சென்னை,
பிரியாணி, புலாவ், மசாலா குருமா உள்ளிட்ட சைவ, அசைவ உணவுகள் தயாரிப்பில் ஜாதிபத்திரி அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஜாதிபத்திரி என்பது ஜாதிக்காய் பழத்தின் கொட்டையை மூடியிருக்கும் சிவப்பு நிறப் படலம் ஆகும்.
கடந்த ஜனவரி மாதம் ஒரு கிலோ ஜாதிபத்திரி பூ ரூ.3,050-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது அதன் விலை ரூ.3,200 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், ஜாதிக்காயின் விலை ஒரு கிலோ ரூ.460-ல் இருந்து ரூ.480 ஆக உயர்ந்துள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் ஜாதிபத்திரி பூ, ஒரு கிலோ ரூ.2,300 முதல் ரூ.2,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஜாதிபத்திரி அறுவடை சீசன் ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை இருக்கும்.
தமிழ்நாட்டில் ஜாதிபத்திரி பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 25 டன் ஜாதிபத்திரியும், 120 டன் ஜாதிக்காயும் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆனால், இந்த முறை தேவை அதிகமாக இருந்ததால், ஜனவரி மாதமே இருப்பு தீர்ந்துவிட்டது. அதனால் இந்த ஆண்டு ஜாதிபத்திரியின் அதிகபட்ச விலை ரூ.3,200 ஆக பதிவாகியுள்ளது.
இந்த விலை உயர்வு மே மாதம் வரை அப்படியே தொடரும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஜாதிபத்திரி சீசன் தொடங்கி ஜூன் மாதம் வரத்து அதிகரிக்கும் போதுதான் இனி விலை குறைய வாய்ப்பு இருக்கிறது.