காவிரி ஆறு.. கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில், தலைக்காவிரி என்னும் இடத்தில் உற்பத்தி ஆகிறது. கர்நாடகாவில் 320 கி.மீ. தொலைவும், தமிழ்நாட்டில் 416 கி.மீ. தூரமும் பாயும் காவிரி ஆறு, நிறைவாக மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வங்கக்கடலில் கலக்கிறது. காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகாவில் ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய 4 அணைகளும், தமிழ்நாட்டில் மேட்டூர், கல்லணை, முக்கொம்பு ஆகிய 3 அணைகளும் இருக்கின்றன. தற்போது, கர்நாடக முதல்-மந்திரியான டி.கே.சிவக்குமார், தனது சொந்தத் தொகுதியான கனகபுராவில் மேகதாது எனும் இடத்தில் 5-வது அணையை புதிதாக கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
ஏற்கனவே, காவிரி நீரை பங்கிடுவதில் கர்நாடகா - தமிழ்நாடு இடையே பிரச்சினை இருந்து வரும் நிலையில், ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோர்ட்டு உத்தரவுப்படி, தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை தென்மேற்கு பருவமழை குறைவாகவே பெய்துள்ள நிலையில், கர்நாடக அரசு தமிழகத்திற்கு ஜூன் மாதம் 2.915 டி.எம்.சி.யும், ஜூலை மாதம் 0.459 டி.எம்.சி.யும் மட்டுமே தண்ணீர் வழங்கியுள்ளது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி.யும், ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி.யும் தண்ணீர் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையையும் ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்க முடியாத நிலை ஏற்பட்டதால், சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் கடந்த 22-ந் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக, கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், கர்நாடக அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால், தமிழக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
பிரச்சினை இவ்வாறு பூதாகரமாகிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். அதன்படி, ஆகஸ்டு 3-ந் தேதி (திங்கட்கிழமை) இரு மாநில முதல்-மந்திரிகளும் பெங்களூருவில் சந்தித்து பேச இருக்கின்றனர். இந்த சந்திப்பின்போது, காவிரி நீர் பங்கீட்டு விவகாரம், மேகதாது அணை கட்டும் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் காங்கிரஸ் பங்கெடுத்து இருக்கும் த.வெ.க. கூட்டணி ஆட்சி நடக்கிறது. என்றாலும், இருமாநில தண்ணீர் பிரச்சினையில் அரசியல் புகுந்துவிட்டதால், ஜோசப் விஜய் - டி.கே.சிவக்குமார் சந்திப்பில் எந்தவித முடிவு எடுக்கப்பட்டாலும், அது ஒரு மாநில அரசுக்கு எதிராக அமைந்துவிடும் நிலையே இருக்கிறது. எனவே, சுமூகமான முடிவு எட்டப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சரி.. இதற்கு முன்பு இதுபோன்று தமிழக - கர்நாடக முதல்-மந்திரிகள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதே இல்லையா?, அதில் முடிவு எதுவும் எட்டப்பட்டதா? என்ற கேள்வி எழாமல் இல்லை.
இதற்கு முன்பு, தமிழக முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடகா சென்று அம்மாநில முதல்-மந்திரிகளாக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே, குண்டு ராவ் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறார். இதேபோல், 1997-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின் பேரில் அப்போதைய கர்நாடக முதல்-மந்திரி ஜே.எச்.பட்டீலை சென்னையில் சந்தித்து பேசினார். 2012-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, கர்நாடக முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டரை பெங்களூருவில் சென்று சந்தித்து பேசினார். ஆனால், இதுபோன்ற சந்திப்புகளில் எந்தவித சுமூகமான முடிவும் எட்டப்பட்டதில்லை.
கடைசியாக, 2018-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, கர்நாக முதல்-மந்திரி சித்தராமையாவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த முயற்சி மேற்கொண்டார். ஆனால், அது நடக்கவில்லை. இந்த நிலையில்தான், தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், ஆகஸ்டு 3-ந் தேதி பெங்களூரு சென்று கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேச இருக்கிறார். தமிழக முதல்-அமைச்சருடன் தலைமைச் செயலாளர் சாய்குமார், நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாஹு, ஆலோசகர் ஜான் ஆரோக்கிய சாமி ஆகியோர் செல்ல இருக்கின்றனர்.
கர்நாடகாவில் 2028-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, தேர்தலுக்கு முன்பு தனது சொந்தத் தொகுதியான கனகபுராவில் மேகதாது அணையை கட்டத் தொடங்கிவிட்டால், அது தேர்தலில் வெற்றியைத் தேடித்தரும் என்று டி.கே.சிவக்குமார் கருதுகிறார். இதனால், தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் - கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சந்திப்பில் சுமூக முடிவு எட்டப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். (1977-1987) இருந்தபோது, ஆந்திர முதல்-மந்திரியாக என்.டி.ராமராவ் (1983-1989) இருந்தார். இருவரும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் என்பதால், நல்ல நண்பர்களாக இருந்தனர். இருமாநிலங்களிலும் வறட்சி, உணவுப் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில், இருவரும் ஒருவருக்கு ஒருவர் தண்ணீரையும், அரிசியையும் பரிமாறிக்கொண்டனர். இரவோடு இரவாக நடந்த இந்த விஷயங்கள் யாருக்கும் தெரியாததால் அப்போது இந்த விவகாரம் அரசியல் ஆக்கப்படவில்லை. ஆனால், அதுபோன்று இப்போது நடக்க வாய்ப்பும் இல்லை.