மலைகளின் மீது படரும் பனிமூட்டம்... கண்களுக்கு விருந்தளிக்கும் பசுமையான புல்வெளிகள்... மலைச்சரிவுகளில் பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்... இயற்கையின் அழகை ரசிக்க விரும்புபவர்களை வசீகரிக்கும் இடமாக மாறி வருகிறது சொக்கிரமுடி.
கேரள மாநிலம் மூணாறு அருகே அமைந்துள்ள சொக்கிரமுடி, இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதிகளில் ஒன்றாகும். குறிப்பாக பருவமழைக்குப் பிந்தைய காலநிலை, நீலக்குறிஞ்சி பூக்கள் பூப்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துகிறது.
இந்த மலரின் பெயரே அதன் தோற்றத்தைப் பிரதிபலிக்கிறது. "நீலா" என்பது நீல நிறத்தைக் குறிக்கிறது. "குறிஞ்சி" என்பது மலரைக் குறிக்கிறது. நீலமும், ஊதாவும் கலந்த நிறத்தில் பூக்கும் இம்மலர்கள், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் மலரும்போது மலைச்சரிவுகள் முழுவதும் நீலநிறப் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும். குறிப்பாக, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெருமளவில் பூப்பது இதன் தனிச்சிறப்பாகும். தற்போது சொக்கிரமுடி மலைப்பகுதியில் நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்து குலுங்கத் தொடங்கியுள்ளன.
இது தவிர மாட்டுப்பட்டி, கொரண்டக்காடு மற்றும் சின்னக்கனால், லட்சுமி மலைகள் உள்பட மூணாறின் சில பகுதிகளிலும் இந்த பூக்களை காண முடிகிறது. வெளிநாட்டு மலைப்பகுதியில் பிரமிப்பாக காட்சியளிக்கும் மலர்ப்படுக்கையை போன்ற சூழலை நேரில் காணும் வாய்ப்பை இந்த நீலக்குறிச்சி மலர் சீசன் சுற்றுலா பயணிகளுக்கு அளிக்கிறது. அதனால் கேரளா, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கி உள்ளனர். சொக்கிரமுடியில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 24-ந் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலும் நீலக்குறிஞ்சி மலர்கள் இன்னும் அதிகமாக பூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பருவமழைக்கு பிந்தைய காலநிலை பூப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குகிறது. சொக்கிரமு டிக்குச் செல்லும் போது நீலக்குறிஞ்சிப் பூக்களுடன் மலைப்பகுதியின் இயற்கைக் காட்சிகள், பசுமையான புல்வெளிகள், மலைமுகடுகளில் படரும் பனிமூட்டம், சூரிய உதயம் மற்றும் மறையும் காட்சிகளையும் ரசிக்கலாம். அப்பகுதியில் அரிய வரையாடு (நீலகிரி தார்) போன்ற வனவிலங்குகளையும் காண வாய்ப்புள்ளது.
சொக்கிரமுடி நீலக்குறிஞ்சி பூங்காவை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பார்வையிடலாம். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.200, 10 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு ரூ.100, வெளிநாட்டினருக்கு ரூ.400 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கேமராவுக்கு ரூ.50, வீடியோவுக்கு ரூ.100. மூணாறில் இருந்து தேவிகுளம் வழியாக சின்னக்கனால் நோக்கிச் செல்லும் மூணாறு போடிமெட்டு சாலையில் சொக்கிரமுடியை அடையலாம். தேவிகுளம் அருகே வனத்துறையின் நுழைவாயில் அமைந்துள்ளது.
இந்தச் செடிகள் பெரும் பாலும் மரங்கள் இல்லாத புல்வெளிப் பகுதிகளில் வளர்கின்றன. எனவே, இத்தகைய பெரிய புல்வெளிப் பகுதிகளை பாதுகாப்பது இந்த அரிய தாவரங்களைப் பாதுகாப்பதற்கும் மிகவும் முக்கியமானது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, நீலக்குறிஞ்சிப் பூக்களைப் பறிக்கவோ, செடிகளை சேதப்படுத்தவோ கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும்.