இங்கிலாந்து,
இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டனும், ஜெர்மனியின் பேயர்ன் முனிச் கிளப்பின் நட்சத்திர வீரருமான ஹாரி கேன், 2026-ஆம் ஆண்டுக்கான பலோன் டி'ஓர் விருதை வென்று சாதனை படைத்துள்ளார். சிறுவயதில் கால்பந்து அகாடமியால் நிராகரிக்கப்பட்ட அவர், தனது கடின உழைப்பால் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.
ஹாரி கேனுக்கு வெறும் 8 வயதாக இருந்தபோது, உடல் பருமனாக இருப்பதாகக் கூறி ஆர்சனல் கால்பந்து அகாடமியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். எதிர்காலத்தில் சிறந்த தொழில்முறை கால்பந்து வீரராகத் திகழ்வதற்குத் தேவையான உடல்திறன் அவரிடம் இல்லை என்று அப்போது கருதப்பட்டது.
ஆனால், அந்த நிராகரிப்பு அவரது கனவுகளுக்கு முற்றுப்புள்ளியாக அமையவில்லை. மாறாக, தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற உறுதியை அவருக்குள் விதைத்தது.
டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியில் நிரந்தர இடத்தைப் பிடிப்பதற்கு முன்பு, லெய்டன் ஓரியண்ட், மில்வால், நார்விச் சிட்டி, லெய்செஸ்டர் சிட்டி ஆகிய அணிகளுக்கு கடனடிப்படையில் அனுப்பப்பட்டார். பின்னர் டோட்டன்ஹாம் அணியின் முன்னணி வீரராக உயர்ந்தார்.
அந்த அணிக்காக 280 கோல்களை அடித்த கேன், டோட்டன்ஹாம் கிளப்பின் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இங்கிலாந்து தேசிய அணிக்காகவும் அதிக கோல்கள் அடித்த வீரராக திகழ்கிறார்.
2023-ஆம் ஆண்டு பேயர்ன் முனிச் அணியில் இணைந்த கேன், ஜெர்மனியிலும் தனது கோல் வேட்டையைத் தொடர்ந்தார். 2024-25 பருவத்தில் அந்த அணி ஜெர்மனி லீக் பட்டத்தை வென்றது. இதன் மூலம் தனது முதல் பெரிய அணி கோப்பையை கேன் கைப்பற்றினார்.
2025-26 கால்பந்து பருவத்தில் கிளப் மற்றும் தேசிய அணிக்காக மொத்தம் 73 கோல்களை அடித்த ஹாரி கேன், தற்போது 2026-ஆம் ஆண்டுக்கான பலோன் டி'ஓர் விருதை வென்றுள்ளார். இதன் மூலம் 2001-ஆம் ஆண்டில் மைக்கேல் ஓவன் வென்றதற்கு பிறகு, இந்த விருதை பெறும் முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் உயரிய தனிநபர் விருதுகளில் ஒன்றாகப் பலோன் டி'ஓர் கருதப்படுகிறது. இந்த விருது கேனுக்கு கிடைத்திருப்பது அவரது கால்பந்து வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
தோல்விகள், விமர்சனங்கள், தாமதமான வெற்றிகள் என பல தடைகள் இருந்தாலும், தனது இலக்கை நோக்கித் தொடர்ந்து பயணித்தால் சாதிக்க முடியும் என்பதை ஹாரி கேனின் வாழ்க்கைப் பயணம் எடுத்துரைக்கிறது.