கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் ஆன்லைன் கல்வியை தொடர முடியாத நிலையில் மாற்று நடைமுறைகள் மூலம் கல்வி போதிக்கும் பணியில் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். மும்பையை சேர்ந்த சமூக சேவகர் அசோக் குர்மி, பள்ளி வாகனத்தை வகுப்பறையாக மாற்றியுள்ளார்.
பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாததால் மாணவர்களை பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்று வரும் பள்ளி பேருந்துகள் அனைத்தும் ஓரிடத்திலேயே நீண்ட மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை பார்த்தவருக்கு, அதையே வகுப்பறையாக மாற்றினால் என்ன? என்ற யோசனை தோன்றியிருக்கிறது. அதனை நடமாடும் பள்ளி வாகனமாக மாற்றி சுதந்திர தினத்தன்று பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறார். இந்த நடமாடும் வாகனம் மூலம் நடைபாதைகள் மற்றும் குடிசை பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் பயன் பெறு கிறார்கள்.
ஆன்லைன் கல்வி எட்டாக்கனியாக இருந்ததால் படிப்பை தொடர முடியாமல் தவித்தவர்கள் அசோக் குர்மியின் முயற்சி மூலம் பலன் பெற்றிருக்கிறார்கள். பேருந்துக்குள் அமர்ந்து ஆர்வமாக பாடங்களை பயில்கிறார்கள். அசோக் குர்மி தனது நண்பர்கள் மூலம் நிதி திரட்டி நடமாடும் பள்ளிக்கூடத்தை நடத்திவருகிறார். அசோக் குர்மி, கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் சமயத்தில் சாண்டா உடை அணிந்து முக கவசங்களை வினியோகித்தார். அதேபோல் ஸ்பைடர்மேன் உடை அணிந்து பொது இடங்களை சுத்தப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.