கல்லூரி மாணவ-மாணவிகளும், இளம் ஆராய்ச்சியாளர்களும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கண்டு பிடிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
பெண்களை தொட்டால் எச்சரிக்கும் கருவி, பெண்களை துரத்தினால் அபாய ஒலி எழுப்பும் கருவி, ஆபத்து காலங்களில் காவல் துறை யிடம் உதவி கோரும் அப்ளிகேஷன்கள் என பல பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கி உள்ளனர். அந்தவகையில், ஓசூரை சேர்ந்த பள்ளி மாணவி அபர்ணாவின் கண்டுபிடிப்பு பலரது பாராட்டு களையும் பெற்றிருக்கிறது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டுகளையும், ஜனாதிபதியின் சிறப்பு விருதுகளையும் அவருக்கு பெற்று தந்திருக்கிறது.
ஓசூரை சேர்ந்த அபர்ணா, அங்குள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக் கிறார். இவர் 3-ம் வகுப்பு (2017) படிக்கும்போது உருவாக்கிய, கைக்கடிகாரம் தான் இன்று அனைவராலும் பாராட்டப்படுகிறது. எத்தகைய கண்டுபிடிப்பு அது?, கடிகாரத்திற்குள் அப்படி என்ன சிறப்பு ஒளிந்திருக்கிறது? போன்ற பல கேள்விகளோடு, அபர்ணாவை சந்தித்தோம்.
அவர் பகிர்ந்து கொண்டவை இதோ...
எத்தகைய கண்டுபிடிப்பு இது?
இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு. பெண்கள் அசாதாரணமான சூழ்நிலைகளை சந்திக்கும்போதும், பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகும்போதும் அதிலிருந்து தப்பிக்க உதவும், சாமர்த்திய கருவி இது. குறிப்பாக பெண்கள் பாதுகாப்பை, உறுதிப்படுத்தும் அத்தியாவசிய கருவி.
உங்களது கண்டுபிடிப்பை பற்றி விளக்கமாக கூறுங்கள்?
எனக்கு சிறு வயதில் இருந்தே வித்தியாசமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காக என் சகோதரியுடன் சேர்ந்து, திட்டமிட்டு கொண்டிருந்தேன். அந்தசமயத்தில்தான், பெண் களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதை உணர முடிந்தது. இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில், ஏதாவது ஒருவகையில் ஒரு பெண் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி கொண்டிருப்பதை, என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. அதனால் சகோதரியுடன் சேர்ந்து பெண் பாதுகாப்பை உறுதிப் படுத்தும், கைக்கடிகாரம் ஒன்றை தயாரித்தேன்.
கடிகாரத்திற்கும், பெண் பாதுகாப்பிற்கும் என்ன சம்பந்தம்?
இது வெறும் கடிகாரம் அல்ல. காரசாரமான கடிகாரம். பெண்கள் ஆபத்தில் இருப்பதை உணர்ந்து, தானாகவே உதவும் கடிகாரம். அதாவது, தவறான எண்ணத்தில் பெண்களை யாராவது நெருங்கி சென்றாலும், அச்சுறுத்த முயன்றாலும் அவர்கள் மீது இந்த கடிகாரம் தானாகவே மிளகாய் தூள் கரைசலை பாய்ச்சி அடிக்கும் தன்மை கொண்டது. பார்ப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் சாதாரண கடிகாரம் போலவே தோன்றினாலும், இது ஒரு ஸ்மார்ட் கடிகாரம்.
இந்த கடிகார தயாரிப்பிற்கு என பிரத்யேக முன்கதை இருக்கிறதா?
இருக்கிறது. எனது தந்தை பணி நிமித்தமாக பல்வேறு ஊர்களுக்கு இடமாறுதல் ஆவது வழக்கம். அந்த வகையில் கேரளாவில் தங்கியிருந்த காலங்களில், அங்குள்ள பள்ளியில் சேர்ந்து படித்தேன். எனக்கு மலையாளம் தெரியாது என்பதால், அங்குள்ள மாணவ-மாணவிகள் என்னை வித்தியாசமாக பார்த்தனர். கேலி-கிண்டல்களும் நிகழ்ந்தது. சில சமயங்களில் அடிதடி வரை நீண்டிருக்கிறது. இதுபற்றி அங்குள்ள ஆசிரியர்களிடம் புகார் கூறினாலும், அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அதனால் எனக்கான பாதுகாப்பை, நானே தேடி கொள்ள ஆசைப்பட்டேன். கேரளாவில் இருந்து சென்னைக்கு இடமாறுதலாகி வந்த பிறகும், பய உணர்வு என்னை ஆட்கொண்டிருந்தது. அதிலிருந்து தப்பிக்கும் விதமாகவே, பிரத்யேக பாதுகாப்பு கருவியை தயாரிக்க திட்டமிட்டேன்.
உங்களது திட்டம், உயிர்பெற்ற விதத்தை கூறுங்கள்?
இந்திய அரசின் கீழ் செயல்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையை சேர்ந்த தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் அப்துல் கலாம் இக்னைட் விருதை அறிவித்து வருகிறது. புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் பள்ளி மாணவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். இந்தியாவின் எல்லா மாநிலங்களில் இருந்தும் இந்த விருதுக்கு போட்டா போட்டி நடக்கும். இதுபற்றிய விவரம், பள்ளி மூலமாக தெரிய வந்ததும், பெண் பாதுகாப்பை முன்னிறுத்தி ஒரு கருவியை உருவாக்க ஆயத்தமானேன். அப்போது நான் 3-ம் வகுப்பு மாணவி என்பதால், என்னுடைய சகோதரியும் எனக்கு பக்கபலமாக இருந்தார்.
பல கருவிகளை முயன்று பார்த்தோம். ஆனால் அவற்றுள் கிடைக்காத திருப்தி, இந்த கைக்கடிகார திட்டத்தில் கிடைத்தது. அதை மைய கருவாக மாற்றி, இக்னைட் விருதுக்கான போட்டிக்கு அனுப்பி வைத்தோம். எங்களது திட்டம் பிடித்து போகவே, கைக்கடி காரத்தை உருவாக்கி அனுப்புமாறு கூறினார்கள். அந்த நேரம் நான் 10 வயதிற்குட்பட்டு இருந்ததால் தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை விஞ்ஞானிகளும் உதவினார்கள். பல போராட்டங்களுக்கு பிறகு, பாதுகாப்பு கடிகாரம் உயிர்பெற்றது. 2017-ம் ஆண்டிற்கான அப்துல் கலாம் இக்னைட் விருதும் கிடைத்தது. அந்த போட்டியில், என்னுடைய கண்டுபிடிப்பு முதல் பரிசு பெற்றது குறிப்பிடத் தக்கது.
கடிகாரம் எப்படி இயங்குகிறது?
ஒருவர் நம்மை அச்சுறுத்தினாலோ அல்லது சீண்டினாலோ நமது உடலில் ரத்த ஓட்டம், இதய துடிப்பில் மாற்றங்கள் ஏற்படும். ஒருவித பட படப்பு ஏற்படும். அந்த நேரத்தில் உடலில் வெப்பநிலை (டெம்பரேச்சர்) வேறுபடும். அதை கொண்டு நான் இந்த கைக்கடிகாரத்தை தயாரித்திருக்கிறேன். அதாவது இந்த கைக்கடிகாரத்தை கட்டி இருக்க கூடியவர்கள் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டால் தானாக எதிரில் இருப்பவர்கள் முகத்தில் ஸ்பிரே செய்வதை போல வடிவமைத்தேன். முதலில் கை நடுக்கத்தை வைத்து தயாரித்தேன். அது வெற்றி பெறவில்லை. இதனால் உடல் வெப்பத்திற்கு ஏற்ப கைக்கடிகாரம் தானாக திறந்து மிளகாய் பொடி கரைசல் ஸ்பிரே செய்வதை போன்று மாற்றியமைத்தேன்.
கைக்கடிகார கண்டுபிடிப்பின் மூலம் கிடைத்த மறக்கமுடியாத அனுபவங்கள் உண்டா?
இருக்கிறது. இந்த கைக்கடிகாரத்தை கண்டுபிடித்ததற்காக, 2017-ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி என்னை அழைத்து பாராட்டினார். மேலும் 2018-ம் ஆண்டு இளம் கண்டுபிடிப்பாளர் விருது கிடைத்தது. அதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் பெற்றதோடு, சிறப்பு பாராட்டுகளையும் பெற்றேன். இதன் தொடர்ச்சியாக, 2020-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து பால சக்தி புரஸ்கார் விருதையும் பெற்றுள்ளேன். அவரை சந்தித்து பேசிய போது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. அந்த சமயத்தில் அவர் கையெழுத்து இட்ட கைக்கடிகாரம் ஒன்றை எனக்கு பரிசாக வழங்கினார். மேலும் புத்தகங்களையும் வழங்கினார். இதை தவிர இந்தோனேஷியாவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் சிறப்பு விருதும், தாய்லாந்து நாட்டில் கிடைத்த விருதும் என்னை நெகிழ செய்தது.
உங்களது முயற்சிக்கு, குடும்பத்தினரின் ஆதரவு இருக்கிறதா?
எனது தந்தை சந்திரசேகரன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணி புரிந்து வருகிறார். தாய் மங்களம் இல்லத்தரசி. அக்கா கிருத்திகா சென்னையில் பொறியியல் படிப்பு படிக்கிறார். நாங்கள் ஓசூரில் தர்கா அருகில் உள்ள கிருஷ்ணா நகரில் வசிக்கிறோம். என்னுடைய எண்ணத்திற்கு, வண்ணம் தீட்டி அழகு சேர்ப்பது, என் குடும்பம்தான். அவர்களது வழிகாட்டுதலில் மேலும் பல கருவிகளை கண்டுபிடிக்க ஆசைப்படுகிறேன்.