மனித உடலுடன் சொர்க்கம் சென்ற தர்மர் (AI Image) 
சிறப்புக் கட்டுரைகள்

பாண்டவர்களின் இறுதிப்பயணம்... மனித உடலுடன் சொர்க்கம் சென்ற தர்மர்

கானகம் நோக்கிய பாண்டவர்களின் இறுதி யாத்திரையில் முதலில் திரவுபதி உயிரிழந்தார்.

மகாபாரதப் போர் முடிந்த பிறகு, பாண்டவர்கள் 36 ஆண்டுகள் ஹஸ்தினாபுரத்தை ஆட்சி செய்தனர். 36-வது ஆண்டில், காந்தாரியின் சாபத்தின்படியும் காலத்தின் கட்டாயத்தினாலும் கிருஷ்ணர் தனது அவதாரத்தை முடித்துக் கொண்டார். யது வம்சமும் தங்களுக்குள் சண்டையிட்டு அழிந்தது.

பாண்டவர்களின் இறுதிப்பயணம் (AI Image)

இறுதிப் பயணம்

கிருஷ்ணர் இந்த உலகைவிட்டு சென்றதை கேள்விப்பட்ட பாண்டவர்கள், பூமியில் தங்களின் கடமை முடிந்துவிட்டதாகக் கருதி அரசாட்சியை அர்ச்சுனனின் பேரனான பரீட்சித்துவிடம் ஒப்படைத்தனர். பின்னர், திரவுபதியுடன் இணைந்து இமயமலை நோக்கி தங்கள் இறுதிப் பயணத்தை (மகாபிரஸ்தானம்) தொடங்கினர்.

பாண்டவர்களின் இந்த இறுதிப் பயணம் மகாபாரதத்தின் 17-வது அத்தியாயமான 'மகாபிரஸ்தானிகா பர்வம்' என்ற பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது.

பாவ புண்ணிய கணக்கு

தர்மர் (யுதிஷ்டிரன்), பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் மற்றும் திரௌபதி ஆகிய 6 பேரும், அனைத்து உலகப் பற்றுகளையும் துறந்து, மரவுரி தரித்து கானகம் சென்றனர். அவர்களுடன் ஒரு நெருக்கமான நாய் ஒன்று அவர்களை பின் தொடர்ந்தது.

அவர்கள் இந்தியாவின் பல பகுதிகளைக் கடந்து, இறுதியில் மோட்சத்தை அடைய இமயமலை நோக்கிச் சென்றனர். அங்கு 'மேரு' மலையை நோக்கி மேலே ஏறத் தொடங்கினர். அப்போது அவர்களின் பாவ புண்ணியக் கணக்கின்படி ஒவ்வொருவராக கீழே விழுந்து உயிரிழந்தனர்.

அடுத்தடுத்து வீழ்ந்த பாண்டவர்கள்

முதலில் திரவுபதி உயிரிழந்தார். பாண்டவர்கள் ஐவருக்கு மனைவியாக இருந்தாலும் அர்ஜுனன் மீது மட்டும் சற்று கூடுதல் அன்பு காட்டியதால் முதலில் வீழ்ந்தார். அதன்பின், சகாதேவன் தனது அறிவின் மீது அதிக கர்வம் கொண்டிருந்ததால் இரண்டாவதாக வீழ்ந்தார். தனது அழகின் மீது அதிக பெருமை கொண்டிருந்ததால் நகுலன் மூன்றாவதாக வீழ்ந்தார்.

எதிரிகளை ஒரே நாளில் அழிப்பேன் என்ற தனது சபதத்தை நிறைவேற்ற முடியாததால் நான்காவதாக வீழ்ந்தார் அர்ஜுனன். அவர்களைத் தொடர்ந்து பீமன், தனது பலத்தின் மீது கர்வம் மற்றும் அளவுக்கு அதிகமாக உணவு உண்டதால் வீழ்ந்தார்.

சொர்க்கம் சென்ற தர்மர்

ஆனால் தர்மர் மட்டும் தனது மனித உடலுடன் சொர்க்கம் சென்றார். அதாவது, தன் சகோதரர்களும், மனைவியும் வீழ்ந்த நிலையிலும் தர்மர் (யுதிஷ்டிரன்) தன் தர்மநெறி தவறாமல் தொடர்ந்து நடந்தார். இறுதியில், அவரை பின்தொடர்ந்த நாயுடன் மலையின் உச்சியை அடைந்தார்.

அங்கு இந்திரன் தனது தேருடன் வந்து தர்மரை வரவேற்று, அவருக்காக சொர்க்கம் காத்திருப்பதாகவும், அவருடன் வந்த நாயை விட்டுவிட்டு தேரில் ஏறுமாறு கூறி அழைத்தார். ஆனால், தர்மரோ தன்னை நம்பி வந்த நாயை கைவிட மறுத்துவிட்டார். உடனே அந்த நாய், எமதர்ம ராஜனாக (தர்ம தேவன்) உருமாறியது. தர்மரின் நேர்மையைப் பாராட்டினார் எமதர்ம ராஜன். அதன்பின், தர்மர் தனது மனித உடலுடன் இந்திரனுடன் தேரில் ஏறி சொர்க்கத்திற்கு சென்றார்.

SCROLL FOR NEXT