சிறப்புக் கட்டுரைகள்

தூக்கம் மட்டுமே ஓய்வல்ல..

உணர்ச்சிவசப்பட்டாலோ, உற்சாகமின்றி சோர்வாக இருப்பதாக உணர்ந்தாலோ உணர்ச்சிகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியமானது.

இரவில் 8 மணி நேரம் தூங்கி எழுந்தால் மட்டும் போதாது. அதுவே உடலுக்கும், உள்ளத்துக்கும் போதுமான ஓய்வை கொடுத்துவிடும் என்றும் கருதக்கூடாது. தூக்கத்துக்கும், ஓய்வுக்கும் இடையே வித்தியாசங்கள் இருக்கின்றன. அவற்றை ஒன்றொடொன்று குழப்பிக்கொள்ளக்கூடாது. ஒவ்வொருவருக்கும் 7 வகையான ஓய்வு அவசியமானது. அது பற்றி பார்ப்போம்.

1. உடலுக்கு ஓய்வு

இதுதான் நமக்குத் தேவையான முதல் வகையான ஓய்வு. இதனை செயலுடன் கூடிய ஓய்வு, செயலற்ற ஓய்வு என இரு வகைப்படுத்தலாம். செயலற்ற ஓய்வுடன் தூக்கத்தை ஒப்பிடலாம். யோகா, தியானம், மசாஜ் போன்ற செயல்பாடுகளை செயலுடன் கூடிய ஓய்வாக கருதலாம். இந்த ஓய்வு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். உடலுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்கும். உடலை புதுப்பிக்கவும் வழிவகை செய்யும்.

2. மனதுக்கு ஓய்வு

உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும். எந்தவொரு வேலையையும் ஆத்மார்த்தமாக செய்ய தொடங்க வேண்டும். அவசரப்படாமல் நிதானமாகவும், விவேகமாகவும் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் மறதி, எரிச்சல் எட்டிப்பார்க்கும். வேலையில் கவனம் செலுத்துவதற்கும் கடினமாகிவிடும், ஓய்வெடுக்கவும் சிரமமாகிவிடும். இரவு தூக்கமும் பாதிப்புக்குள்ளாகும்.

வேலையை முடிக்க முடியவில்லையே என்ற சிந்தனைதான் மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் மனதுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும். வேலைக்கு மத்தியில் சிறிது நேரம் இடைவெளி எடுங்கள். தூங்குவதற்கும், ஓய்வெடுப்பதற்கும் கடினமாக இருந்தால் ஒரு நோட்டில் உங்களை தொந்தரவு செய்யும் விஷயங்களை எழுதி வையுங்கள். பின்பு அவற்றில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளை பற்றி ஆராயுங்கள்.

3. உணர்வுக்கு ஓய்வு

கணினி, செல்போன் திரையில் அதிக நேரம் செலவிடுவது, எப்போதும் பின்னணி இரைச்சல் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் சூழலில் வசிப்பது, தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருப்பது போன்ற காரணங்களால் உணர்வுகளுக்கும் உரிய ஓய்வு கொடுக்க வேண்டியிருக்கும். வேலைக்கு இடையே இரண்டு நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுப்பது, இணையதளம் போன்ற சமூக வலைத்தளங்களை காலை முதல் மாலை வரை அறவே தவிர்த்துவிடுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடலாம்.

4. ஆக்கப்பூர்வமான ஓய்வு

கவிஞர்கள், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களை ஈர்க்கும் தன்மை இயற்கைக்கு உண்டு. தங்கள் படைப்புகளை உருவாக்குவதற்கு இயற்கையோடு நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வார்கள். அத்தகைய படைப்பாற்றல் திறன் மீது உங்களுக்கு ஆர்வம் இல்லாவிட்டாலும் இயற்கையோடு இணைவதற்கு முயற்சி செய்யுங்கள். அதற்காக நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அருகில் உள்ள பூங்காவுக்கு சென்று அங்கு ஆசுவாசமாக அமர்ந்து இயற்கையை ரசித்தாலே போதுமானது. அத்தகைய ஆக்கப்பூர்வமான ஓய்வு மனதுக்கு புத்துணர்வூட்டும். உங்களை ஊக்குவிக்க தூண்டும் விஷயங்களில் ஈடுபாடு கொள்ளுங்கள். பணி புரியும் இடத்தில் உங்களுக்கு பிடித்தமான கலை படைப்புகளை அலங்கரிக்கலாம்.

5. உணர்ச்சிக்கு ஓய்வு

எதிர்மறையான எண்ணங்கள் மனதை சூழும்போது ‘நான் நன்றாக இருக்கிறேன்’ என்று கூறி மனதை திடப்படுத்திக்கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்டாலோ, உற்சாகமின்றி சோர்வாக இருப்பதாக உணர்ந்தாலோ உணர்ச்சிகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியமானது. உங்கள் முகமே உங்கள் மனநிலையை வெளிக்காட்டிவிடும். உங்கள் நலம் விரும்பிகள் ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று நலம் விசாரித்தால் ‘நான் நன்றாக இருக்கிறேன்’ என்று பொய் சொல்ல வேண்டியதில்லை. உங்களுடைய உண்மையான உணர்வுகளை வெளிப்படையாக தெரிவிப்பதற்கு முயற்சியுங்கள்.

6. ஆன்மிக ஓய்வு

ஒருவருக்கு தேவைப்படும் இறுதி வகையான ஓய்வு இது, உடல் மற்றும் மன வடிவத்திற்கு மேலாக ஆழமான மற்றும் உயர்ந்த உணர்வுடன் இணைவதை இது குறிக்கிறது. அதை செய்வதற்கு பல வழிகள் உள்ளன.

அவற்றுள் பிரார்த்தனையில் ஈடுபடுவது சிறப்பானது. தியானமும் மேற்கொள்ளலாம். சமூக பணிகளில் சேவை உள்ளத்தோடு ஈடுபடலாம். எனவே, நன்றாக உறங்குவது என்பது ஓய்வெடுப்பதாக அர்த்தமல்ல. நிறைவான வாழ்க்கைக்கு, இத்தகைய ஓய்வும் போதுமான அளவு தேவை. ஓய்வு நாளில் அதற்காக நேரத்தை செலவிடுவது வாழ்க்கையை வளப்படுத்தும்.