விண்வெளி வீரர்களை நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் அழைத்துச் செல்வது மட்டு மல்ல, அங்கு அவர்கள் பாதுகாப்பாகத் தங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழக ஆராய்ச்சியாளர்கள், 'பீம்' (BHEEM) என்ற புதிய வாழ்விடத்தை வடிவமைத்துள்ளனர்.
முழு வீட்டையும் ராக்கெட்டில் ஏற்றிச் செல்வதற்குப் பதிலாக, அதன் சுவர் பலகைகளைத் தனித்தனியாகச் சிறிய அளவில் அடுக்கிக் கொண்டு செல்லலாம். நிலவு அல்லது செவ்வாய் கிரகத்தை அடைந்ததும், அவற்றை ஒன்றாக இணைத்து பெரிய வீடாக உருவாக்கலாம். இந்த வடிவமைப்புக்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட ஆராய்ச்சியாளர்கள் பங்களித்துள்ளனர்.
தேவைக்கு ஏற்ப இந்த வீட்டின் அளவைப் பெரிதாக்கவோ, சிறிதாக்கவோ முடியும். ஆராய்ச்சி யாளர்களின் வடிவமைப்பின்படி,ஒரே ராக்கெட்டில் கொண்டு செல்லும் பலகைகளை இணைத்து, சர்வதேச விண்வெளி நிலையத்தைவிட இரு மடங்கு பெரிய வாழ்விடத்தை உருவாக்க முடியும். மேலும், ஏதேனும் ஒரு பகுதியில் பழுது ஏற்பட்டால், அந்தப் பகுதியை மட்டும் மாற்ற முடியும்.
தற்போது இது ஒரு வடிவமைப்புக் கருத்து மட்டுமே. மனிதர்கள் அங்கு தங்குவதற்கு முன் கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பு, காற்று மற்றும் உயிர்வாழ்வுக்குத் தேவையான வசதிகள் உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்த வேண்டும். இத்தகைய சவால்களைக் கடந்து இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், எதிர்காலத்தில் நிலவு, செவ்வாய் போன்ற இடங்களில் மனிதர்கள் தங்குவதற்கான முயற்சியில் முக்கியப் பங்காற்றலாம்.