கூழைக்கடா பறவை 
சிறப்புக் கட்டுரைகள்

விண்ணை தொடும் வேட்டைக்காரன்: கூழைக்கடா பறவைகளின் வியப்பூட்டும் வாழ்க்கை ரகசியங்கள்

ஆங்கில எழுத்தான வி வடிவத்தில் அணிவகுத்து செல்வது பார்ப்பதற்கு ராணுவப் பேரணி போலப் பிரம்மாண்டமாக இருக்கும்.

நீர்நிலைகளில் அம்பு போல் பாய்ந்து, மீன்களை அள்ளும் விசித்திரப் பறவைதான் கூழைக்கடா. பார்ப்பதற்கு பெரிய உடலமைப்பை கொண்டிருந்தாலும், இதன் வேட்டைத் திறன் அசாத்தியமானது. உலகளவில் வியப்பை ஏற்படுத்தும் இந்த கூழைக்கடாக்களை பற்றிய சுவாரசியமான தகவல்களை இங்கே காண்போம்.

'கூழை' என்பதன் அர்த்தம்

தமிழ் அகராதியின்படி, 'கூழை' என்றால் "குட்டையான" அல்லது "வாலில்லாத" என்று பொருள். கூழைக்கடா பறவையின் உடலமைப்பை கவனித்தால், அதன் இறக்கைகளும் உடலும் மிக பெரியதாக இருக்கும். ஆனால், அதன் வால் பகுதி மட்டும் மிக குட்டையாக, இல்லாதது போல் சுருங்கி இருக்கும். இதனால் தான் இதற்கு 'கூழை' என்ற அடைமொழி வந்தது.

'கடா' என்பதன் அர்த்தம்

பொதுவாக தமிழில் 'கடா' அல்லது 'கிடா' என்றால் ஆடு, எருமை போன்றவற்றின் வலிமையான ஆண் விலங்கு என்று பொருள். பறவை இனங்களில், பார்ப்பதற்கு ஆட்டுக்கிடா போல அசுர பலத்துடனும், பிரம்மாண்டமான உடலமைப்போடும் கம்பீரமாக காட்சியளிப்பதால், இதற்கு 'கடா' என்ற பெயர் சூட்டப்பட்டது.

பை போன்ற அலகு

கூழைக்கடா பறவைகளின் மிக முக்கிய அடையாளமே அதன் நீளமான அலகும், அதற்கு கீழே இருக்கும் தோல் பையும்தான். இந்த பையை 'குலார் பவுச்' என்று அழைக்கிறார்கள். இது மீன்களை பிடிப்பதற்கான ஒரு இயற்கையான வலை போல செயல்படுகிறது. தண்ணீரோடு சேர்த்து மீனை அள்ளியவுடன், தண்ணீரை மட்டும் வெளியேற்றிவிட்டு, மீனை அப்படியே விழுங்கிவிடும்.

கூட்டு வேட்டை

மனிதர்களை போலவே இந்த பறவைகளும் மிகவும் புத்திசாலித்தனமானவை. தனியாக வேட்டையாடுவதை விட, கூட்டமாக சேர்ந்து வேட்டையாடுவதையே இவை அதிகம் விரும்புகின்றன. நீர்நிலைகளில் ஒரு வளைவு போல அணிவகுத்து நின்று, மீன்களை ஆழமில்லாத பகுதிக்கு விரட்டி சென்று, எளிதாக ஒட்டுமொத்தமாக அள்ளிக் கொள்ளும்.

நீண்ட தூரப் பயணம்

இவை சிறந்த வலசை போகும் பறவைகள் ஆகும். குளிர் காலத்தில் மிதவெப்ப நாடுகளை நோக்கி பல்லாயிரக்கணக்கான மைல்கள் பறந்து வருகின்றன. இந்தியாவின் பல்வேறு சரணாலயங்களுக்கும், தமிழகத்தில் உள்ள கூந்தன்குளம் போன்ற நீர்நிலைகளுக்கும் ஆண்டுதோறும் இவை லட்சக்கணக்கில் வருகை தருகின்றன.

வி வடிவப்பயணம்

பல்லாயிரக்கணக்கான மைல்கள் பறந்து வலசை போகும்போது, வானத்தில் ஆங்கில எழுத்தான வி('V') வடிவத்தில் அணிவகுத்து செல்வது பார்ப்பதற்கு ராணுவப் பேரணி போல பிரம்மாண்டமாக இருக்கும்.