சென்னை,
கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரசிகர்களின் கொண்டாட்டமாக இருந்த மகேந்திர சிங் தோனி, இனி வீரராகக் களமிறங்க மாட்டார். 2027-ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக புதிய பொறுப்பை ஏற்க உள்ளார். இந்த நிலையில், அவர் தனது ஓய்வு முடிவை எடுத்த விதம் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
ஐ.பி.எல். 2027 தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு மற்றும் விடுவிப்பு குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ஆலோசனை நடத்தியது. அப்போது அணியில் யாரைத் தக்கவைப்பது, யாரை விடுவிப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
அந்த ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில், விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நிர்வாக இயக்குநர் படித்தபோது, தோனி அமைதியாக, “அந்தப் பட்டியலில் என் பெயரையும் சேர்த்துவிடலாம்” என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்ட நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவலை சென்னை அணியின் உரிமையாளர் ரூபா குருநாத் பகிர்ந்துள்ளார். தோனி சில மாதங்களுக்கு முன்பே அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து உறுதியாகத் தெரியவில்லை என்று கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தன்னால் அணிக்கு முழுமையான பங்களிப்பை வழங்க முடியாது என்று நினைத்தால், அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டு அணியின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதே தோனியின் எண்ணமாக இருந்ததாகவும் ரூபா குருநாத் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.பி.எல். தொடங்கிய 2008-ம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியைத் தேர்வு செய்தது. அன்று தொடங்கிய இந்தப் பயணம், 19 ஆண்டுகளாக நீடித்தது.
சென்னை அணியின் கேப்டனாக 5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற தோனி, இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையையும் கைப்பற்றியுள்ளார்.
2016, 2017-ம் ஆண்டுகளில் சென்னை அணி தடையை சந்தித்ததால், அந்த இரண்டு சீசன்களிலும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்காக விளையாடினார். 2018-ல் சென்னை அணிக்குத் திரும்பிய அவர், அந்த ஆண்டிலேயே அணிக்குக் கோப்பையை வென்று கொடுத்தார்.
2023-ம் ஆண்டு சென்னை அணி 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றபோது, தோனி ஓய்வு பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் தொடர்ந்து விளையாட முடிவு செய்தார்.
2024-ம் ஆண்டு முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு களமிறங்கிய தோனி, அந்த சீசனில் 161 ரன்கள் எடுத்தார். குறிப்பாக, 220.54 என்ற அதிரடி ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் சேர்த்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
2025-ம் ஆண்டு 14 போட்டிகளிலும் விளையாடி 196 ரன்கள் எடுத்தார். ஆனால், 2026 சீசனில் உடல்தகுதி பிரச்சினை காரணமாக ஒரு போட்டியில்கூட அவர் களமிறங்கவில்லை. இதுவே அவரது ஐ.பி.எல். வீரர் பயணத்தின் கடைசி சீசனாக அமைந்தது.
ஐ.பி.எல். தொடரில் 278 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 5,439 ரன்கள் குவித்துள்ளார். இதில் 24 அரைசதங்களும் அடங்கும். 264 சிக்சர்களையும் விளாசியுள்ளார்.
இனி மைதானத்தில் பேட்டிங், விக்கெட் கீப்பிங் என ரசிகர்களை உற்சாகப்படுத்தும் தோனியைப் பார்க்க முடியாது. ஆனால், சென்னை அணியின் ஆலோசகராக அவர் தொடர்ந்து அணியுடன் பயணிக்க உள்ளார்.
கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக சென்னை அணியின் அடையாளமாக இருந்த தோனி, இனி வீரராக இல்லாவிட்டாலும், அந்த அணியின் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட உள்ளார்.