சிறப்புக் கட்டுரைகள்

பருவமழை பொய்த்ததால் உடன்குடியில் வறட்சியில் கருகும் பனை மரங்கள்: தொழிலாளர்கள் கவலை

பனைத்தொழிலையும், பனை மரங்களையும் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுப்பதோடு, கருகும் பனை மரங்களை வேளாண்மை துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்து, அவற்றை பாதுகாக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் பருவமழை பொய்த்ததால் வறட்சியில் பனை மரங்கள் கருகி வருகின்றன. இதனால் பனை தொழிலாளர்கள், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

புவிசார் குறியீடு பெற்றுள்ள உடன்குடி கருப்பட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சி மிகுந்த பகுதிகளில் ஒன்றான உடன்குடி சுற்று வட்டார பகுதிகளில் பனைத்தொழில் சிறந்து விளங்குகிறது. இங்குள்ள பனை மரங்களில் இருந்து கிடைக்கப்பெறும் பதனீரை நன்கு காய்ச்சி கூப்பினியாக காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கின்றனர். தனிச்சுவை கொண்ட உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதால், இங்கு தயாராகும் கருப்பட்டியை வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.

பதநீர் உற்பத்தி குறைவு

பனை மரத்தின் அடி முதல் நுனி வரையிலும் மக்களுக்கு பயன் அளிப்பதால் 'கற்பகத்தரு' என்று அழைக்கப்படுகிறது. உடன்குடி சுற்று வட்டார பகுதியில் ஏராளமான பனை தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் பல்வேறு இடங்களிலும் உள்ள பனை மரங்களில் ஏறி பதநீர் இறக்குகின்றனர். கோடை காலத்தில் பதநீர் சீசன் உச்சகட்டத்தில் இருக்கும். தற்போது பதநீர் சீசன் இல்லாததால் உற்பத்தி சொற்ப அளவிலே உள்ளது.

கருகும் பனை மரங்கள்

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சில நாட்கள் பரவலாக பெய்தது. பின்னர் போதிய மழை பெய்யாமல் கண்ணாமூச்சி காட்டி வருகிறது. உடன்குடி பகுதியிலும் போதிய மழை பெய்யாததால் பனை ஓலைகள் கருகி வருகின்றன. இதனால் பனை தொழிலாளர்கள், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அடுத்த ஆண்டு கோடை காலத்தில் பதநீர் சீசன் நன்றாக இருக்குமா? என்று எதிர்பார்த்துள்ளனர்.

இதுகுறித்து உடன்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் குணசீலன் கூறியதாவது:

முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே உடன்குடி, குலசேகரன்பட்டினம், திசையன்விளை பகுதியில் பனைத்தொழில் தலைசிறந்து விளங்கியது. இதனால் ஆங்கிலேயே நிறுவனம் பனங்காட்டில் தண்டவாளம் அமைத்து சரக்கு ரெயிலை இயக்கி பதநீரை சேகரித்து கொள்முதல் செய்தது. பின்னர் பதனீரை குலசேகரன்பட்டினம் ஆலைக்கு எடுத்து சென்று, கூப்பினி பதத்தில் காய்ச்சி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. பின்னர் அந்த ஆலை மூடப்பட்டதால் ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டு, தண்டவாளம் இருந்த சுவடே இல்லாமல் மாறி விட்டது. எனினும் தற்போதும் உடன்குடி கருப்பட்டி தனிச்சிறப்புடன் பெயர் பெற்று விளங்குகிறது.

அழிந்த வெற்றிலை சாகுபடி

இதேபோன்று முன்பு செழிப்பான விவசாய பூமியாக உடன்குடி இருந்தது. எனவே இங்கு வெற்றிலை சாகுபடியும் அதிகளவில் செய்யப்பட்டது. காரத்தன்மை மிகுந்த உடன்குடி வெற்றிலையை பல்வேறு ஊர்களுக்கும் ஏற்றுமதி செய்தனர். பின்னர் வறட்சியால் நிலத்தடியில் கடல் நீர் உட்புகுந்ததால் வெற்றிலை சாகுபடி மெல்ல அழிந்தது. எனினும் தற்போதும் சிலர் தங்களை வாழ வைத்த வெற்றிலையை போற்றும் வகையில், வீடுகளில் நல்ல தண்ணீரை ஊற்றி வெற்றிலைக்கொடியை வளர்த்து வருகின்றனர்.

வறண்ட குளங்கள்

ஸ்ரீவைகுண்டம் தென்கால் மூலம் பாசனம் பெறும் தென்திருப்பேரை கடம்பாகுளம் முதல் திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன்குளம் வரையிலான குளங்கள் நிரம்பிய பின்னரே குலசேகரன்பட்டினம் தருவைகுளத்துக்கு தண்ணீர் வருகிறது. அந்த குளம் நிரம்பிய பின்னரே மறுகால் விழுந்து மணப்பாடு கருமேனியாற்றில் சங்கமிக்கிறது. இதேபோன்று மருதூர் மேலக்கால் மூலம் சடையநேரி கால்வாய் வழியாக சடையநேரி குளத்துக்கு தண்ணீர் வந்து நிரம்பிய பின்னரே உடன்குடி தாங்கை குளத்துக்கு தண்ணீர் வருகிறது. தற்போது கால்வாய்களில் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் குளங்களிலும் மழைநீர் மட்டுமே குறைந்த அளவில் தேங்கி உள்ளது. இதனால் உடன்குடியில் மீண்டும் வறட்சி அதிகரித்துள்ளது.

பனை மரங்களை பாதுகாக்க ஏற்பாடு

எனவே பனைத்தொழிலையும், பனை மரங்களையும் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கருகும் பனை மரங்களை வேளாண்மை துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்து, அவற்றை பாதுகாக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT