சிறப்புக் கட்டுரைகள்

சண்டே ஸ்பெஷல்: சுவையான, இனிப்பான பிரெட் அல்வா செய்வது எப்படி..? செய்து பாருங்கள்

இந்த வாரம் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் சுவையான, இனிப்பான பிரெட் அல்வா செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கப்போகிறோம்.

தேவையான பொருட்கள்

பிரெட் துண்டுகள் - 7

நெய் - ½ கப்

முந்திரி பருப்பு - ¼ கப்

பால் - 2 கப்

சர்க்கரை - ½ கப்

செய்முறை

பிரெட் துண்டுகளில் 4 புறமும் காய்ந்த பகுதிகளை வெட்டி அகற்றிக்கொள்ளவும். அதன்பிறகு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

அடுத்து, கியாஸ் அடுப்பை 'ஆன்' செய்து ஒரு வாய் அகன்ற பாத்திரத்தை வைக்கவும். பாத்திரம் சூடானதும் அதில் நெய்யை ஊற்றவும். நெய் உருகியதும் உடைத்த முந்திரி பருப்புகளை சேர்த்து நன்கு வறுக்கவும். முந்திரி பருப்பு பொன் நிறமாக மாறியவுடன் அதை வெளியே எடுத்து ஒரு பாத்திரத்தில் ஆற வைக்கவும். நன்கு ஆறியவுடன் அதில் பாதியை மிக்சி ஜாரில் போட்டு பொடியாக திரித்து வைத்துக்கொள்ளவும்.

தொடர்ந்து, முந்திரி பருப்பை வறுத்த அதே நெய்யில் பிரெட் துண்டுகளை போட்டு வறுக்கவும். பிரெட் துண்டுகள் கரிந்துவிடக்கூடாது. எனவே, அடுப்பில் தீயை குறைத்து வைத்துக்கொள்ளவும். பிரெட் துண்டுகள் பொன் நிறமாக மாறியவுடன், அத்துடன் பால் சேர்க்கவும். பாலில் பிரெட் துண்டுகள் நனையும்படி கலந்துவிடவும். பிரெட் துண்டுகள் நன்கு வெந்தவுடன் பவுடராக்கிய முந்திரி பருப்பு, சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்துவிடவும். பிரெட் துண்டுகள் பாலில் வேகும் வரை கிண்டிக் கொண்டே இருக்கவும். அடி பிடித்துவிடக்கூடாது. நெய் பிரிந்து அல்வா பதத்திற்கு வரும். அப்போது மீதம் இருக்கும் முந்திரி பருப்பை சேர்த்து கிளறிவிடவும். சுவையான, இனிப்பான பிரெட் அல்வா ரெடி.