ஜி.டி.நாயுடு 
சிறப்பு செய்திகள்

அயல்நாட்டினருக்கு No... இந்தியருக்கு இலவசம் அறிவித்த ஜி.டி.நாயுடு

அந்த காலத்திலேயே பயணச்சீட்டு வழங்குவதற்கான ஒரு எந்திரத்தை கண்டுபிடித்து தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார் ஜி.டி.நாயுடு.

அரிய பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி அதிசயத்தை நிகழ்த்தி கோவைக்கு பெருமை தேடித்தந்தவர் ஜி.டி.நாயுடு. இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டமில்லாதவராக இருந்த அவர் 4-ம் வகுப்பு வரை மட்டுமே பயின்றார். ஆனால் அவரின் அறிவு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு திறன் மற்றும் செயலாற்றல் திறன் பல ஆசிரியர்களுக்கு சமமாக இருந்தது.

ஆரம்பத்தில் தோட்ட வேலைக்கு சென்றார். அப்போது ஒருநாள் ஆங்கிலேய அதிகாரி ஒருவர் அந்த காலத்து மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக சென்றார். அந்த பிரமாண்டமான மோட்டார் சைக்கிளை ஜி.டி.நாயுடு பார்த்து வியந்தார். அந்த மோட்டார் சைக்கிள் பழுதானது. அதனை ஆங்கிலேய அதிகாரி ரிப்பேர் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே அங்கு சென்ற ஜி.டி.நாயுடு ஆங்கிலேய அதிகாரிக்கு கழிவு துணி மற்றும் மண்எண்ணெய் கொடுத்து உதவினார். இதனால் ஆங்கிலேய அதிகாரி அவரை வெகுவாக பாராட்டினார். அப்போது ஜி.டி.நாயுடுவுக்கு அந்த மோட்டார் சைக்கிளை எப்படியாவது வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

இதனால் அவர் தோட்ட வேலையில் இருந்து விலகி ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தார். அதில் கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு ஆங்கிலேய அதிகாரியை சந்தித்து அந்த மோட்டார் சைக்கிளை வாங்கினார். பின்னர் அந்த மோட்டார் சைக்கிளை அக்கு வேறு, ஆணி வேராக அவர் பிரித்தார். அங்குதான் அவருக்கு ஆட்டோ மொபைல் பற்றிய ஆர்வம் தொடங்கியது.

ரேடியேட்டருக்கு மாற்று சாதனம்

பின்னர் அவர் பருத்தி தொழிற்சாலையில் பணிபுரிந்தார். திருப்பூரில் ஒரு பருத்தி தொழிற்சாலையை நிறுவினார். மும்பையிலும் தன்னுடைய பருத்தி தொழிலை விரிவுபடுத்தினார். ஆனால் பெரும் நஷ்டத்தை சந்தித்தார். அப்போது மோட்டார், லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஆங்கிலேயரான ஸ்டேன்ஸ் துரை என்பவரிடம் வேலைக்கு சேர்ந்தார். அதில் ஒரு பஸ்சை கடனாக பெற்று முதலாளியாக மட்டுமல்லாமல் தொழிலாளியாகவும் செயல்பட்டு பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு பஸ்சை இயக்கினார்.

பின்னர் யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி முதல் முறையாக பஸ் நிறுத்தத்துக்கு பஸ் வரும் நேரத்தையும், புறப்படும் நேரத்தையும் காட்டும் கருவியை கண்டுபிடித்தார். குறைந்த விலை காரை தயாரித்தார். அந்த காலத்திலேயே பயணச்சீட்டு வழங்குவதற்கான ஒரு எந்திரத்தையும் கண்டுபிடித்து தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார். அப்போதெல்லாம் என்ஜின் சூடாகாமல் இருக்க ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றவேண்டும், மோட்டார் ரேடியேட்டருக்கு இணையாக ஒரு எந்திரத்தை கண்டுபிடித்து அந்த பிரச்சனைக்கும் தீர்வு கண்டார்.

காப்புரிமை

முன்காலத்தில் புகைப்படத்துறையில் மிகவும் உதவிகரமாக இருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்ட்டர் என்ற புகைப்பட கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்கும் கருவி, எந்தவிதமான வெட்டுக்காயமும் இன்றி முகச்சவரம் செய்துகொள்ள பிளேடு என இவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.

இவர் கண்டுபிடித்த பிளேடை தானே தயாரித்துக்கொள்ள விரும்பிய ஒரு அமெரிக்க நிறுவனம் அதன் காப்புரிமையை வாங்க விலை பேசியது. தாய் நாட்டிற்கே தன்னுடைய கண்டுபிடிப்புகள் பயன்படவேண்டும் என்று எண்ணிய ஜி.டி.நாயுடு, தமிழ்நாட்டிலேயே அதை தயாரிக்க முடிவெடுத்து நார்வே நாட்டிலிருந்து அதன் மூலப்பொருளை இறக்குமதி செய்ய விரும்பினார். அந்த முயற்சிகள் கை கூடாமல் போகவே காப்புரிமையும் கை நழுவிப்போனது. இவருக்கு ஆறுதலாக ஜெர்மனியில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சியில் இவருடைய கண்டுபிடிப்பான சவரக்கத்திக்கு முதல் பரிசும், பிளேடுக்கு 3-ம் பரிசும் கிடைத்தது.

இந்தியர்களுக்கு இலவசம்

பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெற விரும்பியும் தர மறுத்தார் ஜி.டி.நாயுடு. என்னுடைய கண்டுபிடிப்புகள் அனைத்துமே நம் தேசத்திற்குதான் பயன்பட வேண்டும், அதனால்தான் காப்புரிமை கோராமல் வைத்திருக்கிறேன். இந்தியர் யாராக இருந்தாலும் அதை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்தார்.

ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையும் சாதனைகளும் ‘ஜி.டி.என்.’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஜி.டி. நாயுடு கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்.மாதவன் நடிக்கிறார். 2026 ஜூலை மாதத்தில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.டி.நாயுடு குறித்த மேலும் தகவல்களுக்கு... https://events-dailythanthi.com/gdn/