பிளாஸ்டிக் பை இல்லா தினம் 
சிறப்பு செய்திகள்

இன்று பிளாஸ்டிக் பை இல்லா தினம்...! தடை விதித்தாலும் தலைதூக்கும் விற்பனை

பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு இல்லாத நாளை முன்னிட்டு, பிளாஸ்டிக் பைகளின் தீமைகளை உலகிற்கு உணர்த்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

ஜூலை 3... இன்று ‘சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், நாகரீக உலகில் அன்றாட வாழ்வின் அங்கமாகிவிட்டது. விலை மலிவு, எளிமையான பயன்பாடு போன்ற காரணங்களால் தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் மட்டுமின்றி, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய டீ கப், தட்டுகள், உறிஞ்சுகுழல் என அடுக்கி கொண்டே செல்லலாம். டீ வாங்குவதில் இருந்து மளிகை பொருட்கள் வாங்குவது வரை அனைத்து இடங்களிலும் இந்த பிளாஸ்டிக் தடம்பதித்து உள்ளது.

பிளாஸ்டிக் பை இல்லாத தினம்

இவ்வளவு வேகத்தில் நம்முடன் பயணிக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தீமையானது என்று தெரிந்தும் தொடர்ந்து அந்த ஆபத்தை விலைகொடுத்து வாங்குகிறோம்.

இந்த பிளாஸ்டிக் பொருட்கள் மட்குவதற்கு 100 முதல் 500 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இது பூமிக்கு நிரந்தர ஆபத்தானது.

எனவே, பிளாஸ்டிக் பைகளின் தீமைகளை உலகிற்கு உணர்த்தவும், அவற்றின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 3-ந் தேதி "சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம்" கடைபிடிக்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு ‘பிளாஸ்டிக் பை இல்லா தினம்’ இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பிளாஸ்டிக் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெறுகின்றன.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஒற்றைப்பயன்பாடு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகள், காகிதப் பைகள் மற்றும் சணல் பைகளின் பயன்பாட்டை மக்களிடையே ஊக்குவிப்பதும் இதன் இலக்காகும்.

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை

பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் பாதிப்புகள்

குப்பைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகளை உணவென்று நினைத்து உண்ணும் பசுக்கள், பறவைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழக்கின்றன. சாக்கடை கால்வாய்கள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் பிளாஸ்டிக் பைகள் தேங்குவதால், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பைகளை எரிப்பதால் வெளியாகும் நச்சுப்புகையானது மனிதர்களுக்கு புற்றுநோய் மற்றும் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

இதனை கருத்தில் கொண்டு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை தமிழக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தது.

இதில் 14 வகையான ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், உறிஞ்சு குழாய்கள், அனைத்து மைக்ரான் அளவிலான பிளாஸ்டிக் கைப்பை உள்ளிட்ட பொருட்கள் அடங்கும்.

தடையை மீறிய புழக்கம்

தடை விதிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், தற்போது சந்தைகளில் பிளாஸ்டிக் பைகளின் புழக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. மளிகைக் கடைகள், பேக்கரிகள், இறைச்சி கடைகள் மற்றும் காய்கறி சந்தைகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சட்டவிரோதமாக பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அதிகாரிகள் கண்டறிந்து அவற்றுக்கு சீல் வைக்கின்றனர். டன் கணக்கில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதுதவிர பிளாஸ்டிக் தடையை மீறுபவர்கள் மீது கடுமையான அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, பாரம்பரிய துணிப்பைகளை பயன்படுத்தும் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த தமிழக அரசு 'மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை தொடங்கியது.

இருப்பினும், அந்த தடை உத்தரவு காற்றில் பறந்து, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது. இந்த பிளாஸ்டிக் பைகள் மீதான தடையை முழுமையாக வெற்றிகரமாக மாற்றுவதில் அரசுக்கு பல்வேறு சவால்கள் உள்ளன. எனவே, இந்த விஷயத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கை மட்டுமே தீர்வல்ல, பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பாளர்களும் ஒத்துழைக்க வேண்டும். தயாரிப்பை நிறுத்திவிட்டால், அத்தகைய பிளாஸ்டிக் பைகளின் புழக்கமும் படிப்படியாக நின்றுபோகும்.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதில்லை என்று இந்த நாளில் அனைவரும் உறுதிமொழி ஏற்போம்!