சிறப்பு செய்திகள்

பூமியின் வெப்பநிலை ஆபத்தான கட்டத்துக்கு சென்றுவிட்டது: தீவிர வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை

பனிப்பாறைகள் உருகுவதால் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் திறன் குறைந்து, பூமி இன்னும் வேகமாக வெப்பமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பூமியின் வெப்பநிலை ஆபத்தான கட்டத்துக்கு சென்றுவிட்டதாக கோப்பர் நிக்கஸ் அமைப்பின் கணிப்பில் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை மணி

பூமி கண்காணிப்பு அமைப்பான கோப்பர்நிக்கஸ் அமைப்பு காலநிலை மற்றும் வானிலை சார்ந்த கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. இது உலகின் நம்பகமான காலநிலை தரவுகளை வெளியிடுகிறது. அமெரிக்காவின் நாசா மற்றும் நோவா அமைப்புகளுக்கு இணையான அங்கீகாரம் இதற்கு உண்டு. அந்தவகையில் சமீபத்தில் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்றச் சேவை வெளியிட்டுள்ள தரவுகள் பெரும் அதிர்ச்சியை கொடுத்திருப்பதோடு எச்சரிக்கை மணியையும் அடித்திருக்கிறது.

பாதுகாப்பு எல்லை

அதன் விவரம் வருமாறு:-

* தொழிற்புரட்சிக்கு முந்தைய 1850-1900 காலத்தின் சராசரி வெப்பநிலையை விட ஒட்டுமொத்த சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் என்ற பாதுகாப்பு எல்லையை 2030-களின் பிற்பாதியிலோ அல்லது 2040-களிலோ நிரந்தரமாக தாண்டும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய வெப்பமயமாதல் வேகத்தரவுகளின்படி, 2029-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே நீண்டகால வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியசை எட்டி விடும்.

ஆபத்தான கட்டத்திற்கான அறிகுறி

* 2023 ஜூன் முதல் தொடர்ச்சியாக பல மாதங்கள் வரலாறு காணாத வெப்பநிலை பதிவானது போல, 2026-ல் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான தொடர்ந்து 4 மாதங்கள் அந்தந்த மாதங்களின் முந்தைய சாதனைகளை முறியடித்திருக்கின்றன. இது வெறும் தற்காலிக நிகழ்வு அல்ல. பூமியின் வெப்பநிலை ஒரு புதிய, ஆபத்தான கட்டத்துக்கு சென்றுவிட்டதன் அறிகுறி ஆகும்.

எல்நினோ நிகழ்வு

* பொதுவாக உலக வெப்பநிலை உச்சம் தொட வலுவான எல்நினோ நிகழ்வு காரணமாக இருக்கும். ஆனால், 2026-ன் பெரும்பகுதியில் வலுவான எல்நினோ இல்லாத நிலையிலேயே அக்டோபர் மாத வெப்பநிலை தொழிற்புரட்சிக்கு முந்தைய சராசரியை விட 1.75 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகி அபாய அளவை தொட்டுள்ளது.

* அக்டோபர் 2026-ல் கடல் மேற்பரப்பு வெப்பநிலை 20.95 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்துள்ளது. கடல் நீர் அதிகமாக வெப்பமடைவது அதிதீவிர புயல்கள், கடல்வாழ் உயிரினங்களின் பேரழிவு மற்றும் பருவமழை பொய்ப்புக்கு நேரடி காரணமாக அமையும்.

'மீள முடியாத சுழற்சி'

* அண்டார்டிகா மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் கடல் பனிப்பரப்பு வரலாறு காணாத குறைந்த அளவை எட்டியுள்ளது. பனிப்பாறைகள் உருகுவதால் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் திறன் குறைந்து, பூமி இன்னும் வேகமாக வெப்பமடையும் 'மீள முடியாத சுழற்சி' தொடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

* 2026-ம் ஆண்டு உலக வரலாற்றில் 2-வது வெப்பமான ஆண்டாக அமைய சுமார் 80 சதவீதம் வாய்ப்பு உள்ளது. இதற்கு முந்தைய 2024-ம் ஆண்டின் சாதனையை 2026-ம் ஆண்டு முறியடிக்கவோ, சமன் செய்யவோ 20 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது.

தீவிர வெப்ப அலை எச்சரிக்கை

* இந்தியாவை பொறுத்தவரையில், 2027 கோடைக்காலம் வழக்கத்தைவிட முன்கூட்டியே தொடங்கவும், நீண்ட நாட்களுக்கு தீவிர வெப்ப அலை வீசவும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. குறைந்த நாட்களில் அதிக மழை (திடீர் வெள்ளம்) மற்றும் நீண்ட வறண்ட நாட்கள் என பருவமழையின் தன்மையில் தீவிர மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பன உள்ளிட்ட பல்வேறு எச்சரிக்கை மணிகள் அந்த கணிப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன.

இனி 2026-2027 எல்நினோ முழுவீச்சில் செயல்பட தொடங்கும்போது, 2027-ம் ஆண்டு கற்பனை செய்யமுடியாத வெப்பச்சாதனைகளை படைக்கக்கூடும் என விஞ்ஞானிகள் கணித்திருக்கின்றனர்.

SCROLL FOR NEXT