நீண்டகாலமாக மேனுவல் கியரிலியே ஓட்டிப் பழகியவர்களுக்கு கிளட்ச் இல்லாத ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸுக்கு மாறுவது எளிதான காரியமாக இருக்காது. இது எளிதானது தானே, இரண்டும் வித்தியாசம் கிளட்ச் மட்டும் தானே என்று ஒரு சிலர் நினைக்கக் கூடும். ஆனால், இரண்டுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கின்றன. அதேநேரம், ஆட்டோமெட்டிக்கின் அடிப்படையான சில விஷயங்களுக்கு நம்மை நாமே பழக்கப்படுத்திக் கொண்டால், ஆட்டோமெட்டிக் வாகனங்களை ஓட்டுவது எளிதில் கைகூடும்.
கார்களில் மேனுவல் கியரிலிருந்து ஆட்டோமெட்டிக் கியருக்கு மாறுவதில் பல்வேறு சாதக அம்சங்கள் இருக்கின்றன. ஆனால், மேனுவல் கியரிலேயே ஓட்டிப் பழகியவர்கள், ஆட்டோமெட்டிக்குக்கு மாறுவதற்கு முன்பாக 5 முக்கியமான அம்சங்களைக் கவனிக்க வேண்டும்.
பொதுவாக மேனுவல் கியரில் கார் ஓட்டிப் பழகியவர்களுக்கு இடது கால் எப்போதும் ஆக்டிவாகவே இருக்க வேண்டும். ஆனால், ஆட்டோமெட்டிக்கில் கிளட்ச் என்ற ஒரு அம்சமே இருக்காது என்பதால் இடது காலை எப்போதும் அசைக்காமல் வைத்திருக்கப் பழக வேண்டும் என்பது மிக முக்கியமானது. டிரைவிங்கின் போது பிரேக்குக்கு ஒரே ஒரு முறை கூட இடது காலைப் பயன்படுத்திவிடக் கூடாது. அப்படிப் பயன்படுத்தினால், சடன் பிரேக்காக மாறி எதிர்பாரா சம்பவங்கள் நிகழக் கூடும். இது காரில் உடன் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்புக்கு உகந்ததல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இதனால், ஃபுட் ரெஸ்டில் உங்கள் இடது காலை அப்படியே வைத்துவிட்டு, பிரேக் மற்றும் ஆக்ஸிலேட்டருக்கு வலது காலை மட்டுமே மாற்றி மாற்றிப் பயன்படுத்துவது சிறந்தது. ஆட்டோமெட்டிக்கில் புதிதாக வண்டி ஓட்டுபவர்களுக்கு ஆரம்பத்தில் இதில் சின்ன சின்ன சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருமுறை இது கைகூடிவிட்டால் ஆட்டோமெட்டிக் டிரைவிங் அனுபவம் சுகமாகும்.
ஆட்டோமெட்டிக் கார்களைப் பொறுத்தவரையில் Creep எனும் ஒரு அம்சம் கொடுக்கப்பட்டிருக்கும். பிரேக்கிலிருந்து காலை எடுக்கத் தொடங்கும்போது மெதுவாக முன்னோக்கியோ, ரிவர்ஸில் இருக்கும் போது பின்னோக்கியோ செல்லத் தொடங்கும். ஆக்ஸிலேட்டரை அழுத்தாமலேயே கார் நகரத் தொடங்கும். மேனுவலில் இருந்து ஆட்டோமெட்டிக்குக்கு மாறியிருப்பவர்களுக்கு ஆரம்பத்தில் இது புதிதாகத் தோன்றலாம்.
ஆட்டோமெட்டிக்கைப் பொறுத்தவரை நீங்கள் இதைக் கட்டுப்படுத்த பிரேக் பெடலைப் பயன்படுத்துங்கள். குறிப்பாக, டிராபிக்கில் நிற்கும்போது பிரேக்கைப் பயன்படுத்த வேண்டியது ஆட்டோமெட்டிக்கில் கட்டாயம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
மேனுவலில் நீங்கள் காரை இயக்கும்போது அடிக்கடி கியரை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால், ஆட்டோமெட்டிக்கில் மொத்த டிரைவிங் அனுபவத்தையும் நான்கு எளிதான பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள்.
P (Park) - காரை முழுமையாக நிறுத்திய பிறகு இந்த ஆப்ஷனைப் பயன்படுத்துங்கள்.
R (Reverse) - பின்னோக்கி செல்வதற்கு
N (Neutral) - நீண்ட நேரம் ஒரு இடத்தில் நிற்பதற்கு அல்லது Towing-ன் போது இதைப் பயன்படுத்துங்கள்.
D (Drive) - வழக்கமான டிரைவிங்கின்போது இதைப் பயன்படுத்த வேண்டும்.
பார்க் அல்லது ரிவர்ஸ் என ஆட்டோமெட்டிகின் நான்கு மோட்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதாவது ஒரு மோடில் இருந்து இன்னொரு மோடுக்கு மாறுவதற்கு முன்னர் பிரேக் பெடலை அழுத்தியபடி மாற்றுவது முக்கியம். இது காரின் எதிர்பாரா அசைவுகளைக் கட்டுப்படுத்தவும், உங்கள் கியர் பாக்ஸைப் பாதுகாக்கவும் உதவிகரமாக இருக்கும்.
ஆட்டோமெட்டிக் கார்கள், மேனுவல் கார்கள் போல் அல்லாமல் ஆக்ஸிலரேஷனில் கொஞ்சம் தாமதம் ஏற்படலாம். மேனுவர் கியர் கார்களில் கியரை மாற்றி ஆக்ஸிலரேஷனை அழுத்தினால் உடனடியாக உங்களுக்கு பிக்-அப் கிடைக்கும். ஆனால், ஆட்டோமெட்டிக் கார்கள் இது உடனடியாக நடக்காது. நெடுஞ்சாலைகளில் ஒரு வண்டியை முந்திச் செல்லும்போது இதை மனதில் வைத்து திட்டமிட்டுக் கொள்வது நல்லது.
அதேபோல், மேனுவல் கார்களை ஸ்டார்ட் செய்யும்போது பேட்டரி சார்ஜ் குறைவாக இருக்கும் போது நாம் காரைத் தள்ளி ஸ்டார்ட் செய்ய முயற்சிப்போம். அது பல நேரங்களில் கைகொடுக்கவும் செய்யும். ஆனால், ஆட்டோமெட்டிக் கார்களில் இந்த முறை உங்களுக்கு கைகொடுக்காது. அதனால், பேட்டரி ஹெல்தை சரியாக பராமரிப்பது மிகவும் அவசியம்.