அவசரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் பலருக்கு 24 மணி நேரம் போதுமானதாக இருப்பதில்லை. தூக்கம், வேலை, தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றுக்கு 24 மணி நேரத்துக்குள் நேரத்தை ஒதுக்க முடியாமல் தவிக்கின்றனர். 24 மணி நேரத்தில் பெரும்பாலான நேரத்தை வேலைக்காக செலவிடுபவர்கள் உள்ளனர். சிலர் தூக்கத்தை தியாகம் செய்கிறார்கள். இன்னும் சிலர் உடற்பயிற்சி, குடும்பம், பொழுதுபோக்கு போன்றவற்றுக்கு நேரமே ஒதுக்குவதில்லை. இந்த வாழ்க்கை முறையே நாளடைவில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு எளிய தீர்வாகவே '8-8-8 விதி' பரிந்துரைக்கப்படுகிறது.
ஒரு நாளின் 24 மணி நேரத்தை மூன்று சம பாகங்களாக பிரிப்பது தான் இந்த விதியின் அடிப்படை சாரம்சமாகும். அதாவது,
8 மணி நேரம் - தூக்கம்
8 மணி நேரம் - வேலை
8 மணி நேரம் - தனிப்பட்ட வாழ்க்கை என நேரத்தை பிரித்து செயல்படுவதாகும்.
உடலுக்கு போதுமான ஓய்வு கிடைக்க தூக்கம் அவசியமானது. 8 மணி நேரம் தூங்காமல் தொடர்ந்து தூக்க குறைபாடு பிரச்சினையை எதிர்கொண்டால் உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கக்கூடும்.
உடல் செல்கள் புதுப்பிக்கப்படும்.
நோய் எதிர்ப்பு சக்தி வலுவடையும்.
ஹார்மோன்கள் சீராக செயல்படும்.
மூளையின் செயல்திறன் மேம்படும்.
8 மணி நேரம் வேலைக்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும், சில சமயங்களில் கூடுதல் நேரம் வேலை பார்க்க நேரிடலாம். 8 மணி நேர வேலை என்பது ஒரு நேர மேலாண்மை அணுகுமுறை மட்டுமே; அனைவரும் கட்டாயமாக 8 மணி நேரம்தான் வேலை செய்ய வேண்டும் என்பதில்லை. ஆனால் தொடர்ந்து நீண்ட நேரம் வேலை செய்வது மனஅழுத்தத்தை அதிகரிக்கச் செய்யலாம்.
மேலும், ரத்த அழுத்தம் அதிகரிப்பது, இன்சுலின் எதிர்ப்புத்தன்மை மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும். எனவே, வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே தெளிவான எல்லையை அமைத்துக்கொள்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும்.
தூக்கம் மற்றும் வேலைக்காக ஒதுக்கப்படும் நேரத்தைத் தவிர, மீதமுள்ள 8 மணி நேரத்தை வெறும் ஓய்வுக்காக மட்டுமே பயன்படுத்தாமல், உடற்பயிற்சி, குடும்பத்தினருடன் நேரம் செலவிடுதல், புத்தகம் வாசித்தல், தியானம் அல்லது மன அமைதியை அளிக்கும் பயிற்சிகளில் ஈடுபடுதல், நண்பர்களுடன் உரையாடுதல் போன்ற ஆரோக்கியமான செயல்பாடுகளுக்கு பயன்படுத்தலாம்.
அதேபோல், இந்த 8 மணி நேரத்தில்தான் உணவு உட்கொள்வது, குளிப்பது, பயணம் செய்வது, வீட்டு வேலைகளை மேற்கொள்வது உள்ளிட்ட அன்றாட செயல்பாடுகளும் அடங்கும். எனவே, இந்த நேரத்தை தனிப்பட்ட தேவைகள் மற்றும் உடல், மன ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில் திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
'8-8-8 விதி' அனைவருக்கும் பொருந்தாமல் போகலாம் என்கிறார்கள், மருத்துவர்கள். ஏனெனில் பெரும்பாலான பெரியவர்களுக்கு 7- 9 மணி நேர தூக்கம் பரிந்துரைக்கப்படுகிறது. 8 மணி நேரம் என்பது பொதுவான வழிகாட்டுதலாகக் கருதப்படுகிறது. குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், அவசரகால சேவை பணியாளர்கள், இரவு நேரம் பணிபுரிபவர்கள் போன்றவர்களால் இந்த அட்டவணையை அப்படியே பின்பற்ற முடியாமல் போகலாம். முடிந்தவரை போதுமான ஓய்வு மற்றும் தூக்கத்தை உறுதி செய்துகொள்வது நல்லது.
அதேபோல் நீரிழிவு நோயாளிகள் உடற்பயிற்சி மற்றும் உணவு நேரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மூட்டு வலி உள்ளவர்கள் நீச்சல் அல்லது நடைப்பயிற்சி போன்ற மென்மையான பயிற்சிகளை தேர்வு செய்யலாம். குழந்தைகளை பராமரிக்கும் பெற்றோருக்கு நெகிழ்வான அட்டவணை தேவைப்படலாம். 8-8-8 விதி என்பது கட்டாயமாக பின்பற்ற வேண்டிய விதிமுறை அல்ல. உங்கள் வயது, உடல்நிலை, வேலை, குடும்ப சூழல் ஆகியவற்றுக்கு ஏற்ப இந்த முறையை மாற்றிக்கொள்ளலாம். அதேவேளையில் ஆரோக்கியமான பழக்கங்களை கடைப்பிடிக்க மறக்காதீர்கள்.