்தனர். இதனால், உடல் எடையை குறைக்க ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னுள் தோன்றியது. பின்னர் நான் ஒரு உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்தேன். உணவு பழக்கமும் மாறியது என்றார்.
எண்ணெய் மற்றும் அதிக கலோரி கொண்ட உணவுகளை தவிர்த்து, தனது உடற்பயிற்சி நடைமுறையில் அதிக கவனம் செலுத்தினார். அவர் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட உணவுமுறையை பின்பற்றினார். விருந்து போன்ற விசேஷ நிகழ்ச்சிகளில் கூட உணவு சாப்பிடாமல் அதனை தவிர்த்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, நான் எதிர்பார்த்ததற்கும் மேலாக விரைவாகவே பலன்கள் கிடைத்தன. ஏழு மாதங்களுக்குள், நான் 40 கிலோ எடையை குறைத்தேன். இந்த மாற்றம் என்னையும், எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் கூட ஆச்சரியப்படுத்தியது என்று அவர் கூறினார்.
சப்பார்பந்திற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் பெங்களூருவில் பணியாற்றுகிறார். மற்றொருவர் நிடகுந்தியில் சிறிய அளவில் தொழில் ஒன்றை நடத்தி வருகிறார். ஒரு காலத்தில் உடல் பருமனுடன் காணப்பட்ட அவரை, அவருடைய நண்பர்கள் கேலியும் கிண்டலும் செய்தனர்.
ஆனால், தற்போது அவர்கள் இருவரையும் விட அவரது தந்தை இளமையாக தெரிகிறார் என்று பெருமையாக கூறுகிறார்கள். அவர் தன்னுடைய உடற்பயிற்சி கூடத்தில், காலையில் ஏறக்குறைய மூன்று மணி நேரமும், மாலையில் இரண்டு மணி நேரமும் செலவிடுகிறார்.