புதுடெல்லி,
இளம் வயதில் பல சாதனைகளை படைத்துள்ள சுப்மன் கில் இன்று தனது 27-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனான சுப்மன் கில் இன்று தனது 27-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
1999-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி பஞ்சாபின் பசில்கா மாவட்டத்தில் பிறந்த கில், 2018-ம் ஆண்டு இந்தியா சாம்பியன் பட்டம் வென்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் ‘தொடர் நாயகன்’ விருதை வென்று கவனம் பெற்றார். அதன்பின்னர் இந்திய அணியின் முக்கிய பேட்டர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
தொடக்க ஆட்டக்காரரான கில், ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 2,000 மற்றும் 2,500 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த மிக இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
2019-ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான கில், 2023-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 149 பந்துகளில் 208 ரன்கள் விளாசி, ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
2023 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியபோது, கில் 350-க்கும் அதிகமான ரன்களை எடுத்தார். 2025 சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் அவர் இடம் பெற்றிருந்தார்.
ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து, 2025-ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக கில் நியமிக்கப்பட்டார்.
கேப்டனாக பொறுப்பேற்ற முதல் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கில் சிறப்பாக செயல்பட்டார். 4 சதங்கள் மற்றும் அதிகபட்சமாக 269 ரன்கள் உட்பட மொத்தம் 754 ரன்களை 75.40 சராசரியுடன் குவித்தார்.
அந்த தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. மேலும், ஒரு டெஸ்ட் தொடரில் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில், ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனின் 810 ரன்களுக்கு அடுத்தபடியாக கில்லின் 754 ரன்கள் 2-வது இடத்தில் உள்ளன.
கடந்த மாதம் இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கில் தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது.
ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா விலகியதைத் தொடர்ந்து 2024-ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக கில் பொறுப்பேற்றார்.
அடுத்த சீசனில் அந்த அணியை பிளே-ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற கில், அந்த சீசனில் 650 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் 4-வது இடத்தைப் பிடித்தார்.
2026 சீசனில் மேலும் சிறப்பாக விளையாடிய அவர், 732 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் 2-வது இடத்தைப் பிடித்தார்.
இதுவரை அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் சிறப்பான சாதனைகளை படைத்துள்ள கில், இந்திய அணியின் முன்னணி பேட்டர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.
டெஸ்ட்: 43 போட்டிகளில் 11 சதங்கள், 9 அரைசதங்கள் உட்பட 3,043 ரன்கள்.
ஒருநாள்: 67 போட்டிகளில் 9 சதங்கள், 20 அரைசதங்கள் உட்பட 3,379 ரன்கள்.
டி20: 36 போட்டிகளில் ஒரு சதம் உட்பட 869 ரன்கள்.