கயானா,
மனித எடையை தாங்கும் திறன் கொண்டதாக ராட்சத அல்லியான விக்டோரியா அமேசோனிக்கா இருந்து வருகிறது.
கயானா நாட்டின் தேசிய மலராக இருந்து வரும் பெரிய நீர் அல்லி தாவரம் விக்டோரியா அமேசோனிக்கா. இந்த தாவரம் தென் அமெரிக்கா பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது. இதன் இலை மற்றும் தண்டுகள் மனித எடையை தாங்கும் அளவுக்கு அகலமாகவும் கடினமாகவும் அமைந்துள்ளது. இதை நமது தமிழ்நாட்டில் அமிர்த நீர் அல்லி என்றும் அழைக்கின்றனர்.
இதன் இலைகள் சுமார் 3 மீட்டர் விட்டம் வரை வளரும். இதன் எடை சுமார் 45 கிலோ ஆகும். இந்த தாவரம் தென் அமெரிக்காவில் இருக்கக்கூடிய அமேசான் காடுகளில் பாயும் ஆறுகளில் அதிக அளவில் காணப்படுகிறது. இதன் இலைப்பகுதிக்கு கீழ் இளஞ்சிவப்பு நிறத்தில் ஆன முட்கள் இருக்கும். இந்த தாவரத்தின் இலைகள் சுமார் 70 கிலோ எடையுள்ள பொருட்களை தாங்கும் அளவு திறன் பெற்றுள்ளன.
இதில் பூக்கும் பூக்கள் தாமரை பூ போன்று மிகவும் அழகாக மனிதர்களை கவரும் வகையில் அமைந்திருக்கும். முதலில் இது வெள்ளை நிறத்தில் இருந்தாலும் மகரந்தச் சேர்க்கைக்கு பின்னர் இந்த மலர் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறும். இந்த அல்லி தாவரங்களிலேயே ராட்சத அல்லியாக கருதப்படுகிறது.
இந்த தாவரத்திற்கு முதலில் ஜான் லிண்ட்லி என்பவர் 1837-ல் விக்டோரியா ரிஜிகா என பெயர் சூட்டினார். இது இங்கிலாந்து ராணி பெயருடன் ஒப்பிட்டு கூறுவது போல இருந்தது. பின்னர், ஜேம்ஸ் செவர்பியால் என்பவரால் 1850-ல் விக்டோரியா அமேசோனிக்கா என பெயர் சூட்டப்பட்டது.