கொசு- சர் ரொனால்ட் ராஸ்  
சிறப்புக் கட்டுரைகள்

உருவத்தில் சிறியது..ஆனால் பாதிப்போ அதிகம்..இன்று உலக கொசுக்கள் தினம்

கொசுக்களின் உற்பத்தியைத் தடுப்பதே இந்நோய்களில் இருந்து தப்பிப்பதற்கான ஒரே வழியாகும் என பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

சென்னை,

உலகெங்கும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி "உலக கொசு தினம்" கடைப்பிடிக்கப்படுகிறது. மனிதர்களுக்கு கொசுக்களால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் அவற்றின் மூலம் பரவும் நோய்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே இந்நாளின் முதன்மை நோக்கமாகும்.

வரலாற்றுப் பின்னணி

கடந்த 1897 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று, பெண் அனோபிலிஸ் வகை கொசுக்களின் மூலமே மனிதர்களுக்கு மலேரியா காய்ச்சல் பரவுகிறது என்ற மிக முக்கியமான மருத்துவ உண்மையை பிரிட்டிஷ் மருத்துவர் சர் ரொனால்ட் ராஸ் கண்டறிந்தார். அவரது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்பைப் போற்றும் வகையிலும், கொசுக்களால் வரும் நோய்களில் இருந்து மனிதர்களைப் பாதுகாக்கும் விழிப்புணர்வை பரப்பவும் இந்நாள் ஆண்டுதோறும் உலகளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆபத்தான நோய்கள்

உலகில் மனிதர்களுக்கு அதிக பாதிப்பையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் உயிரினங்களில் கொசுக்கள் முதலிடத்தில் உள்ளன. இவற்றின் மூலம் பின்வரும் ஆபத்தான காய்ச்சல்கள் பரவுகின்றன. மலேரியா காய்ச்சல் அனோபிலிஸ் கொசுக்கள் மூலமும் டெங்கு காய்ச்சல் ஏடிஸ் கொசுக்கள் மூலமும் ஏற்படுகின்றன. மேலும் சிக்குன்குனியா ஜிகா வைரஸ் மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களும் கொசுக்களால் ஏற்படுகிறது.

தடுப்பு - பாதுகாப்பு முறைகள்

கொசுக்களின் உற்பத்தியைத் தடுப்பதே இந்நோய்களில் இருந்து தப்பிப்பதற்கான ஒரே வழியாகும் என பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். வீட்டைச் சுற்றிலும், மொட்டை மாடிகளிலும் டயர்கள், உடைந்த குடங்கள், இளநீர் ஓடுகள் போன்றவற்றில் மழைநீர் தேங்காமல் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். பகல் மற்றும் இரவு நேரங்களில் கொசுக்கடிக்கு உள்ளாவதைத் தவிர்க்க முழுக்கை ஆடைகளை அணிய வேண்டும்.

ஜன்னல்களுக்கு கொசு வலைகளைப் பயன்படுத்தலாம். குடிநீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை எப்போதும் மூடி வைத்திருக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை அவற்றை நன்கு தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும்.பொதுமக்கள் அனைவரும் தங்கள் இருப்பிடங்களைச் சுற்றி நீர் தேங்காமல் தூய்மையாகப் பராமரிப்பதன் மூலம், கொசுக்களால் பரவும் நோயற்ற ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்.