சிறப்புக் கட்டுரைகள்

ஜென்-சி தலைமுறையின் புதிய நட்பு கலாசாரம்

இணையத்தில் மட்டுமே பழகும் நண்பர்கள் அல்லது ஏஐ-யை சமூகத் துணையாகப் பயன்படுத்துவோரிடம் தனிமை உணர்வு அறிகுறிகள் அதிகமாகக் காணப்படுகின்றன என ஆய்வு சுட்டிக்காட்டி உள்ளது.

ஆய்வில் சராசரி மதிப்பீட்டின்படி 33 சதவீத இளைஞர்கள் ஏஐ-யை நட்பு துணையாக பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களின் வாழ்க்கை முறையை மட்டுமின்றி, உறவுகளையும் மாற்றி வருகிறது. ஒருகாலத்தில் நண்பர்களைத் தேடி வெளியே சென்ற இளைஞர்கள், இப்போது ஸ்மார்ட்போன் வழியாகவே தங்களுக்கான நட்பை உருவாக்கிக் கொள்கின்றனர்.

சமூகத் துணை

அந்த மாற்றத்தின் அடுத்தக்கட்டமாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தையே நண்பனாகவும், மனம் விட்டுப் பேசும் துணையாகவும் இளைஞர்கள் கருதத் தொடங்கியுள்ளனர்.உலக அளவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று இந்தப் போக்கை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. அமெரிக்காவின் இரு அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வில், 15 முதல் 22 வயதுடைய இளைஞர்களில் குறிப்பிடத்தக்க அளவினர் ஏஐயின் நண்பராகவும், சமூகத் துணையாகவும் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

புதுவித நட்பு

16 நாடுகளைச் சேர்ந்த பல இளைஞர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், நாடுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட சராசரி மதிப்பீட்டின்படி 33 சதவீத இளைஞர்கள் ஏஐ-யை நட்பு துணையாக பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. தினமும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இளைஞர்களிடையே இந்த அளவு 50 சதவீதமாக அதிகரிக்கிறது. இணையத்தில் மட்டுமே பழகும் நண்பர்களைக் கொண்ட இளைஞர்களில் 42 சதவீதம் பேர் ஏஐ-யையும் நட்புக்காகப் பயன்படுத்துகின்றனர்.

இளைஞர்களின் விருப்பம் ஏன்?

இன்றைய ஏஐ செயலிகள் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிப்பதுடன், பயனாளர்களுடன் உரையாடவும் செய்கின்றன. பயனாளர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு பதிலளிப்பது போன்ற வசதிகளும் அவற்றில் உள்ளன.

ஒரு இளைஞர் தனது மனக்கவலைகளைப் பகிரும்போது. ஏஐ உடனடியாகப் பதிலளிக்கிறது. நண்பர்களைப் போல நேரம் ஒதுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எப்போது வேண்டுமா னாலும் உரையாடலாம். சில நேரங்களில் மற்றவர்களிடம் பகிரத் தயங்கும் தனிப்பட்ட விஷயங்களையும் ஏஐ-யிடம் பேசுின்றனர்.

இதனால் தனிமையில் இருப்பவர்கள், சமூகத் தொடர்புகளில் சிரமம் உள்ளவர்கள். மன அழுத்தத்தில் இருப்பவர்கள் எனப் பலரும் ஏஐ உரையாடல்களை நாடுகின்றனர்.

உண்மையான நட்பு மாறிவிடுமா?

இந்த ஆய்வில் மற்றொரு முக்கியமான தகவலும் வெளியாகியுள்ளது. ஆய்வில் பங்கேற்ற 15 முதல் 22 வயதுடைய இளைஞர்களில் நாடுகளின் அடிப்படையில் சராசரியாக 93 சதவீதம் பேர் நேரில் சந்தித்துப் பழகும் நெருங்கிய நண்பர்களைக் கொண்டுள்ளனர்.

நேரில் சந்திக்கும் நண்பர்களுடனான உறவுகள் அதிக ஆதரவும், நேர்மறையான உணர்வுகளும் வழங்குவதாக ஆய்வு தெரிவிக்கிறது. அதேசமயம், இணையத்தில் மட்டுமே பழகும் நண்பர்கள் அல்லது ஏஐ-யை சமூகத் துணையாகப் பயன்படுத்துவோரிடம் தனிமை உணர்வுடன் தொடர்புடைய அறிகுறிகள் அதிகமாகக் காணப்படுகின்றன என ஆய்வு சுட்டிக்காட்டி உள்ளது.

எச்சரிக்கை

இந்தியாவில் ஸ்மார்ட்போன், சமூக வலைதளங்கள், சாட் ஜிபிடி உள்ளிட்ட ஏஐ கருவிகளின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆய்வு முக்கியமான விவாதத்தை உருவாக்குகிறது. ஏஐ தொழில்நுட்பத்தை கல்வி, வேலைவாய்ப்பு. புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது போன்ற ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்குப் பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், மனிதர்களுடனான உறவுகளை முற்றிலும் புறக்கணித்து ஏஐ உரையாடல்களையே நம்பியிருப்பது ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்காது.

எதிர்காலத்தில் ஏஐ நண்பர்கள், மெய்நிகர் துணைகள், உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் டிஜிட்டல் உதவியாளர்கள் எனப் பல புதிய தொழில்நுட்பங்கள் உருவாகலாம். ஆனால் மனி தர்களின் அன்பு, அக்கறை, நேரடி உரையாடல், உணர்வுப்பூர்வமான ஆதரவு ஆகியவற்றை முழுமையாகப் பிரதிபலிப்பது ஏஐ-க்கு சாத்தியமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

தனிமைப்படுத்திவிடக்கூடாது

இளைஞர்கள் தொழில்நுட்பத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை. மாறாக, அதனைச் சரியான முறையில் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏஐ ஒரு நல்ல தகவல் உதவியாளராக வும் கற்றல் துணையாகவும் இருக்கலாம். ஆனால் உண்மையான நட்பையும், குடும்ப உறவு களையும், சமூகத் தொடர்புகளையும் அது முழுமையாக மாற்றிவிடக்கூடாது.

மனிதர்களை இணைக்க உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம், மனிதர்களிடமிருந்து அவர்களைத் தனிமைப்படுத்திவிடக் கூடாது என்பதே இந்த ஆய்வு சொல்லும் முக்கியமான பாடமாகும்.

SCROLL FOR NEXT