நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில் சூரியசக்தி மின் உற்பத்தி திறன் 7,500 மெகா வாட் வரை உயரும் என இக்ரா நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா
நம் நாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் சூரியசக்தி மின் உற்பத்தி திட்டங்களை நிறுவுவதில் நல்ல வளர்ச்சி கண்டு வருகின்றன. மத்திய அரசு, 2022-ஆம் ஆண்டுக்குள் சூரியசக்தி மின் உற்பத்தி திறனை 1 லட்சம் மெகா வாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் கிரிசில் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி சூரியசக்தி மின் உற்பத்தி திறன் 2022-ஆம் ஆண்டில் 60,000 மெகா வாட்டாகவும், 2023-ல் 70,000 மெகா வாட்டாகவும் மட்டுமே உயரும் என்று தெரிகிறது.
இறக்குமதி செய்யப்படும் சூரிய மின் தகடுகளுக்கு மத்திய அரசு உள்நாட்டு வர்த்தக பாதுகாப்பு வரி விதித்துள்ளது. மேலும் இந்தப் பிரிவில் அடிக்கடி ரத்து செய்யப்படும் ஒப்பந்தங்கள், அரசுக் கொள்கைகளில் தெளிவின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சூரியசக்தி மின் உற்பத்தி திறனை அதிகரிப்பதில் பின்னடைவு ஏற்படும் என கிரிசில் நிறுவனம் கூறி இருக்கிறது.
2018 டிசம்பர் இறுதி நிலவரப்படி நம் நாட்டில் சூரியசக்தி மின் உற்பத்தி திறன் 28,050 மெகா வாட்டை எட்டி உள்ளது. டிசம்பர் காலாண்டில் இத்துறையின் உற்பத்தி திறன் 1,446 மெகா வாட் மட்டும் உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் (2017 அக்டோபர்-டிசம்பர்) 2,448 மெகா வாட் அதிகரித்து இருந்தது.
2017-18-ஆம் நிதி ஆண்டில் சூரியசக்தி மின் உற்பத்தி துறையின் திறன் 9,000 மெகா வாட் அதிகரித்தது. சென்ற நிதி ஆண்டில் இது 6,500-7,500 மெகா வாட்டாக குறைந்து இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் (2019-20) சுமார் 9,000 மெகா வாட் அதிகரித்து, பிறகு 2022-23 வரை ஆண்டுக்கு 10,000 மெகா வாட் அதிகரிக்கும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
சூரியமின் தகடுகள்
இந்நிலையில், கடன் தகுதி தர நிர்ணய நிறுவனமான இக்ரா மாறுபட்ட மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது. இந்த நிதி ஆண்டில் நாட்டின் சூரியசக்தி மின் உற்பத்தி திறன் 7,000 முதல் 7,500 மெகா வாட் வரை உயரும் என முன்னறிவிப்பு செய்துள்ள இந்நிறுவனம், உற்பத்தி திறன் அதிகரிப்பில் மேற்கூரை சூரியமின் தகடுகளின் பங்கு 1,000 மெகா வாட்டாக இருக்கும் என தெரிவித்துள்ளது.