அடை - 100 கிராம்
வெல்லம் - 200 கிராம்
தேங்காய் - 1 (பால் எடுக்க)
தேங்காய் - ¼ மூடி (சிறிய பல்லாக வெட்டி எடுக்க)
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
ஏலக்காய் பொடி - ½ ஸ்பூன்
அடையை முதலில் பாத்திரம் ஒன்றில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அடுப்பில் நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வெந்நீரை வடிகட்டிய பிறகு, தண்ணீர் ஊற்றி அடையில் உள்ள வலுவலுப்பு போகும் அளவுக்கு அலசவும். அடுத்து சர்க்கரை பாகு தயார் செய்ய வேண்டும். வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். சிறிய கட்டிகள் கரைந்த பிறகு, கொதி வந்ததும் அதை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து வடிகட்டிய வெல்லப் பாகுவை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் வேகவைத்த அடையை போட்டு கொதிக்கவிடவும். அப்போதுதான் அடையின் உள்ளே வெல்லப்பாகு செல்லும். அதன்பிறகு, அத்துடன் தேங்காய் பால் சேர்க்கவும். அதற்காக முழுத் தேங்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சிறிது நீர் ஊற்றி அரைக்கவும். கெட்டி பதத்தில் கொஞ்சம், கிரேவி பதத்தில் ஒரு கப், தண்ணீர் பதத்தில் 2 கப் என மூன்றாக தேங்காய் பாலை பிரித்து எடுத்துக்கொள்ளவும். முதலில், தண்ணீர் பதத்தில் உள்ள தேங்காய் பாலை சேர்க்கவும். சிறிது வெந்தவுடன், தேங்காய் பால் ஓரளவு வத்திவிடும். அடுத்து கிரேவி பதத்தில் உள்ள தேங்காய் பாலை சேர்த்து கொதிக்கவிடவும். கடைசியாக கெட்டியாக உள்ள தேங்காய் பாலை சேர்க்கவும். நன்கு கொதித்த உடன் அடுப்பை 'ஆப்' செய்துவிடவும்.
அடுத்து நெய்யை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். பல் பல்லாக வெட்டிவைத்த தேங்காயை அதில் போட்டு பொன்னிறமாக வதக்கி எடுக்கவும். அதே நெய்யில் முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். இரண்டையும் அடை பாயசத்துடன் சேர்க்கவும். ஏலக்காய் பொடியையும் சேர்த்து கிளறவும். தித்திப்பான, மணமான அடை பாயாசம் ரெடி.