சிறப்புக் கட்டுரைகள்

நிதி ஆண்டின் 3-வது காலாண்டில் சூரியசக்தி மின் உற்பத்தி திறன் 1,897 மெகா வாட் அதிகரிப்பு

நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (2019 அக்டோபர்-டிசம்பர்) சூரியசக்தி மின் உற்பத்தி திறன் 1,897 மெகா வாட் அதிகரித்து இருக்கிறது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

இயற்கை ஆதாரங்கள்

பாரம்பரிய முறைகளை தவிர்த்து சூரியசக்தி, காற்று, நீர் போன்ற இயற்கை ஆதாரங்கள் வாயிலாக பெறும் மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எனப்படுகிறது. நிலக்கரியை எரிக்காமல், புகை வெளியிடாமல், சாம்பலை உருவாக்காமல் மின்சாரம் தயாரிப்பதே பசுமை எரிசக்தி ஆகும். ஆனால் நமது மின் உற்பத்தி துறையில் இப்போதும் நிலக்கரியின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. காரணம், அனல்மின் நிலையங்களில் நிலக்கரிதான் முக்கிய எரிபொருளாக இருக்கிறது.

உலக அளவில் இந்தியா மூன்றாவது பெரிய சூரியசக்தி மின் உற்பத்தி மையமாக உள்ளது. எனவே நாட்டின் மொத்த மின் உற்பத்தி திறனில் சூரியசக்தி மின் திட்டங்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நம் நாட்டில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் சூரியசக்தி மின் உற்பத்தி திட்டங்களை நிறுவுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

நடப்பு நிதி ஆண்டில் (2019-20), டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் சூரியசக்தி மின் உற்பத்தி திறன் 1,897 மெகா வாட் உயர்ந்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 2,177 மெகா வாட்டாக இருந்தது. ஆக, உற்பத்தி திறன் வளர்ச்சி ஏறக்குறைய 13 சதவீதம் குறைந்து இருக்கிறது.

ஒரு லட்சம் மெகா வாட்

மத்திய அரசு, 2022-ஆம் ஆண்டுக்குள் சூரியசக்தி மின் உற்பத்தி திறனை ஒரு லட்சம் மெகா வாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. எனினும் உற்பத்தி திறன் 70,000 மெகா வாட்டாக மட்டுமே உயரும் என ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இப்பிரிவில் அடிக்கடி ரத்து செய்யப்படும் ஒப்பந்தங்கள், அரசுக் கொள்கைகளில் தெளிவின்மை உள்ளிட்ட பல காரணங்களால் இந்த இலக்கை எட்டுவது சிரமம் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT