சிறப்பு செய்திகள்

தந்தையின் இழப்பு முதல் கிராண்ட்ஸ்லாம் வெற்றி வரை... சபலென்காவின் வலி நிறைந்த பயணம்

உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக வலம் வருபவர் சபலென்கா.

நியூயார்க்,

2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டங்களை வென்ற பெலாரஸ் நட்சத்திர வீராங்கனை அரினா சபலென்கா, 2026 அமெரிக்க ஓபன் தொடருக்கு முன்பாக தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட வலிகள், இழப்புகள் மற்றும் கடினமான தருணங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

இன்று உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக வலம் வரும் சபலென்காவின் இந்த பயணத்துக்குப் பின்னால், தந்தையின் மரணம், கடுமையான விமர்சனங்கள், மன அழுத்தம் என பல சவால்கள் இருந்துள்ளன.

6 வயதில் தொடங்கிய பயணம்

பெலாரஸின் மின்ஸ்க் நகரில் 1998-ம் ஆண்டு பிறந்த சபலென்காவை, அவரது தந்தை செர்ஜி, 6 வயதில் டென்னிஸ் விளையாட்டுக்கு அறிமுகப்படுத்தினார்.

முன்னாள் ஐஸ் ஆக்கி வீரரான செர்ஜி, தனது மகளை ஒரு மிகப்பெரிய சாம்பியனாக உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டார். அந்தக் கனவை நனவாக்க சபலெங்காவும் கடுமையாக உழைத்தார்.

தந்தையின் திடீர் மரணம்

தனது 25 வயதுக்குள் 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்ல வேண்டும் என்று தந்தையுடன் கனவு கண்டிருந்தார். ஆனால், 2019-ம் ஆண்டு அவரது தந்தை செர்ஜி, 43 வயதில் மெனிஞ்சைடிஸ் நோயால் திடீரென உயிரிழந்தார்.

தந்தையின் மரணம் சபலென்காவின் வாழ்க்கையையும் டென்னிஸ் வாழ்க்கையையும் பெரிதும் பாதித்தது. அந்த கடினமான காலகட்டத்தில் அவரது தாய் அளித்த ஆதரவும் தைரியமும் சபலெங்காவை மீண்டும் மீட்டெடுத்தது.

போர் சூழலில் எதிர்கொண்ட விமர்சனங்கள்

2022-ம் ஆண்டு ரஷியா - உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, பெலாரஸ் வீராங்கனை என்ற அடையாளத்தால் சபலென்கா கடுமையான விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்தார்.

குறிப்பாக, சில உக்ரைன் வீராங்கனைகள் அவருடன் கைகுலுக்க மறுத்த சம்பவங்கள் அவரை மனதளவில் பாதித்ததாக தெரிவித்துள்ளார்.

டென்னிஸை விட்டு விலக நினைத்த தருணம்

அதே ஆண்டில் சபலென்காவின் டென்னிஸ் வாழ்க்கையிலும் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. 2022-ம் ஆண்டில் அவர் 428 டபுள் பால்ட்கள் செய்தார். தொடர்ந்து ஏற்பட்ட தோல்விகள் மற்றும் விமர்சனங்களால், பலரும் அவரது டென்னிஸ் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக கூறினர்.

இதனால் ஒரு கட்டத்தில் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவது குறித்தும் சபலென்கா யோசித்துள்ளார்.

கம்பேக்

ஆனால், கடினமான அந்த தருணத்தில் சபலென்கா பின்வாங்கவில்லை. விளையாட்டு பயோமெக்கானிக்ஸ் நிபுணரின் உதவியுடன் தனது சர்வ் நுட்பத்தில் மிகப்பெரிய மாற்றங்களை செய்தார்.

படிப்படியாக தனது ஆட்டத்தையும், சுயநம்பிக்கையையும் மேம்படுத்திய சபலென்கா, மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பினார்.

2023-ல் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம்

அதன் பலனாக, 2023 ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை சபலென்கா வென்றார்.

அமெரிக்க ஓபனில் அடுத்தடுத்து பட்டம்

2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் தொடர்களில் தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்று சபலென்கா அசத்தினார். இதுவரை 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள சபலென்கா, தற்போது உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவராக திகழ்கிறார்.

தந்தையை இழந்த துயரம், போர்ச்சூழலில் எதிர்கொண்ட விமர்சனங்கள், ஆட்டத்தில் ஏற்பட்ட சரிவு என பல தடைகளை கடந்து மீண்டும் சாம்பியனாக உயர்ந்துள்ள சபலென்காவின் கதை, விளையாட்டு உலகில் விடாமுயற்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.