உடல் உறுப்பு தானம் என்பது உயிருடன் இருக்கும்போதும் செய்யலாம், அல்லது மரணத்திற்குப் பிறகும் செய்யலாம்.
உடலுறுப்பு தானம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13ம் தேதி சர்வதேச உறுப்பு தான தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் உடல் உறுப்புகள் மற்றும் திசு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமின்றி, உறுப்பு தானம் செய்தவர்களையும் அவர்களது குடும்பத்தினரும் கவுரவிக்கப்படுகிறார்கள். மேலும் மக்கள் நன்கு அறிந்துகொண்டு தானம் செய்வதற்கான உறுதிமொழியை மேற்கொள்ள இந்த நாள் ஊக்குவிக்கிறது.
பொதுவாக உடலுறுப்பு தானம் என்பது உயிருடன் இருக்கும் போது உறுப்புகளை அளிக்கலாம் அல்லது இறந்த பின்னர் உடலுறுப்புகளை தானமாக தரலாம். கண்ணின் விழித்திரை, எலும்பு, எலும்பின் மஜ்ஜை, ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் போன்ற பல்வேறு உறுப்பகளை தானமாக வழங்கலாம். சில மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டோர் தவிர அனைவரும் உறுப்பு தானம் செய்ய முடியும்.
ஆனால் உறுப்பு தானம் செய்பவர், தானம் பெறுவர் என இருவரது உடல்நிலை மற்றும் ரத்தத்தை நன்கு பரிசோதனை செய்து எந்த வித எதிர்மறை தாக்கமும் இருக்காது என்பதை உறுதி செய்தபின்பே இதற்கான நடைமுறை தொடங்கும்.
சட்டப்படி 18 வயதுக்கு குறைவானவர்கள் உறுப்பு தானம் செய்ய முடியாது. பெற்றோர்கள் சம்மதிக்கும் பட்சத்தில், உறுப்பு தானம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
உடல் உறுப்புகள் முற்றிலும் செயலிழக்கும்பட்சத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையே பெரும்பாலும் சிறந்த தேர்வாக உள்ளது. இருப்பினும், மருத்துவ ரீதியாக பொருத்தமான உறுப்பு கிடைத்தால் மட்டுமே அதை வெற்றிகரமாக பொருத்தக்கூடிய அறுவை சிகிச்சை சாத்தியமாகும்.
மரணத்திற்கு பிறகு உடலுறுப்பு தானம் செய்வதற்கு பதிவு செய்திருந்தால், அறுவை சிகிச்சை வாயிலாக உறுப்புகள் அகற்றப்படும். இந்த நடைமுறையானது முழு உடலை சிதைத்து விடாது. மரணத்திற்கு பின் உறுப்பு தானம் செய்வதால், அந்த நபரின் உறுப்புகள் மூலம் எட்டு உயிர்கள் வரை காப்பாற்றலாம். திசு மற்றும் கண் தானங்கள் இன்னும் பலரின் வாழ்க்கையை பிரகாசமாக மாற்றக்கூடும்.
அவ்வகையில் இந்த ஆண்டு இன்று (13.8.2026) உலக உறுப்பு தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உறுப்பு தானம் குறித்த உண்மைகளை அறிந்துகொள்வதுடன், உறுப்பு தானம் செய்வோர் அதற்கு முறையாக பதிவு செய்வது, மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் இதுபற்றி எடுத்துரைத்து சம்மதிக்க வைப்பது போன்ற செயல்முறைகள், உறுப்பு தான இயக்கத்தை வலுப்படுத்த உதவும் என்பதை இந்த ஆண்டின் ‘உலக உறுப்பு தான தினம்’ நினைவூட்டுகிறது.
இந்தியாவைப் பொருத்தவரை உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 18 ஆயிரம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
பலர் முன்வந்து உறுப்பு தானம் செய்ய பதிவு செய்வதை பார்க்க முடிகிறது. இந்தியாவில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பு தானம் மற்றும் திசு தானத்திற்கு பதிவு செய்திருக்கிறார்கள். இது மக்களிடையே ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வை பிரதிபலிப்பதாக உள்ளது.