சிறப்புக் கட்டுரைகள்

அறிவியல் அறிஞர் சர்.சி.வி.ராமன்

ராமனின் விளைவு வெளியிடப்பட்ட பிப்ரவரி 28-ந்தேதி தேசிய அறிவியல் தினமாக அறிவிக்கப்பட்டது.

திருச்சி அருகே உள்ள திருவானைக்காவலில் அறிவியல் அறிஞர் சர்.சந்திரசேகர் வெங்கட்ராமன் 1888-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ந்தேதி பிறந்தார். அவருடைய தந்தை சந்திரசேகர் அய்யர். அவர் விசாகபட்டினத்தில் உள்ள கல்லூரியில் இயற்பியல் விரிவுரையாளராக பணியாற்றினார். அதனால் சந்திரசேகர் வெங்கட்ராமன் அங்கேயே தன் பள்ளி படிப்பை முடித்தார்.

பின்னர் 1904-ம் ஆண்டு சென்னையில் உள்ள மாநில கல்லூரியில் அவர் சேர்ந்தார். அங்கு பி.ஏ. பட்டப்படிப்பை முடித்தார். எம்.ஏ., பட்டப்படிப்பையும் அதே கல்லூரியில் தொடர்ந்தார். 1907-ம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதே ஆண்டு பிப்ரவரி மாதம் நிதித்துறை தேர்வு எழுதி முதலிடம் பிடித்தார். ஜூன் மாதம் கொல்கத்தாவில் உள்ள கணக்குத்துறையில் தலைமை அலுவலராக பணியில் சேர்ந்தார்.

அலுவலக நேரம் தவிர்த்து காலை மற்றும் மாலை நேரங்களை இயற்பியல் ஆய்வுக்கூடங்களில் கழித்தார். அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபாடு கொண்டிருந்தார். எனவே தன் வீட்டின் ஒரு பகுதியை அறிவியல் ஆய்வுகூடமாக மாற்றினார். கையில் கிடைத்த பொருட்களை கொண்டு கருவிகளை உருவாக்கினார். அந்த கருவிகளை வைத்துக்கொண்டு தனது ஆய்வை தொடங்கினார். திடீரென்று தனது அரசு பணியை வேண்டாம் என்று முடிவு செய்தார்.

1917-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக சேர்ந்து பணியாற்றினார். இந்த நிலையில் 1921-ம் ஆண்டு கோடைகாலத்தில் முதன் முதலாக ஐரோப்பாவுக்கு கடல் பயணம் செய்தார். அப்போது ஆழ்கடலின் நீரில் இருந்து வெளிப்பட்ட அழகிய நீல நிறம் ராமனின் கவனத்தை ஈர்த்தது.

சந்திரசேகர் வெங்கட்ராமன் அறிவியல் துறைக்கு ஆற்றிய சேவையை பாராட்டி லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியின் பெல்லோசிப் 1924-ம் ஆண்டு வழங்கப்பட்டது.

ஐரோப்பாவில் இருந்து இந்தியா திரும்பியவுடன் காற்று, நீர், பனிக்கட்டி மற்றும் குவார்பஸ் போன்ற ஒளி ஊடுருவும் ஊடகங்களின் மூலக்கூறுகளால் ஏற்படும் ஒளிச்சிதறல் பற்றி கருத்தியல் மற்றும் சோதனை இயல் ஆய்வுகளை மேற்கொண்டார். அவர் செய்த சோதனையில் சிதறிய ஒளியானது படுகின்ற ஒளியில் இருந்து மாறுபட்டது என்பதை காட்டியது. இதுவே புதிய விளைவுகளை கண்டுபிடிக்க வழிவகுத்தது. இதற்காக ராமன் தொடர்ந்து 7 ஆண்டுகள் பணியாற்றினார். 1928-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி தான் கண்டுபிடித்த விளைவுக்கு ராமன் விளைவு என்று பெயரிட்டார்.

1929-ம் ஆண்டு இங்கிலாந்து அரசி சர் என்ற பட்டத்தை ராமனுக்கு வழங்கினார். இதனால் தான் அவர் சர்.சி.வி.ராமன் என்று அழைக்கப்படுகிறார். அதே ஆண்டு பிரிட்டன் அரசு அவருக்கு நைட்ஹீட் என்ற பட்டம் வழங்கி கவுரவித்தது.

ராமன் விளைவை கண்டுபிடித்ததற்காக அவருக்கு 1930-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி நோபல் பரிசு வழங்கப்பட்டது. மைசூர் ராஜா சபா பூசன் என்ற பட்டத்தை ராமனுக்கு அளித்தார்.

அதன் பின்னர் 1933-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் என்ற நிறுவனத்தில் முதல் இந்திய இயக்குனராக பணியில் சேர்ந்தார்.

1943-ம் ஆண்டு ராமன் நிறுவனம் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கினார். தனது ஆராய்ச்சிகளை 82 வயது வரை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். ஆனால் ராமனின் ஆராய்ச்சிகளுக்கு அவரது மரணம் முற்றுப்புள்ளி வைத்தது. 1970-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ந்தேதி இறந்தார்.

அவருக்கு, இத்தாலி நாட்டின் உயர்பதக்கமான மேட்யூச்சி பதக்கம், பிலிடெல்பியா நிறுவனத்தில் பிராங்களின் பதக்கம், இந்தியாவில் பாரத ரத்னா விருது, அகில உலக லெனின் பரிசு ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது.

ராமனின் விளைவு வெளியிடப்பட்ட பிப்ரவரி 28-ந்தேதி தேசிய அறிவியல் தினமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.