சிறப்பு செய்திகள்

தீபாவளி ஸ்பெஷல்: மொறுமொறுப்பான உளுந்த வடை செய்வது எப்படி..?

தீபாவளி பண்டிகைக்கு காலை விருந்தாக சுவையான மொறுமொறுப்பான உளுந்த வடை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே இருப்பதால், இந்த வாரம் சண்டே ஸ்பெஷல் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் தீபாவளி ஸ்பெஷலாக மொறுமொறுப்பான உளுந்த வடை செய்வது எப்படி என்பதை பார்க்கப்போகிறோம்.

தேவையான பொருட்கள்:-

உளுந்தம் பருப்பு - 2 டம்ளர்

கடலை எண்ணெய் - 1 லிட்டர்

சின்ன வெங்காயம் - 150 கிராம் (தோல் நீக்கி சிறியதாக வெட்டியது)

பச்சை மிளகாய் - 2 (சிறியதாக வெட்டியது)

இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக வெட்டியது)

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

மிளகு - 1 டீஸ்பூன்

அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:-

முதலில் உளுந்தம் பருப்பை 1½ மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடிகட்டி கிரைண்டரில் போட்டு அரைக்கவும். நன்கு அரைபடத் தொடங்கும்போது சிறிதளவு தண்ணீர் ஊற்றவும். அரைபடும் மாவு சற்று கெட்டியான பதத்தில் இருக்கவும். மாவு நன்கு அரைபட்டதும் அதை வழித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து, அந்த மாவுடன் வெட்டி வைத்த சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி துண்டுகள், சிறியதாக வெட்டிய கறிவேப்பிலை - கொத்தமல்லி இலை, மிளகு, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவு உப்பையும் கலந்து கைகளால் நன்கு பிசைந்து கலந்துவிடவும்.

அடுத்து, கேஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடாகியதும் தீயை குறைத்துக்கொள்ளவும். அடுத்து மாவை சிறிதளவு கையில் எடுத்து உருட்டி, அதை லேசாக தட்டி, நடுவில் ஓட்டை போட்டு எண்ணெய்யில் மெதுவாக போடவும்.

இதேபோல், ஒவ்வொரு வடையையும் தட்டிப்போடவும். அடிப்புறம் நன்கு பொன்னிறமாக வெந்ததும், அப்படியே ஒவ்வொன்றாக திருப்பிவிடவும். இருபுறமும் வெந்தவுடன் ஜல்லிக் கரண்டியை கொண்டு, ஒவ்வொரு வடையாக எண்ணெய் வடித்து எடுக்கவும். மொறுமொறுப்பான, தீபாவளி பண்டிகைக்கு காலை விருந்தாக சுவையான உளுந்த வடை ரெடி. தொட்டு சாப்பிட தேங்காய் சட்னி அருமையான காம்பினேஷன்.

SCROLL FOR NEXT