Image Credits: AI 
சிறப்புக் கட்டுரைகள்

தட்கல் டிக்கெட்: இந்திய ரெயில்வேயில் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது தெரியுமா? சுவாரசிய தகவல்

இந்திய ரெயில்வேயில் ‘தட்கல்’ டிக்கெட் முறை எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது என்பது பலருக்கும் தெரியாத தகவலாக உள்ளது.

புதுடெல்லி,

பலருக்கும் தெரியாத தகவல்

ரெயிலில் திடீரென பயணம் மேற்கொள்ள வேண்டிய பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பது ‘தட்கல்’ டிக்கெட். இந்த வசதி இந்திய ரெயில்வேயில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது என்பது பலருக்கும் தெரியாத தகவலாக உள்ளது. ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு 60 நாட்களுக்கு முன்பே செய்ய முடியும். இதனால், முன்கூட்டியே திட்டமிடாத பயணங்களுக்கு அதாவது திடீர் பயணங்களுக்கு பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பது தட்கல் டிக்கெட்தான். பயணத்திற்கு ஒருநாளுக்கு முன்பாக தட்கல் முன்பதிவு செய்ய முடியும்.

1997-ல் அறிமுகமான ‘தட்கல்’

இந்த தட்கல் டிக்கெட் முறை இந்திய ரெயில்களில் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது என்ற விவரங்களை பார்க்கலாம். இந்திய ரெயில்வே ‘தட்கல்’ முன்பதிவு திட்டத்தை 1997-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது.

ஆரம்பத்தில் சுமார் 110 ரெயில்களில், குறிப்பாக தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் மட்டுமே இந்தத் திட்டம் நடைமுறையில் இருந்தது. தட்கல் பயணிகளுக்காக தனியாக ஒரு பெட்டியும் இணைக்கப்பட்டதாக ரெயில்வே ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

2004-ல் முக்கிய மாற்றம்

பின்னர், 2004-ம் ஆண்டு தட்கல் திட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டது. இதன் மூலம் தூங்கும் வசதி, குளிர்சாதன வசதி உள்ளிட்ட பல்வேறு வகுப்புகளுக்கும் தட்கல் ஒதுக்கீடு விரிவுபடுத்தப்பட்டது. திடீர் பயணத் தேவைக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி, தற்போது ரெயில் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. தட்கல் டிக்கெட்டுகளுக்கு சாதாரண கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தட்கல் முன்பதிவு எப்போது?

தற்போதைய நடைமுறையின்படி, குளிர்சாதன வகுப்புகளுக்கான தட்கல் முன்பதிவு பயணத்துக்கு முந்தைய நாள் காலை 10 மணிக்கும், குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண ஸ்லீப்பர் வகுப்புகளுக்கான முன்பதிவு காலை 11 மணிக்கும் தொடங்குகிறது.

அதிக தேவை காரணமாக தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்து விடுவது வழக்கம்.