Image Courtacy: AI 
சிறப்பு செய்திகள்

இந்தியாவில் ‘பங்கி ஜம்பிங்’ செய்வதற்கான 6 சிறந்த இடங்கள்!

நம் நாட்டிலேயே 'பங்கி ஜம்பிங்' செய்வதற்கு சிறந்த இடங்கள் பல உள்ளன.

'குஷி' படத்தில் நடிகர் விஜய், "மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்.." என்ற பாடலின் தொடக்கத்தில், 'பங்கி ஜம்பிங்' சாகசத்தில் ஈடுபடுவார்.

உயரமான இடத்தில் இருந்து தலைகீழாக குதித்து வானில் மிதப்பது போன்ற உணர்வையும், திகிலான அனுபவங்களையும் ஒருசேர பெற்றுத்தரும் ‘பங்கி ஜம்பிங்’ சாகசத்தில் ஈடுபடுவதற்கு இளைஞர்கள் பலரும் விரும்புகிறார்கள்.

'பங்கி ஜம்பிங்' சாகசத்தில் ஈடுபடுவதற்கு வெளிநாடுகளில்தான் மிகவும் பாதுகாப்பான உபகரணங்களும், சூழலும் அமைந்திருக்கும் என்று நினைக்க தேவையில்லை. நம் நாட்டிலேயே 'பங்கி ஜம்பிங்' செய்வதற்கு சிறந்த இடங்கள் பல உள்ளன. அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு...

ரிஷிகேஷ்:

இந்தியாவின் மிக உயரமான 'பங்கி ஜம்பிங் ஸ்பாட்' அமைந்திருக்கும் இடம் என்ற சிறப்பும் ரிஷிகேஷுக்கு உண்டு. அங்குள்ள மோகன் சட்டி கிராமத்தில் 'பங்கி ஜம்பிங்' தளம் அமைந்திருக்கிறது. இந்தியாவில் சிறந்த 'பங்கி ஜம்பிங்' இடமாகவும் இது கருதப்படுகிறது. ஏனெனில் இந்தியாவில் ஒரு நிலையான தளத்திலிருந்து செய்யக்கூடிய ஒரே இடம் இதுதான். இதற்கான தளம் தரை மட்டத்திலிருந்து 83 மீட்டர் உயரத்தில் உள்ள ஒரு பாறை குன்றின் மீது கட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளும், அனுபவம் வாய்ந்த பணியாளர்களும்தான் இந்த 'பங்கி ஜம்பிங்' தளம் பிரபலமடைந்ததற்கு மற்றொரு காரணம். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் சாகசத்தில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

லோனாவாலா:

இந்தியாவின் சிறந்த மற்றும் பாதுகாப்பான 'பங்கி ஜம்பிங்' ஸ்பாட்களில் இதுவும் ஒன்றாகும். மும்பை மற்றும் புனேவில் வசிப்பவர்களுக்கு இது மிகவும் நெருக்கமான இடமாக அமைந்திருக்கிறது. புனேவில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலும், மும்பையில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

டெல்லா அட்வென்ச்சர்ஸ் எனப்படும் இது, இந்தியாவின் மிகப்பெரிய சாகச பூங்காக்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்த ஜம்பிங் தளம் 45 மீட்டர் உயரத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதில் இருந்து குதித்தால் சாகச பயணம் சுமார் 4 முதல் 5 நிமிடங்கள் வரை நீடிக்கும். 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்கலாம்.

பெங்களூரு:

வழக்கமான 'பங்கி ஜம்பிங்' இடங்களைப் போல் சாகசம் புரிவதற்கு நிலையான தளம் இங்கு இல்லை. 130-அடி உயர கிரேன் மூலம் 25 மீட்டரில் இருந்து சாகசம் அரங்கேற்றப்படுகிறது. கிரேனில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்கள் ஜம்பிங் கருவி முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. ஓசோன் அட்வென்ச்சர்ஸ் எனப்படும் இது, கிரேன் மூலம் இயக்கப்படும் பம்பிங் சாகசத்தில் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது. இந்த சாகச தளம் பெங்களூரு செயின்ட் மார்க் சாலையில் அமைந்துள்ளது. 18 முதல் 60 வயது வரை உள்ள எவரும் இந்த அட்ரினலின் பம்ப் அனுபவத்தை அனுபவிக்க முடியும். கிரேனில் இருந்து நிலைநிறுத்தப்பட்டாலும், பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதனால் கவலைகளை மறந்து வானில் வட்டமடிக்கலாம்.

கோவா:

கோவாவுக்கு சுற்றுலா செல்பவர்களும், சாகச தேடுதலில் ஈடுபடுபவர்களும் அஞ்சுனா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள பங்கி ஜம்பிங்கை பார்வையிடலாம். இந்த ஜம்பிங் பிளாட்பார்ம் மற்ற இடங்களை போல் அவ்வளவு உயரமாக இல்லாததால், முதல்முறையாக ஜம்பிங் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். பயமில்லாமல் சாகச உணர்வை அனுபவிக்கலாம். பங்கி ஜம்ப் உயரம் 25 மீட்டர் தான். 14 வயது நிரம்பியவர்கள் சாகசம் செய்யலாம்.

ஜக்தல்பூர்:

சத்தீஸ்கரில் அமைந்துள்ள 'பங்கி ஜம்பிங்' தளம் 30 மீட்டர் உயரம் கொண்டது. இங்கு 14 வயது நிரம்பியவர்களுக்கு சாகசத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்படுகிறது. உயரம் குறைவாக இருந்தாலும் இந்த சாகச தளமும் சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை பெற்று தரும்.

டெல்லி:

டெல்லியிலும் 'பங்கி ஜம்பிங்' செய்வதற்கு இடம் இருக்கிறது. வாண்டர்லஸ்ட் எனப்படும் இந்த 'பங்கி ஜம்பிங்' தளத்தை ஜெர்மனியில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் இயக்குகிறார்கள். தரை மட்டத்திலிருந்து 130 அடி உயரத்தில் கிரேன் நிறுவப்பட்டிருக்கிறது. அதில் 52 மீட்டர் உயரத்தில் இருந்து 'பங்கி ஜம்பிங்' தாவலில் ஈடுபட்டு வானில் சிறகடித்து பறக்கலாம். 14 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.