இரவு நேரங்களில் சாலையில் பயணிக்கும்போது சாலையோரம் அமைக்கப்பட்டிருக்கும் பலகைகள் தனியாக பொருத்தப்பட்ட விளக்குகள் மின் இணைப்பு இல்லாமலேயே பிரகாசமாக ஒளிருவதை பார்த்திருக்கலாம். இதற்குக் காரணம் பின்னோக்கு ஒளிப்பிரதிபலிப்பு (ரெட்ரோ ரிப்ளெக்ஷன்) எனப்படும் சிறப்புத் தொழில்நுட்பமாகும்.
இந்த பலகைகளின் மேற்பரப்பில் பளிச்சென்று ஒளியை பிரதிபலிக்கும் தாள்கள் பொருத்தப்பட்டிருக்கும். அவற்றில் ஆயிரக்கணக்கான மிகச்சிறிய நுண்ணிய கண்ணாடி மணிகள் (மைக்ரோஸ்கோபிக் கிளாஸ் பீட்ஸ்) அல்லது முப்பட்டக வடிவ நுண் அமைப்புகள் இடம் பெற்றிருக்கும்.
வாகனங்களின் முகப்பு விளக்குகளில் இருந்து வெளிப்படும் ஒளி இந்த பலகைகள் மீது படும்போது, அவற்றில் உள்ள நுண் அமைப்புகள் அந்த ஒளியை உள்வாங்கி மீண்டும் திருப்பி அனுப்பிவிடும். இதனால் வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு அந்த பலகைகள் மிகவும் பிரகாசமாக தெரிகிறது.
சாதாரண கண்ணாடிகள் ஒளியை வேறு திசையில் பிரதிபலிக்கும். ஆனால், பின்னோக்கு ஒளிப்பிரதிபலிப்புத் தொழில்நுட்பம் ஒளி வந்த திசையை நோக்கியே திருப்பி அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் இரவு நேரங்களில் எச்சரிக்கை பலகைகள், வேகக்கட்டுப்பாட்டு அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டி பலகைகளை வாகன ஓட்டிகள் தெளிவாக பார்ப்பதற்கு இந்த தொழில்நுட்பம் மூலம் வெளிப்படும் ஒளி உதவுகிறது.
அதேவேளையில் இந்த பலகைகள் தாமாகவே ஒளியை உருவாக்குவதில்லை. வாகனத்தில் இருந்தோ அல்லது வெளிப்புறத்தில் இருந்தோ ஒளி கிடைக்காவிட்டால் அவை பிரகாசமாக தெரியாது. அதாவது, வாகனங்களின் முகப்பு விளக்குகளே இந்த பலகைகள் இரவில் ஒளிர்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.