ஜி.டி.நாயுடு 
சிறப்பு செய்திகள்

ஜி.டி.நாயுடு.. காலத்தை வென்ற மாமேதை- இந்தியா ஒதுக்கியதை ஜெர்மனி வணங்கியது!

முட்டுக்கட்டையான நடைமுறைகளால், ஜி.டி. நாயுடுவின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பான மலிவு விலை கார் இந்தியாவில் அங்கீகரிக்கப்படாமலேயே போனது.

ஜெர்மனியின் லீப்ஜிக் கண்காட்சியில் ஜி.டி. நாயுடுவின் ‘ரசாண்ட்’ சவரக்கத்தி அங்கீகரிக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டது.

நம் நாட்டில் ஒரு நீண்டநால வழக்கம் உள்ளது. அதாவது உலக நாடுகள் பாராட்டிய பிறகுதான், சொந்த நாடு நம்மை அங்கீகரிக்கும். இந்த வழக்கத்திற்கு அப்போதே பலியானவர்தான் ஜி.டி.நாயுடு. ஆரம்பத்தில் அவருக்கு ஒரு கார் தயாரிப்பதற்கான உரிமத்தைக்கூட இந்தியா வழங்கவில்லை. ஆனால் மெர்சிடிஸ் பென்ஸ் காரைத் தயாரித்த நாடு, அவருக்கு முக்கியத்துவத்தையும், மரியாதையையும் கொடுத்தது.

லீப்ஜிக் வர்த்தகக் கண்காட்சி

இருபதாம் நூற்றாண்டில் ஜெர்மனியின் லீப்ஜிக் வர்த்தகக் கண்காட்சி மத்திய ஐரோப்பாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூடாரமாகத் திகழ்ந்தது. இது ஒட்டுமொத்த ஐரோப்பியக் கண்டத்தின் உற்பத்தியாளர்களும் தங்களின் சிறந்த தயாரிப்புகளை உலகளாவிய பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்தும் ஒரு தளமாக இருந்தது.

ஜி.டி.நாயுடுவுக்கு கௌரவம்

இந்த லீப்ஜிக் கண்காட்சியில்தான் ஜி.டி. நாயுடுவின் ‘ரசாண்ட்’ சவரக்கத்தி கவனிக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டது. ஜெர்மனியின் துல்லியத்தன்மை மட்டுமே அளவுகோலாகக் கருதப்பட்ட அந்த கண்காட்சி அரங்கில், மெல்லிய – நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட, அதுவரை ஐரோப்பியர்கள் கேள்விப்பட்டிராத கோவை நகரத்தில் செய்யப்பட்ட சவரக்கத்தி பெரும் அங்கீகாரத்தைப் பெற்றது.

லீப்ஜிக் கண்காட்சி மட்டும் இந்த அங்கீகாரத்திற்கு காரணமல்ல. ஜெர்மனியுடனான ஜி.டி. நாயுடுவின் தொடர்பு இன்னும் ஆழமானதாக இருந்தது. ஜெர்மனி நாட்டு பொறியாளர்களையும், தொழிலதிபர்களையும் அவர் சந்தித்தார். அங்கு சென்றதோடு மட்டுமல்லாமல், அங்கிருந்து புதிய யுத்திகளைக் கொண்டுவந்து, பவேரியாவிடமிருந்து கோயம்புத்தூர் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை இந்திய உற்பத்தியாளர்களுக்குக் காட்டினார்.

ஜெர்மனியர்களால் உடனடியாகப் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலான ஒரு இந்தியப் பொறியியலாளராக நாயுடு திகழ்ந்தார். கைகளால் வேலை செய்வது, அளவீடுகளில் துல்லியம், ஆடம்பரமின்மை மற்றும் இயந்திரங்களை சுத்தமாகப் பராமரிப்பது போன்ற ஜெர்மனியப் பண்புகளை அவர் இயற்கையிலேயே கொண்டிருந்தார். அதாவது ஒரு ஜெர்மன் பட்டறையில், தனது சொந்த வீட்டில் இருப்பதுபோலவே இருந்தார்.

முதல் கார் மாடல்

ஆனால் 1952-இல், இந்த முரண்பாடு தாங்க முடியாததாக மாறியது. ஜி.டி. நாயுடுவின் நிறுவனம் இரண்டு இருக்கைகள் கொண்ட பெட்ரோல் காரை உருவாக்கியிருந்தது. அது ஓடக்கூடிய தகுதியுடன் உருவாக்கப்பட்ட முதல் கார் மாடல் ஆகும். மேலும் இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.

மாருதி கார் இந்தியர்களின் போக்குவரத்து அடையாளமாக உருவெடுப்பதற்குப் பல தசாப்தங்களுக்கு முன்பும், டாடா மோட்டார்ஸ் தனது முதல் பயணிகள் காரை உருவாக்குவதற்கும் 30 ஆண்டுகளுக்கு முன்பே இது நிகழ்ந்தது.

ஜி.டி.நாயுடு

உரிமம் மறுத்த இந்தியா

1952-லேயே இந்தியா தனது சொந்த காரைக் கொண்டு உலகளாவிய வாகன வரைபடத்தில் நுழைவதற்குக் கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பு அது – முழுமையாக வடிவமைக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்டு, வணிகரீதியாகப் பெருமளவில் உற்பத்தி செய்யத் தயாராக இருந்த கார் அது.

ஆனால் இந்திய அரசு அதற்கு உரிமம் வழங்க மறுத்தது. 1950-களில் இந்தியாவில் இருந்த கடுமையான தொழில்துறை சட்டங்கள், (லைசென்ஸ் ராஜ்) ஒரு சில பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே உற்பத்தி உரிமங்களை வழங்கின. இந்த முட்டுக்கட்டையான அரசு நடைமுறைகளால், ஜி.டி. நாயுடுவின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பான அந்த மலிவு விலை கார் அங்கீகரிக்கப்படாமலேயே போனது.

அதன்பின் அந்த கார் உற்பத்திக்கு செல்லவில்லை. மாதிரி வாகனம் ஒருபுறம் ஒதுக்கி வைக்கப்பட்டது. இந்த வரலாறு பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு முன்பாகவே, மறைந்து போனது.

ஒருபுறம் பொறியியல் துறைக்காக நாம் இன்றும் வியந்து பாராட்டும் ஜெர்மனி நாடு, கோயம்புத்தூரில் வடிவமைக்கப்பட்ட ஒரு சவரக்கத்தியைப் பாராட்டியிருக்கிறது. மறுபுறம் இந்திய அரசு, கோயம்புத்தூரில் தயாரிக்கப்பட்ட ஒரு காருக்கு உற்பத்தி உரிமம் வழங்க மறுத்திருக்கிறது. கடந்த எழுபது ஆண்டுகளாகத் தமிழ்நாடு இந்த வரலாற்றைச் சுமந்து கொண்டுதான் வருகிறது.

ஜி.டி. நாயுடு போட்டி

ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு மாதவன் நடிப்பில் ஜி.டி.என் திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஜி.டி.நாயுடுவைக் கொண்டாடும் வகையில் படத்தின் தயாரிப்பாளர்கள், தந்தி குழுமத்துடன் (Thanthi Media) இணைந்து "அடுத்த ஜி.டி. நாயுடு யார்?" என்ற பெயரில் Innovation போட்டியை நடத்துகிறார்கள். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.

மேலும் தகவல்களுக்கு.. https://events-dailythanthi.com/gdn/