சிறப்புக் கட்டுரைகள்

பாஸ்போர்ட் தேவையில்லை: இந்தியர்களை அனுமதிக்கும் நாடுகள் எவை தெரியுமா?

நேபாளம் மற்றும் பூடான் ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் பயணம் செய்யலாம். இருப்பினும், சில முக்கியமான ஆவணங்கள் மற்றும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் பாஸ்போர்ட் அவசியம் என்பது பொதுவாக அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், பாஸ்போர்ட் இல்லாமலேயே இந்தியர்கள் பயணம் செய்யக்கூடிய நாடுகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம். இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பூடான் ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் பயணம் செய்யலாம். இருப்பினும், சில முக்கியமான ஆவணங்கள் மற்றும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

நேபாளம்

இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாளம், இந்தியாவின் ஐந்து மாநிலங்களுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்தியாவில் இருந்து சாலை மற்றும் ரெயில் வழியாகவும் நேபாளத்திற்கு செல்ல முடியும். குறிப்பாக பீகாரின் ஜெய்நகரில் இருந்து நேபாளத்தின் குர்தா வரை ரெயில் சேவை இயக்கப்படுகிறது.இந்தியர்கள் நேபாளம் செல்ல பாஸ்போர்ட் கட்டாயம் இல்லை. ஆனால், இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம். வாக்காளர் அடையாள அட்டை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதேநேரத்தில், ஆதார் அட்டை உள்ளிட்ட சில ஆவணங்கள் பயண ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. எனவே, நேபாளம் செல்லும்போது வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருப்பது பாதுகாப்பானது.

பூடான்

இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான பூடான், அசாம், அருணாசல பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுடன் எல்லையை கொண்டுள்ளது.இந்தியர்கள் பூடானுக்கு செல்ல பாஸ்போர்ட் அல்லது விசா கட்டாயம் இல்லை. இந்திய வாக்காளர் அடையாள அட்டையை பயண ஆவணமாக பயன்படுத்தலாம். பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் குறைந்தது 6 மாதங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை பயன்படுத்தலாம். குழந்தைகள் பயணம் செய்யும்போது அசல் பிறப்பு சான்றிதழை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

பூடானுக்கு விசா தேவையில்லை என்றாலும், அங்கு தங்கும் ஒவ்வொரு நாளுக்கும் நிலையான வளர்ச்சிக் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது ஒரு நாளுக்கு ரூ.1,200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சாலை வழியாக பூடான் செல்பவர்கள் தேவையான நுழைவு அனுமதியை பெற்ற பிறகே நாட்டிற்குள் செல்ல முடியும்.