கடலில் வாழும் பறவைகளிலேயே மிகவும் வித்தியாசமான, அதிசயமான பறவை பிரிகேட் பறவை. இதற்கு 'கடல் கொள்ளையன்' என்றும் பெயர் உண்டு. காரணம், இது தானே மீன் பிடிக்காமல், மற்ற பறவைகளிடம் இருந்து உணவை திருடும் குணம் கொண்டது.
இந்த பறவை கருப்பு நிறத்தில் இருக்கும். இறக்கையின் நீளம் மட்டும் 2.3 மீட்டர் (7.5 அடி) வரை இருக்கும். ஆனால் எடையோ வெறும் 1 முதல் 1.8 கிலோ தான். பறவை உலகிலேயே உடல் எடைக்கும் இறக்கை பரப்புக்கும் இடையே அதிக விகிதம் கொண்ட பறவை இதுதான். நீண்ட, ஆழமாக பிளவுபட்ட வால் இதன் அடையாளங்கள்.
ஆண் பறவை முழு கருப்பு, அதன் கழுத்தில் பளீர் சிவப்பு நிற பலூன் போன்ற பை இருக்கும். பெண் பறவை மார்பில் வெள்ளை புள்ளி கொண்டிருக்கும். பெண் பறவை ஆணை விட பெரியது.
இந்த பறவையால் நீரில் இறங்க முடியாது. காரணம் இதன் இறகுகள் நீர் புகாத தன்மை கொண்டவை அல்ல. நீரில் விழுந்தால் பறக்க முடியாமல் இறந்துவிடும். அதனால் தான் வாழ்நாளின் பெரும்பகுதியை வானத்திலேயே கழிக்கிறது. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பின்படி, இந்த பறவை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு மேல், இரவு-பகலாக தரையில் இறங்காமல், தூங்கிக்கொண்டே கூட பறக்கும் திறன் கொண்டது! காற்றின் அலையில் மிதந்து கொண்டே பறக்கும்.
இனப்பெருக்க காலத்தில் ஆண் பறவை தன் சிவப்பு கழுத்து பையை பெரிய பலூன் போல ஊதி பெண்ணை கவரும். அப்போது சத்தமும் எழுப்பும். ஒரு வருடத்துக்கு ஒரு முட்டை மட்டுமே இடும். குஞ்சை வளர்க்க 8 முதல் 10 மாதம் ஆகும். அதனால் இரண்டு வருடத்துக்கு ஒரு முறை தான் இனப்பெருக்கம் செய்யும்.
இது மீன், கணவாய் மீன்களை பிடிக்கும். ஆனால் பெரும்பாலும் மற்ற கடல் பறவைகளை துரத்தி, அவை பிடித்த மீனை வாந்தி எடுக்க வைத்து, கீழே விழும் முன் காற்றிலேயே பிடித்து தின்றுவிடும். இதனால் தான் கொள்ளையன் என்று பெயர்.