மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், அதன் அழகை அனுபவிக்க தொடங்கியிருக்கிறோம். ஓய்வு நேரத்தில், வீட்டின் பால்கனியிலோ அல்லது ஜன்னலோரத்திலோ நின்றபடி மழையை ரசிப்பது தனி அனுபவம். அதுவும் இதமான இஞ்சி டீ அல்லது காபி குடித்துக்கொண்டே மழையை பார்ப்பது தனி சுகம்.
இவ்வாறு மழையின் அழகை ரசிப்பது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தாலும், அன்றாட செயல்பாடுகள், பாதுகாப்பு முறைகள் மற்றும் வீட்டின் உள் அலங்காரத்தில் சில எளிய திருத்தங்களை செய்தால் மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடியும்.
வீட்டிற்குள் நுழையும் இடத்திலேயே மழை கோட் வைப்பதற்கான ஹேங்கர் பொருத்தப்பட வேண்டும். அப்போதுதான் மழை பெய்யும்போது நனைந்த கோட் அணிந்தபடி வீட்டுக்குள் நுழைவதை தவிர்க்க முடியும். மழை கோட் மற்றும் காலணிகளை வெளியிலேயே வைத்துவிட்டு அறைக்குள் நுழைவதால் தரை ஈரமாவதை தடுக்க முடியும். மேலும் வரவேற்பறை அல்லது பிரதான வாசலை ஒட்டிய ஏதாவது ஒரு மூலையில் எப்போதும் குடைகளை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் குடையை தேடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.
மழைக்காலத்தில் வீட்டிற்குள் இயற்கையான வெளிச்சம் அதிக அளவில் வருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இயற்கையான வெளிச்சமும் காற்றும் அறையில் உள்ள ஈரப்பதத்தின் அளவை குறைப்பதற்கு உதவும். நகர்ப்பகுதிகளில் உள்ள நெருக்கடியான குடியிருப்புகளில் இயற்கையான வெளிச்சம் வருவதற்கு வாய்ப்பு குறைவு. எனினும் மழை பெய்து நின்றதும் ஜன்னலை திறந்து வைத்தால், இயற்கையாக வரும் காற்று ஈரப்பத்தை குறைப்பதுடன், ஈர வாசனையும் போகும்.
பொதுவாக சமையறையில் பாத்திரங்கள் தேய்க்கும் சிங்க் பகுதியைச் சுற்றிலும் ஈரமாகவே இருக்கும். அடிக்கடி துடைக்காவிட்டால் தரைப்பகுதி பிசுபிசுவென ஆகிவிடும். அதுவும் மழைக்காலத்தில் இந்த ஈரம் உலர்வதற்கு வெகுநேரமாகும். எனவே, மழைக்காலத்தில் சமையல் செய்து முடித்ததும் அடுப்பு பகுதி மற்றும் சிங்க் உள்ள பகுதியைச் சுற்றி மெல்லிய துணியால் துடைத்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஈரம் விரைவில் உலர்ந்து விடும். கிச்சனை துடைத்த துணியை காற்றோட்டம் உள்ள இடத்தில் காயவைக்க வேண்டும், அல்லது அறையில் உள்ள மின்விசிறிக்கு கீழே தரையில் விரித்து காய வைக்கலாம்.
மழைக்காலத்தில் துணிகளை துவைத்து காயவைப்பது இல்லத்தரசிகளுக்கு பெரிய பிரச்சினை. அதுவும் வேலைக்கு செல்லக்கூடிய பெண்களுக்கு கேட்கவே வேண்டாம். எப்போது மழை வரும் என்று தெரியாத நிலையில், துவைத்த துணிகளை கொடிகளில் காயப்போட்டு வேலைக்கு சென்றால், திரும்பி வரும்போது துணிகள் காய்ந்திருக்குமா? மழையில் நனைந்து மேலும் ஈரமாகியிருக்குமா? என்ற பயம் இருந்துகொண்டே இருக்கும்.
எனவே, மழைக்காலங்களில் வெளியில் உள்ள கொடிகளில் துணிகளை காயவைப்பது சரியாக இருக்காது. வீட்டின் பால்கனி ஓரங்களில் உள்ள கொடிகளில் துணிகளை காயப்போடலாம். வீட்டின் அறைகளில் தனியாக கயிறுகளை கட்டி துணிகளை போட்டு, மின்விசிறியை சுழல விடலாம். வெளியில் இருப்பதை விட அறையில் உள்ள மின்விசிறி காற்றோட்டத்தில் துணிகள் விரைவாக உலர்ந்துவிடும்.
மழைக்காலத்தில் கதவு மற்றும் ஜன்னல் திரைகளும், சோபா உறைகளும் பிரகாசமான நிறங்களைக் கொண்டதாக இருக்கட்டும். மங்கலான நிறங்களை மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டும். பிரகாசமான நிறங்களைக் கொண்ட ஜன்னல் திரைகள், மழைக்காலத்தின் சோம்பலை அகற்றி மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.
மழைக்காலத்தில் கார்பெட் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். தரையின் ஈரத்தை அவை ஈர்த்து வைத்துக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். வசதி உள்ளவர்கள் காலணிகளை கொஞ்சம் கூடுதலான எண்ணிக்கையில் வைத்துக்கொள்வது மழைக்காலத்தை சமாளிப்பதற்கான எளிய வழி.
கதவு மற்றும் ஜன்னல் திரைகளுக்கு பருத்தி துணிவகைகளைப் பயன்படுத்தாமல் பாலியஸ்டர் அல்லது நைலான் துணிவகைகளைப் பயன்படுத்த வேண்டும். இந்த துணிகள் ஈரமானால் எளிதில் உலரும் தன்மை வாய்ந்தவை. எனவே மழைக்காலத்தில் இவற்றைப் பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.
மழைக்காலத்தில் தரை, சுவர், கூரை என்று வீடு முழுவதுமே ஈரமாகிறது. அறைகளில் ஈர வாசத்தை போக்குவதற்கு இயற்கையான முறைகளை பின்பற்றலாம். மின்சாரம் இல்லாத நேரத்தில் வாசனை திரவியங்கள் கலந்த மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்துவதால் அறை மணமாக இருக்கும். ஆடைகள் வைக்கும் அலமாரிகளில் கற்பூரங்களை வைப்பதால் ஈர வாசத்தில் இருந்து ஆடைகளை பாதுகாக்க முடியும்.