சிறப்புக் கட்டுரைகள்

புகைப்பழக்கம்-மன அழுத்தம்: முதுகு வலியை ஏற்படுத்துமா?

உடல் தசைகள் முழுவதும் சீராக அமைந்து உடல் எடையை சுமப்பதற்கு ஏற்பவே முதுகெலும்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், முறையாக உடற்பயிற்சி மேற்கொள்ளாதவர்கள் முதுகுவலி பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். இவை மட்டுமே முதுகு வலி ஏற்படுவதற்கு காரணமல்ல. தவறான பழக்க வழக்கங்களும் முதுகுவலி பாதிப்பை அதிகப்படுத்துகின்றன. அவை பற்றி பார்ப்போம்.

* முதுகின் மேல்பகுதி, நடுப்பகுதி, கீழ்பகுதி என மூன்று வகையான முதுகுவலி பிரச்சினைகள் இருக்கின்றன.

* புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் முதுகுவலி பாதிப்புக்கு அதிகம் ஆளாவார்கள். தொடர்ந்து புகைப்பிடிப்பதன் மூலம் முதுகெலும்பில் சிதைவு ஏற்படக்கூடும். சிகரெட்டில் இருக்கும் நிகோடின் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி முதுகெலும்பை பலவீனப்படுத்திவிடும். முதுமை பருவத்தை எட்டும்போது அதன் பாதிப்பு அதிகமாகும். கடும் முதுகுவலியால் அவதிப்பட நேரிடும்.

* மன அழுத்தமும் முதுகுவலி பிரச்சினைக்கு வித்திடும். மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது முதுகு தசைகள் பதற்றமடையை ஆரம்பித்துவிடும். முதலில் முதுகுவலி குறைவாக இருக்கும். நாட்கள் செல்ல செல்ல முகுதுவலியின் தீவிரம் அதிகமாக தொடங்கிவிடும்.

* உடல் எடையை கட்டுக்கோப்பாக பராமரிக்க விரும்புபவர்களில் பெரும்பாலானோர் ஜிம்முக்கு சென்று சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்கிறார்கள். இப்போது நிறைய பேர் வீடுகளிலேயே சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்ள தொடங்கிவிட்டார்கள். அந்த பயிற்சியை முறையாக மேற்கொள்ளாவிட்டால் முதுகு தசைகள் அழுத்தத்திற்கு உள்ளாகும். தசைகளின் செயல்பாடு அதிகரிக்கும்போது முதுகுவலி பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும்.

* உடல் தசைகள் முழுவதும் சீராக அமைந்து உடல் எடையை சுமப்பதற்கு ஏற்பவே முதுகெலும்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதிக எடை அல்லது உடல்பருமனாக இருக்கும்போது அந்த கூடுதல் எடையை தாங்குவதற்கு முதுகெலும்பு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இறுதியில் எலும்பு தசைகள் சேதமடைந்து முதுகு வலியை ஏற்படுத்திவிடும்.

* இரு கால்களின் நீளத்தில் வேறுபாடுகளை கொண்டவர்கள் முதுகுவலியால் பாதிக்கப்படுவார்கள். கால்களின் நீளத்தில் 5 மி.மீ. சிறிய வேறுபாடு இருந்தால்கூட பாதிப்பை ஏற்படுத்திவிடும். இரு கால்களின் உயரத்துக்கு ஏற்ப ஷூக்களை சமநிலைப்படுத்தி அணிவது நல்லது.

* தசை நார்களில் ஏற்படும் காயங்களுக்கும், முதுகுவலிக்கும் தொடர்பு இருக்கிறது. காயங்கள் வலியை ஏற்படுத்தும்போது முதுகெலும்பை சுற்றிலும் பாதிப்பு உருவாகும். அது முதுகுவலியை அதிகப்படுத்திவிடும்.