இதய நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளவில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ம் தேதி உலக இதய தினம் அனுசரிக்கப்படுகிறது. இது, உலக இதயக் கூட்டமைப்பால் (World Heart Federation) முன்னெடுக்கப்பட்டு, உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரின் ஆதரவைப் பெற்றுள்ள ஒரு விழிப்புணர்வு பிரச்சாரமாகும். இதய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த பிரசாரம் வலியுறுத்துகிறது.
இதய நோய்களைப் பற்றியும் அதை தடுக்கும் முறைகளைப் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கம் ஆகும்.
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ‘உலக இதய தினம்’ இன்று (29.9.2026) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி உலகம் முழுவதும் இதய ஆரோக்கியம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதயம் தொடர்பான பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதற்கு தனிநபர்கள், அரசாங்கங்கள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம்கள் நடத்தப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் உலக இதய தின பிரசாரம் நடைபெறும். இந்த ஆண்டின் கருப்பொருள், ‘இதயத் துடிப்பைத் தவறவிடாதீர்கள்’ என்பதாகும். இதில், நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒரு செய்தி உள்ளது. இதய நோய் எப்போதும் ஒரு அவசர நிலையுடன் திடீரென தொடங்குவதில்லை. இதய நோய்க்கான ஆபத்துக் காரணிகளில் கவனம் செலுத்துவதும், பிரச்சனை ஏற்படும்போது உரிய சிகிச்சை பெறுவதும், நல்ல பலனை தரும். இது மூன்று பகுதிகளை மையமாகக் கொண்டுள்ளது:
1. அறிகுறிகளைக் கவனியுங்கள்: கவனிக்கப்படாமல் போகக்கூடிய அறிகுறிகளையும் எச்சரிக்கைகளையும் கண்டறியவேண்டும்.
2. இதயத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்: இதயப் பிரச்சனைகளுக்கான வாய்ப்பைக் குறைக்க தேவையான பழக்கவழக்கங்களை மேற்கொள்ளவேண்டும்.
3. நடவடிக்கை எடுக்க வலியுறுத்துங்கள்: சுகாதார அமைப்பு மற்றும் கொள்கை அளவில் இதய ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த அழுத்தம் கொடுக்கவேண்டும்.
இதய நோய் என்பது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதயம் மற்றும் ரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்சனைகளை உள்ளடக்கியது. 2022-ஆம் ஆண்டில், இதய நோயால் 1.98 கோடி பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது. இது, உலகம் முழுவதிலும் பதிவான மொத்த இறப்புகளில் சுமார் 32% ஆகும். பல இதய நோய் அபாயங்கள் அன்றாடப் பழக்கவழக்கங்களுடன் தொடர்புடையவை. உணவு பழக்கம், போதுமான அளவு உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல், புகையிலைப் பெருட்களைப் பயன்படுத்துதல், அதிகப்படியான மது அருந்துதல் மற்றும் அதிக உடல் பருமன் ஆகியவை இதில் அடங்கும். இந்தப் பழக்கவழக்கங்கள் உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்த சர்க்கரை மற்றும் கெட்ட கொழுப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். இது இதய நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
ஆனால், இந்த அபாயங்களில் பலவற்றை சரிசெய்ய முடியும். அதாவது ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் இதய நோயைத் தடுக்கவும், சமாளிக்கவும் ஒரு வழியாகும். ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
'உலக இதய தினம்' என்பது இதய ஆரோக்கியத்தைப் பேணுவவதற்காக வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை அல்ல என்பதை நினைவூட்டுகிறது. உணவுமுறை, உடலியக்கச் செயல்பாடுகள், புகைபிடிக்காமல் இருத்தல், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருத்தல் மற்றும் உடல்நல பரிசோதனைகள் ஆகியவற்றில் செய்யப்படும் சிறிய மற்றும் தொடர்ச்சியான மாற்றங்கள் இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும்.
அதே சமயம், உடல்நலத்தில் ஏதேனும் அசாதாரணமான மாற்றங்கள் அல்லது அறிகுறிகள் தென்பட்டால், சாதாரணமாக கடந்து செல்லாமல், விரைவாக செயல்படுவது மிக முக்கியம். தீவிரமான அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.