எம்.எஸ்.விஸ்வநாதன் 
சிறப்புக் கட்டுரைகள்

இசை உலகின் இமயம்...!-எம்.எஸ்.விஸ்வநாதன்

நாளை (ஜூன் 24-ந் தேதி) எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்ததினம்

காலத்தால் அழிக்கமுடியாத பல பாடல்களுக்கு இசை அமைத்த எம்.எஸ். விஸ்வநாதன் இசை உலகின் இமயமாக போற்றப்படுபவர். இவரது சொந்த ஊர் பாலக்காடு. பெற்றோர் சுப்பிரமணி நாயர். -நாராயணி. மனிதன் தவமிருந்தால் மனிதக் குழந்தைதான் பிறக்கும்.

இறைவன் தவமிருந்தால் தெய்வக்குழந்தை அவதரிக்கும். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. தெய்வக் குழந்தை. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, மெல்லிசை அமுதை அள்ளிஅள்ளி வாரி வழங்கினார். இசை உலகின் இமயமான எம்.எஸ்.விஸ்வநாதன் 950 படங்களுக்கு மேல் இசையமைத்து உள்ளார். அன்பேவா, இருமலர்கள், ஊட்டிவரைஉறவு, குடியிருந்த கோவில், தவப்புதல்வன் உள்ளிட்ட படங்கள் அவர் இசையமைத்ததில் குறிப்பிடத்தக்கவை.

1987-ம் ஆண்டு முதல் தொடங்கி 2012-ம் வரை 25 ஆண்டுகள், அவர் அருகில் இருந்து பலபாடல்களை எழுதி இருக்கிறேன். அவரது இசைப் பயணத்தில், நிறைய விஷயங்களை என்னிடம் சொல்லி இருக்கிறார். கோயம்புத்தூரில் இசையமைப்பாளர் சுப்பையா நாயுடுவிடம் சிறுவனாகப் பணிபுரிந்து அவரது ஆதரவால் ஆர்மோனியம் வாசிப்பாளராகவும், இசை அமைப்பாளராகவும் மாறினார். இந்திப்பட இசையமைப்பாளர் நெவுசாத்தை தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டார். கோயம்புத்தூரில் அந்தக் காலத்தில், ஊருக்கு வெளியில் உள்ள டூரிங் டாக்கீசில் தான் இந்திப் படத்தை வெளியிடுவார்களாம். நெவுசாத் இசையமைத்த படமாக இருந்தால், சிறுவனாக இருந்த எம்.எஸ்.வி., இரண்டு மூன்று முறை படம் பார்ப்பார். நெவுசாத் பாடலைகேட்பதற்காகவே, இரவுக்காட்சியில் டூரிங் டாக்கீசுக்கு வெளியே ஒரு பாலத்தில் உட்கார்ந்து இரவு 1.30 மணி வரை பாடல்களை கேட்டு ரசித்து விட்டு, நடந்தே ஜுபிடர் ஸ்டூடியோவிற்கு சென்று இருக்கிறார்.

ஒரு முறை பாலத்தில் அமர்ந்து பாடல்களை கேட்டுக்கொண்டிருந்த போது ஒரு கார்அவரை கடந்து சென்று இருக்கிறது. சென்ற கார் பின்னோக்கி வந்து இருக்கிறது. காரில் நடிகை டி.ஆர். ராஜகுமாரி இருந்து இருக்கிறார். அவரை பார்த்த எம்.எஸ்.வி. பாலத்தில் இருந்து இறங்கி, வணக்கம்சொல்லி இருக்கிறார். டேய் தம்பி நீ சுப்பையா அண்ணன் கிட்ட வேலைபாக்குற பையன்தானே. இந்த நேரத்திலே இங்க என்ன பண்ற என்று ராஜகுமாரியம்மா கேட்க, எம்.எஸ்.வி விஷயத்தைச்சொல்லி இருக்கிறார். ஓங்கிட்ட கிராமபோன் பெட்டி இல்லையா என்று அவர் கேட்க, இவர் இல்லீங்கம்மா என்று கூறி இருக்கிறார். உடனே தன் பையில் இருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்துக்கொடுத்து இருக்கிறார். நாளைக்கே நீ ஒரு கிராம போன் பெட்டி வாங்கிக்க என்று சொன்னதோடு, சரி கார்ல ஏறு உன்னை ஸ்டூடியோவில விட்டுட்டுப் போறேன் என்று எம்.எஸ்.வியை அழைத்துச் சென்று இருக்கிறார் 1942, 43களில் நூறு ரூபாயின் மதிப்பு எவ்வளவு என்று நாம் யூகித்துக் கொள்ளவேண்டியதுதான்.

எழுதிக் கொடுத்த பாடல், பல்லவி, சரணங்களுக்கு இருபது நிமிடத்தில் மெட்டுப் போட்டு விடுவார்.எம்.எஸ்.விஸ்வநாதன். எங்கிருந்துதான் அவருக்கு மெட்டு வருமோ? ஒரே வியப்பாக இருக்கும். ஆர்மோனியப் பெட்டியை வாசிக்க ஆரம்பித்து விட்டால் டீ, காபி, சாப்பாடு அனைத்தையும் மறந்து விடுவார். கவிஞர் கண்ணதாசன் சொந்தமாக மாலையிட்ட மங்கை படத்தை ஆரம்பித்தார். எம்.எஸ்.வி தான் இசை. கவிஞர், எம்.எஸ்.வியைப் பார்த்து இங்க பாருங்க விசு, இந்தப் படத்திலே பத்துப்பாடல்கள், நீங்க மெட்டுப் போட்டு என்னைப் படுத்தி எடுக்கக் கூடாது. நான் எழுதித் தர பத்துப்பாட்டுக்கும் நீங்க மெட்டுப்போடணும் என்று சொல்ல, அதற்கு எம்.எஸ்.வி நீங்கப்பாட்டுக்களை குடுங்க, அதற்கு நான் மெட்டுப் போட்டுத் தர்றேன் என்று சம்மதம் சொல்லி இருக்கிறார். மெல்லிசை மன்னர் இசையில் பத்துப்பாடலும் முத்துப் பாடலாக அமைந்திருக்கின்றன. அறுபது ஆண்டுகள் தாண்டியும், டி.ஆர் மகாலிங்கம் பாடிய அவள்செந்தமிழ்த் தேன் மொழியாள் என்ற பாடல், இன்றும் இளமையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது. கண்ணதாசனுடன் எம்.எஸ்.வி. இணைந்து 1960-ல் இருந்து 1980 வரை இருவரும் சேர்ந்து அற்புதமான பொற்காலப் பாடல்களை தருகிறார்கள்.

நாளடைவில் இருவரது நட்பும் வெறும் குரல் நட்பாக இல்லாமல் குறள் நட்பாகமாறுகிறது. ஊட்டி வரை உறவு என்ற படத்தில் தேடினேன் வந்தது என்ற பாடல். வேறொரு மெட்டில் எம்.எஸ்.வி. ரெக்கார்டிங் பண்ணி இருக்கிறார். அந்த மெட்டு அனைவருக்கும் பிடித்திருந்தும், இயக்குனர் ஸ்ரீதருக்கு பிடிக்கவில்லை. அவர், தியேட்டரை விட்டு வெளியில் வந்து நகத்தை கடித்துக்கொண்டு ஓரமாய் நின்று இருக்கிறார். எம்.எஸ்.வி அவரைத் தேடி வந்து வாங்க ஸ்ரீ தியேட்டருக்குள்ளே என்று சொல்ல, இங்க பாருங்க விசு, உங்க எல்லாருக்கும் பிடிச்சிருந்தாலும் எனக்கு அது பிடிக்கல என்று சற்று வெறுப்போடு சொல்லி இருக்கிறார். ஸ்ரீ இப்போது கவிஞரை (கண்ணதாசன்) எங்கே தேடுகிறது. சரி உள்ள வாங்க வார்த்தைகளை மாத்தாம வேற போட்டுக் காட்டுறேன் என்று பியானோமுன்னால் அமர்ந்து வேற டியூன் போட்டுக் காட்டி இருக்கிறார். ஸ்ரீதர் அந்த டியூனைக் கேட்டு, சூப்பர்... சூப்பர் என்று கூறி பாராட்டினார். அந்த இரண்டாவது மெட்டுத்தான் ஊட்டி வரைஉறவு படத்தில் வரும் தேடினேன் வந்தது என்ற பாடல்.

ஒரு முறை எம்.எஸ்.வி.யும், கவிஞரும் பாடல் கம்போசிங்கில் இருந்து இருக்கிறார்கள். வழக்கம்போல் கவிஞருக்கு சூப் வந்திருக்கிறது. ஆர்மோனியப் பெட்டியை வாசித்துக் கொண்டிருந்த எம்.எஸ்.வி கவிஞரே எனக்கு கொஞ்சம் சூப் குடுங்க என்று கேட்டிருக்கிறார். கவிஞர் தான் குடிக்காமலேயே சூப்பை எம்.எஸ்.விசுவநாதனிடம் கொடுத்து இருக்கிறார். எம்.எஸ்.வி ஏதோ நினைவில் ஒருவாய் குடித்து விட்டார். சுவை ஒரு மாதிரியாக இருந்திருக்கிறது. இது என்னசூப் கவிஞரே என்று அவர் கேட்க, இது நண்டு சூப்புடா என்று கவிஞர் பதில் சொல்லி இருக்கிறார். அடப்பாவி கவிஞா, அடுத்த வாரம் நான் மலைக்குப் போறேன் இப்படி பண்ணிட்டியே என்று வாயைக்கொப்பளித்து துப்பிவிட்டு, சரணம் அய்யப்பா என்று ஆர்மோனிய பெட்டிமுன் அமர்ந்திருக்கிறார். கடந்த அறுபது ஆண்டுகளாக எம்.எஸ்.வி.யின் மெல்லிசை பாடல்கள் பஞ்சப்பூதங்களிலும், நமது ஐம்புலன்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

- கவிஞர் காமகோடியன்