புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் இன்று தனது 32-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்திய அணியில் இடம்பிடித்த பிறகும், விக்கெட் கீப்பர் இடத்துக்கான கடும் போட்டியால் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இருப்பினும், தொடக்க வீரராகக் களமிறங்க வாய்ப்பு கிடைத்த பிறகு தனது அதிரடி ஆட்டத்தால் தனி முத்திரை பதித்தார்.
இந்திய அணிக்காக இதுவரை 82 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன், 74 இன்னிங்ஸ்களில் 1,842 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3 சதங்கள், 11 அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 111 ரன்கள்.
16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 510 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம், 3 அரைசதங்கள் அடங்கும்.
2026-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்கு சஞ்சு சாம்சன் முக்கியப் பங்காற்றினார். இந்தத் தொடரில் 5 இன்னிங்ஸ்களில் 321 ரன்கள் குவித்த அவர், தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
இதன் மூலம் ஒரே டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை முறியடித்தார். 2014-ம் ஆண்டு உலகக் கோப்பையில் விராட் கோலி 319 ரன்கள் எடுத்ததே இதற்கு முன்பு இந்திய வீரர் ஒருவரின் அதிகபட்சமாக இருந்தது.
இந்தத் தொடரில் சஞ்சு 24 சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் ஒரே டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 46 பந்துகளில் 89 ரன்கள் விளாசினார். ஆண்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
2024-ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக 47 பந்துகளில் 111 ரன்கள் விளாசி டி20 சர்வதேசப் போட்டியில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றார்.
வங்காளதேசத்துக்கு எதிராக 111 ரன்களும், அதற்கடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 107 ரன்களும் எடுத்தார். இதன் மூலம் அடுத்தடுத்த டி20 சர்வதேச இன்னிங்ஸ்களில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். உலக அளவில் இந்தச் சாதனையைப் படைத்த நான்காவது வீரர் சஞ்சு ஆவார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நீண்ட காலம் விளையாடிய சஞ்சு சாம்சன், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.
இதுவரை 191 போட்டிகளில் விளையாடி 5,181 ரன்கள் குவித்துள்ளார். இதில் 5 சதங்கள், 27 அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 119 ரன்கள். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளார்.
2017, 2019, 2021, 2026 ஆகிய ஆண்டுகளில் அந்தந்த ஐபிஎல் சீசனின் முதல் சதத்தை அடித்துள்ளார். இதன் மூலம் 4 சீசன்களில் முதல் சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் என 3 அணிகளுக்காகவும் சதம் அடித்துள்ளார்.
2024, 2026 டி20 உலகக் கோப்பையை, 2025 ஆசியக் கோப்பையை, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியிலும் இடம்பிடித்தார்.
2024-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் - திலக் வர்மா ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 210 ரன்கள் சேர்த்தது.
இதன் மூலம், டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற சாதனையைப் படைத்தனர். அந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 109 ரன்களும், திலக் வர்மா 47 பந்துகளில் 120 ரன்களும் எடுத்தனர்.
இவ்வாறு தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த சஞ்சு சாம்சன், தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார். தனது 32-வது பிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்கு ரசிகர்களும், கிரிக்கெட் பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.