சிறப்பு செய்திகள்

இந்தியாவின் அமைதியான கிராமம்: பின்னணியில் இப்படி ஒரு காரணமா?

சிரிப்புச் சத்தமோ, உரையாடல்களோ, குழந்தைகளின் கூச்சலோ எதுவும் கேட்காது. பகலும் இரவும் ஒரே மாதிரியான அமைதியில் மூழ்கியிருக்கும் இந்தக் கிராமம், அதனால்தான் ‘அமைதி கிராமம் என்று அழைக்கப்படுகிறது.

பொதுவாக இந்திய கிராமங்களை நினைத்தாலே பசுமையான வயல்வெளிகள், இயற்கை எழில், விவசாயிகளின் அன்றாட உழைப்பு, குழந்தைகளின் சிரிப்புச் சத்தம், மாலை நேர சந்தையின் பரபரப்பு போன்ற காட்சிகளே நம் மனதில் தோன்றும். காலையில் பறவைகளின் கீச்சொலி முதல் மாலையில் கிராம மக்களின் உரையாடல்கள் வரை, ஒவ்வொரு கிராமமும் உயிர்ப்புடன் இயங்குவது இயல்பு.ஆனால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் இந்த வழக்கமான சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அங்கு சிரிப்புச் சத்தமோ, உரையாடல்களோ, குழந்தைகளின் கூச்சலோ எதுவும் கேட்காது. பகலும் இரவும் ஒரே மாதிரியான அமைதியில் மூழ்கியிருக்கும் இந்தக் கிராமம், அதனால்தான் ‘அமைதிக் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வித்தியாசமான கிராமத்தின் பெயர் தட்காய்.

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில், பசுமையான மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்கு நடுவே இந்த கிராமம் அமைந்துள்ளது. "மினி காஷ்மீர்" என்றும், "பூமியின் சொர்க்கம்" என்றும் அழைக்கப்படும் பதர்வாவிலிருந்து சுமார் 105 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது.இயற்கை வளம் நிறைந்த இந்த கிராமம் வெளிப்படையாக அமைதியாகத் தோன்றினாலும், அதன் பின்னணியில் ஒரு வேதனையான உண்மை மறைந்துள்ளது.

பாதிக்கும் மேற்பட்டோர் காது கேளாதவர்கள், வாய் பேச இயலாதவர்கள்

அரசின் தகவலின்படி, தட்காய் கிராமத்தில் சுமார் 105 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில், மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் பிறவியிலேயே காது கேளாதவர்களாகவும், வாய் பேச இயலாதவர்களாகவும் உள்ளனர்.இதனால், கிராமத்தில் வழக்கமான பேச்சு அல்லது சத்தம் எதுவும் இல்லாததால், அந்த இடம் முழுவதும் எப்போதும் அமைதியாகவே காணப்படுகிறது.பேசவும் கேட்கவும் முடியாததால், கிராம மக்கள் அனைவரும் சைகைகள் மற்றும் சைகை மொழியின் மூலமாகவே ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்கின்றனர்.கை அசைவுகள், முகபாவனைகள் போன்றவையே அவர்களின் அன்றாட தகவல் பரிமாற்றத்தின் முக்கிய வழியாக உள்ளது. இந்த காட்சியை முதன்முறையாகப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு அது வியப்பையும் புதுமையான அனுபவத்தையும் அளிக்கிறது. அங்கு அண்டை வீட்டாரின் உரையாடல் சத்தமோ, தெருக்களில் விளையாடும் குழந்தைகளின் சிரிப்போ எதுவும் கேட்காது.கிராமத்தின் மூத்தவர்களின் கூற்றுப்படி, இந்த நிலைமை சமீபத்தில் உருவானது அல்ல. தலைமுறை தலைமுறையாக குழந்தைகள் காது கேளாமலும், வாய் பேச இயலாமலும் பிறந்து வருகின்றனர்.வரலாற்று பதிவுகளின்படி, இந்தப் பாதிப்பு முதன்முதலில் 1901-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர், ஒவ்வொரு தலைமுறையிலும் இந்தக் குறைபாட்டுடன் பிறப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மரபணுக் கோளாறே முக்கிய காரணம்

ஒரே கிராமத்தில் இவ்வளவு அதிகமானோர் ஒரே மாதிரியான குறைபாட்டுடன் இருப்பதற்கான காரணத்தை மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர்.அவர்களின் ஆய்வில், தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் மரபணுக் கோளாறுகளே இதற்கான முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது. மருத்துவ ரீதியாக இது உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும், கிராமத்தில் வசிக்கும் சிலர் இதை இன்னும் ஒரு சாபத்தின் விளைவாகவே நம்பி வருகின்றனர்.இந்தக் குறைபாடு, கிராம மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் சமூக வாழ்க்கையையும் பெரிதும் பாதித்துள்ளது.சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பலர், அவர்களுடன் நெருங்கிப் பழக தயங்குகின்றனர். இதனால், தட்காய் கிராம இளைஞர்களுக்கு திருமணம் என்பது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.மேலும், குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அச்சமடைந்த பல குடும்பங்கள், நல்ல மருத்துவ வசதி மற்றும் வேலைவாய்ப்பைத் தேடிபிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்திய ராணுவத்தின் மனிதாபிமான உதவி

தட்காய் கிராம மக்களின் நிலையை உணர்ந்த இந்திய ராணுவம், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.குறிப்பாக, இந்திய ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவு இந்தக் கிராமத்தைத் தத்தெடுத்து, மக்களின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.