குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் 
சிறப்பு செய்திகள்

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய இந்த நாளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

கையில் புத்தகப் பையோடும், முகத்தில் புன்னகையோடும் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில், வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பல சிறுவர்-சிறுமிகள் வேலைக்குச் சென்று தங்களின் எதிர்காலத்தை இழக்கிறார்கள். இந்த அவல நிலையை மாற்றி, அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்கச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு உருவானதே 'உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்' ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. 2002 ஜூன் 12-ம் தேதி இத்தினத்தை முதன் முதலில் உலக தொழிலாளர் சங்கம் அறிவித்தது.

அவ்வகையில் இன்று (12.6.2026) குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுகரிக்கப்படுகிறது. வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்படும் சிறுவர், சிறுமிகளை மீட்டெடுத்து, குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய இந்த நாளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு உறுதி மொழி ஏற்கப்படுகிறது. சமூக வலைத்தளங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

குழந்தை தொழிலாளர் சட்டம்

குடும்பச் சூழ்நிலை, வறுமை, கல்வியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை மற்றும் பெற்றோர்களின் போதிய விழிப்புணர்வின்மை ஆகியவற்றின் காரணமாகவே பல சிறுவர்கள் மிகச் சிறிய வயதிலேயே வேலைக்கு அனுப்பப்படுகிறார்கள்.

இந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள் சட்டம் கடுமையாகப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி 14 வயதுக்கு உட்பட சிறார்களை வேலையில் அமர்த்தக்கூடாது. இருப்பினும் பல்வேறு தொழில்களில் குழந்தைத் தொழிலாளர்களை காண முடிகிறது.

மத்திய அரசு வேண்டுகோள்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், “குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான இந்த நாளில், குழந்தைகளைச் சுரண்டுவதற்கு எதிராகத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஒன்றிணைந்து நிற்கிறது. அத்துடன் ஒவ்வொரு குழந்தையின் கல்வி, பாதுகாப்பு மற்றும் ஒளிமயமான எதிர்காலத்திற்கான உரிமையைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது.

எந்த இடத்திலாவது குழந்தைத் தொழிலாளர் தொடர்பான ஏதேனும் நிகழ்வை நீங்கள் கண்டால், navjivan.labour.gov.in என்ற இணையதளத்தில் உள்ள 'நவஜீவன்' (Navjivan) போர்ட்டல் வாயிலாக அது குறித்து தகவல் தெரிவிக்கவும். ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்கவும், முன்னேறவும், சிறந்து விளங்கவும் வாய்ப்பு கிடைப்பதை நாம் அனைவரும் இணைந்து உறுதி செய்வோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணமில்லா தொலைபேசி எண்

எந்த இடத்திலாவது குழந்தைகள் வேலை செய்வதைக் கண்டால் உடனடியாக 1098 என்ற கட்டணமில்லா உதவி எண்ணில் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்கலாம்.