சிறப்புக் கட்டுரைகள்

டெர்ம் இன்சூரன்ஸ்... லைப் இன்சூரன்ஸ்... உங்கள் குடும்பத்திற்கு சரியான தேர்வு எது?

டெர்ம் இன்சூரன்ஸும், லைப் இன்சூரன்ஸும் எப்படி வேறுபடுகிறது.

இன்சூரன்ஸ்

இன்சூரன்ஸ் திட்டங்கள் என்றாலே பலருக்கும் பல சந்தேகங்கள் எழுவது சாதாரணம். எந்த திட்டத்தை தேர்வு செய்வது சரி, எது நமக்கு உண்மையில் பலன் தரும், குறைந்த செலவில் அதிக பாதுகாப்பு எதில் கிடைக்கும், டெர்ம் இன்சூரன்ஸும், லைப் இன்சூரன்ஸும் எப்படி வேறுபடுகிறது போன்ற கேள்விகள் பெரும்பாலானவர்களின் மனதில் சுழன்று கொண்டே இருக்கும்.

குறிப்பாக குடும்ப பொறுப்புகளை சுமக்கும்போது, இந்த குழப்பம் இன்னும் அதிகரிக்கும். ஆனால் இந்த அடிப்படையான விஷயங்களை தெளிவாக புரிந்து கொண்டால் நமக்கும் நம்மை நம்பி வாழ்பவர்களுக்கும் சரியான பாதுகாப்பை அளிக்கும் முடிவை எளிதாக எடுக்க முடியும்.

அடிப்படை

டெர்ம் இன்சூரன்ஸ் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கும் தூய பாதுகாப்புத் திட்டமாகும். இதில் பாலிசி காலத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் குடும்பத்துக்கு நிதி பாதுகாப்பு கிடைக்கும். ஆனால் காலம் முடிந்தும் பாலிசிதாரர் உயிருடன் இருந்தால் எந்தத் தொகையும் கிடைக்காது. இதற்கு மாறாக, லைப் இன்சூரன்ஸ் என்பது பாதுகாப்புடன் சேர்த்து சேமிப்பு அல்லது முதலீட்டையும் உள்ளடக்கிய ஒரு திட்டமாகும். இதில் மரணம் ஏற்பட்டாலும் தொகை கிடைக்கும். அதேபோல் பாலிசி காலம் முடிந்த பிறகும் போனஸுடன் கூடிய முதிர்வுத் தொகை திரும்ப வழங்கப்படும்.

பாலிசி காலம்

டெர்ம் இன்சூரன்ஸ் 10 முதல் 40 ஆண்டுகள் வரை நீங்கள் தேர்வு செய்யும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். ஆனால் லைப் இன்சூரன்ஸ் திட்டங்கள் பொதுவாக வாழ்நாள் முழுவதும் சுமார் 99 அல்லது 100 வயது வரை பாதுகாப்பை வழங்கும் தன்மை கொண்டவை.

முதிர்வுப் பலன்

டெர்ம் இன்சூரன்ஸில் பாலிசி காலம் முடிவில் எந்தப்பணமும் கிடைக்காது. அப்படி கிடைத்தாலும், பெரிய தொகையாக இருக்காது. ஆனால் லைப் இன்சூரன்ஸில் காலம் முடிந்தவுடன் சேமிப்பு மற்றும் போனஸுடன் கூடிய தொகை கிடைப்பதால் அது ஒரு நீண்டகால சேமிப்பு கருவியாகவும் பயன்படுகிறது. அதனால்தான் பலரும் லைப் இன்சூரன்ஸை தேர்ந்தெடுக்கிறார்கள்.

பிரீமியம் தொகை

டெர்ம் இன்சூரன்ஸில் குறைந்த செலவில் அதிக கவரேஜ் பெற முடியும். உதாரணத்திற்கு ரூ.700 மாத தவணையில் கூட ரூ.1.5 கோடி இன்சூரன்ஸ் தொகை, பாதுகாப்பாக கிடைக்கும். இதற்கு மாறாக, லைப் இன்சூரன்ஸில் சேமிப்பு அம்சம் இணைந்திருப்பதால் அதன் பிரீமியம் கட்டணம் பல மடங்கு அதிகமாக இருக்கும், ஆனால் கவரேஜ் அளவு மிக குறைவாக இருக்கும்.

நிதி நோக்கம்

நிதி நோக்கில் பார்க்கும்போது, டெர்ம் இன்சூரன்ஸ் முழுமையாக குடும்பத்தின் வருமான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆம்..! மாதந்தோறும் வெறும் ரூ.700 செலவில், பொருளாதார இழப்பில் இருந்து தப்பிக்கக்கூடிய தொகையை பெறும் வகையில் இந்த இன்சூரன்ஸ் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் லைப் இன்சூரன்ஸ் திட்டங்கள் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால தேவைகளுக்கான சேமிப்பை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றன.

எது சரியான தேர்வு?

ஒரு குடும்பத்தின் முதன்மை வருமானம் ஒரே நபரை மீது சார்ந்திருக்கும் சூழலில், குறைந்த செலவில் அதிக பாதுகாப்பு வழங்கும் டெர்ம் இன்சூரன்ஸ் மிகச் சிறந்த தேர்வாக அமைகிறது. ஏனெனில் எதிர்பாராத சூழ்நிலைகளில் குடும்பம் நிதி சிக்கலில் சிக்காமல் காப்பாற்றப்படுகிறது. அதே நேரத்தில், கட்டாயமாக ஒரு தொகையை சேமிக்க வேண்டும். பாதுகாப்புடன் சேர்த்து ஒரு முதலீட்டு வழியும் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு லைப் இன்சூரன்ஸ் பொருத்தமான தேர்வாக இருக்கும்.

நிபுணர்கள் சொல்லும் ஸ்மார்ட் வழி

பொதுவாக நிதி ஆலோசகர்கள் டெர்ம் இன்சூரன்ஸைதான் பரிந்துரைக்கிறார்கள். ஆம்..! டெர்ம் இன்சூரன்ஸை எடுத்துக் கொண்டு, மீதமுள்ள பணத்தை பி.பி.எப்., மியூச்சுவல் பண்ட் போன்ற தனி முதலீடுகளில் செலுத்துவது அதிக லாபகரமானது என்கிறார்கள். இந்த முறையில் ஒருவர் அதிக பாதுகாப்பையும், அதேசமயம் நல்ல வருமானத்தையும் பெற முடியும் என்பது பல நிபுணர்களின் கருத்து.

காப்பீடு என்பது வெறும் சேமிப்பு கருவி அல்ல; அது ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாக்கும் பாதுகாப்பு கவசம் ஆகும். எனவே, ஒருவர் தனது தேவைகள், பொறுப்புகள் மற்றும் வருமானத்தை கருத்தில் கொண்டு சரியான தேர்வை மேற்கொள்ள வேண்டும்; குறிப்பாக குடும்பத்தின் நீண்டகால நிதி பாதுகாப்பை முன்னிலைப்படுத்தினால், குறைந்த செலவில் அதிக பாதுகாப்பு வழங்கும் டெர்ம் இன்சூரன்ஸ் முக்கியமான இடத்தைப் பெறுகிறது.