நகோயா,
2026 ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 85 பதக்கங்கள் கிடைத்துள்ளது.
ஜப்பானின் அய்ச்சி-நகோயா நகரில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்த போட்டியில் இந்திய அணி 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4-வது இடம் பிடித்தது.
கடந்த 2023-ம் ஆண்டு சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று வரலாற்றில் புதிய சாதனை படைத்திருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, இந்த முறை இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 22 குறைந்துள்ளது. குறிப்பாக, தங்கப்பதக்க எண்ணிக்கையும் 7 குறைந்துள்ளது.
கடந்த முறையை விட மொத்த பதக்க எண்ணிக்கை குறைந்திருப்பது இந்தியாவுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. குறிப்பாக தனிநபர் பிரிவுகளில் எதிர்பார்த்த அளவுக்கு தங்கப்பதக்கங்கள் கிடைக்கவில்லை. அதேநேரத்தில், அணிகள் பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் அபாரமாக செயல்பட்டு பல முக்கியமான தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர்.
கடந்த ஆசிய விளையாட்டில் தடகளத்தில் இந்தியாவுக்கு 6 தங்கம் உள்பட 29 பதக்கங்கள் கிடைத்தன. இந்த முறை 1 தங்கம், 9 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் கிடைக்காதது குறிப்பிடத்தக்க பின்னடைவாக அமைந்தது. கடந்த முறை தடகளத்தின் தனிநபர் பிரிவுகளில் மட்டும் 5 தங்கப்பதக்கங்கள் கிடைத்திருந்தன.
துப்பாக்கி சுடுதலிலும் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆசிய விளையாட்டில் 7 தங்கம் உள்பட 22 பதக்கங்களை வென்ற இந்தியா, இந்த முறை 3 தங்கம் உள்பட 15 பதக்கங்களை மட்டுமே கைப்பற்றியது. இதனால் கடந்த முறையை விட துப்பாக்கி சுடுதலில் மட்டும் 7 பதக்கங்கள் குறைந்துள்ளன.
கடந்த ஆசிய விளையாட்டில் ஸ்குவாஷ், பேட்மிண்டன், டென்னிஸ், குதிரையேற்றம் ஆகிய போட்டிகளில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.
ஆனால் இந்த முறை அந்த விளையாட்டுகளில் தங்கம் கிடைக்கவில்லை. குறிப்பாக ஸ்குவாஷில் கடந்த முறை கிடைத்த தங்கப்பதக்கத்தை இந்தியா தக்கவைக்க முடியவில்லை.
அதேநேரத்தில், குத்துச்சண்டை, மல்யுத்தம், கோல்ப் ஆகிய போட்டிகளில் இந்த முறை இந்தியா தங்கப்பதக்கங்களை வென்று புதிய சாதனைகளைப் பதிவு செய்துள்ளது.
இந்தியாவுக்கு அதிக தங்கப்பதக்கங்களை பெற்றுத் தந்த விளையாட்டாக வில்வித்தை அமைந்தது. இதில் இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றது.
சுவாரசியமாக, கடந்த ஆசிய விளையாட்டிலும் வில்வித்தையில் இந்தியா இதேபோல் 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றிருந்தது.
வில்வித்தைக்கு அடுத்தபடியாக குத்துச்சண்டையில் 3 தங்கம் உள்பட 6 பதக்கங்களும், மல்யுத்தத்தில் 2 தங்கம் உள்பட 6 பதக்கங்களும் இந்தியாவுக்கு கிடைத்தன.
கடந்த முறை தங்கப்பதக்கம் கிடைக்காத குத்துச்சண்டையில் இந்த முறை 3 தங்கம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மல்யுத்தத்திலும் 2 தங்கப்பதக்கங்களை இந்தியா கைப்பற்றியது.
கிரிக்கெட் மற்றும் கபடியில் கடந்த முறையைப் போலவே ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளிலும் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது.
ஆக்கியிலும் இந்தியாவுக்கு இந்த முறை இரட்டை தங்கம் கிடைத்தது. ஆண்கள் அணி தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை தக்கவைத்த நிலையில், இந்திய மகளிர் அணி 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தது.
துப்பாக்கி சுடுதலில் நீரு தண்டாவும், வில்வித்தையில் கும்கும் மோஹோத், சிகிதா தனிபார்த்தி, சாஹில் ஜாதவ் ஆகியோரும் தலா 2 தங்கப்பதக்கங்களை வென்று கவனம் ஈர்த்தனர்.
இவர்கள் தனிநபர் மற்றும் அணிகள் பிரிவுகளில் பதக்கங்களை வென்றனர். நீரு தண்டா மற்றும் கும்கும் மோஹோத் தலா ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் வென்றதால், தலா 3 பதக்கங்களுடன் தொடரை நிறைவு செய்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த வித்யா ராம்ராஜும் இந்த ஆசிய விளையாட்டில் முத்திரை பதித்தார்.
பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கம் வென்ற அவர், 4x400 மீட்டர் பெண்கள் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும் வென்றார்.
இதன் மூலம் மொத்தம் 3 பதக்கங்களை கைப்பற்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். 400 மீட்டர் தடை தாண்டுதலில் 54.75 வினாடிகளில் பந்தயத்தை முடித்த அவர், 42 ஆண்டுகளாக நீடித்த பி.டி.உஷாவின் தேசிய சாதனையையும் முறியடித்தார்.
கடந்த முறையின் 107 பதக்க சாதனையை இந்தியா இந்த முறை எட்டவில்லை என்றாலும், 21 தங்கம் உள்பட 85 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.
வில்வித்தை, குத்துச்சண்டை, மல்யுத்தம், கிரிக்கெட், கபடி, ஆக்கி உள்ளிட்ட போட்டிகளில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதேநேரத்தில் ஸ்குவாஷ், பேட்மிண்டன், டென்னிஸ் உள்ளிட்ட சில போட்டிகளில் கடந்த முறையை ஒப்பிடும்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மொத்தம் 85 பதக்கங்களுடன் இந்தியா தனது ஆசிய விளையாட்டு வரலாற்றில் 2-வது அதிகபட்ச பதக்க எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.