சிறப்பு செய்திகள்

இறுதி கட்டத்தை எட்டிய 'தி நெக்ஸ்ட் ஜி.டி. நாயுடு சேலஞ்ச்' இன்று நடக்கும் முக்கிய நிகழ்வு

நடுவர் குழுவில் டாக்டர் நம்பி நாராயணன் இடம்பெற்றது போட்டியில் பங்கேற்ற மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை,

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்காக ஜி.டி. நாயுடு குழுமமும், தினத்தந்தி குழுமமும் இணைந்து நடத்தும் 'தி நெக்ஸ்ட் ஜி.டி. நாயுடு சேலஞ்ச்' மாநில அளவிலான புத்தாக்கப் போட்டி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜூன் மாதம் 2-வது வாரத்தில் இந்தப் போட்டி அறிவிக்கப்பட்டது. ஜூன் 21-ஆம் தேதி வரை பதிவு நடைபெற்று, தமிழகம் முழுவதும் உள்ள 165 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்து 779 புத்தாக்கத் திட்டங்கள் (Projects) பெறப்பட்டன.இதில் முதல் கட்டத் தேர்வில் தகுதி பெற்ற 36 அணிகள், ஜூலை 2-ஆம் தேதி கோவையில் உள்ள ஜி.டி. அறிவியல் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பங்கேற்றன. சுமார் 9 மணி நேரம் நடைபெற்ற திட்ட விளக்கங்கள் மற்றும் மதிப்பீட்டுக்குப் பிறகு, மூன்று பேர் கொண்ட நடுவர் குழு 12 அணிகளை இறுதிப்போட்டிக்குத் தேர்வு செய்தது.

12 அணிகள்

இறுதிப்போட்டி இன்று (ஜூலை 3) நடைபெற்று வருகிறது. இதில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் விஞ்ஞானி டாக்டர் நம்பி நாராயணன் சிறப்பு நடுவராக இணைந்துள்ளார். இறுதிப்போட்டிக்குத் தேர்வான 12 அணிகளின் புத்தாக்கத் திட்டங்களை மதிப்பீடு செய்து, சிறந்த 5 அணிகளைத் தேர்வு செய்ய உள்ளார்.

ஆவலுடன் இருக்கிறேன்

போட்டி குறித்து டாக்டர் நம்பி நாராயணன் கூறுகையில், "இதுபோன்ற போட்டிகள் மாணவர்களை நடைமுறை சிந்தனைக்கு வழிநடத்துவதோடு, சமூகத்தில் உள்ள உண்மையான பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை உருவாக்க ஊக்குவிக்கின்றன. மாணவர்கள் உருவாக்கியுள்ள புத்தாக்க யோசனைகளை நேரில் காணவும், அவற்றை மதிப்பீடு செய்யவும் ஆவலுடன் இருக்கிறேன்" என்றார்.

வெற்றியாளர்கள் நாளை அறிவிப்பு

நடுவர் குழுவில் டாக்டர் நம்பி நாராயணன் இடம்பெற்றது போட்டியில் பங்கேற்ற மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை நேரில் சந்தித்து, தங்களது திட்டங்களை விளக்குவதில் பெருமிதம் அடைவதாகவும், தங்களது புத்தாக்கங்களுக்கு அவர் வழங்கும் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.இந்தப் போட்டியில் தேர்வாகும் சிறந்த 5 அணிகள் இன்று இரவு அறிவிக்கப்பட உள்ளன. அவர்களுக்கான இறுதி தரவரிசை மற்றும் பரிசு வெற்றியாளர்கள் நாளை (ஜூலை 4) நடைபெறும் ஜி.டி. நாயுடு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அறிவிக்கப்படவுள்ளனர். அந்த விழாவில் திரைப்படத்தின் நாயகன் நடிகர் ஆர். மாதவன் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத் தொகையை வழங்க உள்ளார்.